சுடச்சுட

  
  mn11


  அழகான மாடலுக்குரிய தகுதிகள் அனைத்தும் இருந்தாலும், கிரிக்கெட்டையே தன் உயிர் போல் கருதி வரும் மிதாலி ராஜ் (இந்திய மகளிர் ஒரு நாள் அணியின் கேப்டன்)  200 ஒரு நாள் (50 ஓவர்) ஆட்டங்களில் ஆடிய முதல் வீராங்கனை உள்பட பல்வேறு சாதனைகளை சத்தமின்றி படைத்துள்ளார். மிதாலி ஒட்டுமொத்தமாக  கிரிக்கெட் வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் 463, சனத் ஜெயசூர்யா 445, ஜாவீத் மியான்டட் 233 ஆகியோருக்கு அடுத்து 200 ஒரு நாள் ஆட்டங்களில் ஆடிய முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்து நான்காவது இடத்தில்  உள்ளார். 

  ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 3.12.1982-இல் பிறந்தவர் மிதாலி. அவரது தந்தை துரைராஜ், இந்திய விமானப்படையில் பணிபுரிந்தவர். தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த மிதாலியின் தாயார் லீலா ராஜ். 

  பரத நாட்டிய கலைஞராக வேண்டும் என்ற ஆவலில் அதில் கவனம் செலுத்திய மிதாலி 10 வயதுக்கு பின்னர்  கிரிக்கெட்டில் ஆர்வமுடன் விளையாடத் தொடங்கி, 17-ஆவது வயதில் இந்திய மகளிர் அணியில் இடம் பெற்று விட்டார். அவ்வப்போது தனது சகோதரனுடன் இணைந்து ஆடவருடன் கிரிக்கெட் ஆடுவதை வழக்கமாக கொண்டிருந்தார் அவர்.

  தற்போது ஹைதராபாத்தில் வசித்து வரும் மிதாலி, கடந்த 1999 ஜூன் 26-இல் அயர்லாந்துக்கு எதிராக மில்டன் கெயின்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒரு நாள் ஆட்டத்தில் முதன்முறையாக பங்கேற்றார் .

  அப்போது அவருக்கு 17- வயது தான் ஆகியிருந்தது.  அதில் 114 ரன்களை விளாசினார்.  அதுமுதல் இந்திய அணி இதுவரை 213 ஒரு நாள் ஆட்டங்களில் ஆடியுள்ளது. அவற்றில் 13-இல் மட்டுமே மிதாலி ஆடவில்லை. 

  6622 ரன்கள் குவித்து சாதனை ஒரு நாள் ஆட்டங்களில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை  என்ற சாதனையும் அவர் வசம் உள்ளது 6622 ரன்கள்.  மிதாலி கடந்த 19 ஆண்டுகள், 219 நாள்களாக  கிரிக்கெட்  ஆடி வருகிறார் மேலும் 123 ஒரு நாள் ஆட்டங்களில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளார்.

  சார்லோட்  எட்வர்ட்ஸ் 191 ஒரு நாள் ஆட்டங்கள் விளையாடியதே சாதனையாக இருந்தது.  அதை தனது 192-ஆவது ஆட்டத்தில் தகர்த்தார் மிதாலி ராஜ்.

  தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த 2001-02 -இல் லக்னெளவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். 2002-இல் டான்டனில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்டில் 214 ரன்களை குவித்து சாதனை படைத்திருந்தார்.

  2 முறை உலகக் கோப்பையில் இரண்டாம் இடம்:

  2005-இல் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை இறுதிச் சுற்றுக்கு வழிநடத்திச் சென்றார். அதில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது இந்தியா. 2013-ஆம் உலகக் கோப்பையில் மிதாலி ராஜ் நம்பர் ஒன் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.

  தொடர்ந்து 2017-இல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இரண்டாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு அணியை தகுதி பெறச் செய்தார். 
  மகளிர் கிரிக்கெட்டின் டெண்டுல்கர் என்ற செல்லப் பெயர் மிதாலிக்கு உண்டு. இந்திய மகளிர் அணியின் பேட்டிங் ஆலோசகராகவும் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு உண்டு. இவரது திறமைக்கு அங்கீகாரமாக அர்ஜுன விருது, பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அழகு மங்கையாக விளங்கும் மிதாலி, மாடல் போலவும் செயல்பட்டுள்ளார்.

  மிதாலி ராஜ் வாழ்க்கை குறித்த சிறப்பு படம்:

  மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறு குறித்த சிறப்பு படம் தயாரிக்கப்பட உள்ளது. இதில் நடிக்க பிரியங்கா சோப்ரா பொருத்தமானவர் என ஏற்கெனவே மிதாலி தெரிவித்திருந்தார். 

  தனது சாதனைகள் குறித்து அவர் கூறியதாவது:  ""200 ஒரு நாள் ஆட்டங்களில் ஆடிய நிலையில் தொடர்ந்து நாட்டுக்காக ஆடுவதையே பெருமையாகக் கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை 200 என்பது வெறும் எண் தான். உலகம் முழுவதும் மகளிர் கிரிக்கெட் பல்வேறு வடிவங்களில் உருப்பெற்று வருவதை கண்டுள்ளேன். நாட்டுக்காக நீண்ட காலம் ஆடியது மகிழ்ச்சி தருகிறது. துவக்கத்தில் இந்திய அணிக்காக ஆடுவது மட்டுமே எனது குறிக்கோளாக இருந்தது.

  ஆனால் இவ்வளவு நாள் ஆடுவேன் என நினைத்துப் பார்க்கவில்லை.  மகிழ்ச்சி, உயர்வு தாழ்வு போன்றவற்றை வாழ்க்கையில் சந்தித்துளளேன். நமது அணியில் வேகப்பந்து வீச்சுடன் கூடிய ஆல்ரவுண்டர் தேவை'' 
  என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai