என் பிருந்தாவனம்! - பாரததேவி

பட்டணத்தில் பிறந்து வளர்ந்த கெüசிகா, கிராமத்தில் பிறந்த தங்கராசுவை மணக்கிறாள். மருமகளாக அடியெடுத்து வைத்த கெüசிகாவுக்கு கிராமத்துச் சூழல் பிடிக்கவில்லை. ஆடு, மாடுகள் வளர்ப்பை எதிர்க்கிறாள்.
என் பிருந்தாவனம்! - பாரததேவி

சென்ற வாரம்...

பட்டணத்தில் பிறந்து வளர்ந்த கெüசிகா, கிராமத்தில் பிறந்த தங்கராசுவை மணக்கிறாள். மருமகளாக அடியெடுத்து வைத்த கெüசிகாவுக்கு கிராமத்துச் சூழல் பிடிக்கவில்லை. ஆடு, மாடுகள் வளர்ப்பை எதிர்க்கிறாள்.

அதிகாலையில் சேவல் கூவுவதைக் கேட்டு அலறுகிறாள்.  இனி...

தூக்க கலக்கத்தில்  தங்கராசுவிற்கு  எரிச்சலாயிருந்தது.  அதோடு  ஒரு விவசாயி குடும்பத்தில்  காடுகள்,  கரைகள்  என்று  இருந்தாலும் இப்படி கூரை நிறைய கோழிகளும், தொழு நிறைய ஆடுகளும்,  மாடுகளும்  இருப்பதுதான் அவர்களுக்கு  ஓர்  அடையாளமும்,   செல்வாக்காகவும்  இருந்தது.

பட்டணத்திலிருந்து வந்த இவளுக்கு இதெல்லாம் எங்கே தெரியப் போகிறது? ஒரு சேவல் கூவலுக்கே இவள் இப்படி கோபமும், எரிச்சலும் அடைகிறாளே இவள் எப்படி வீட்டு ஓரத்திலேயே கூரை சார்பில்  கட்டியிருக்கும் ஆடு மாடுகளைப் பொறுத்துக் கொள்வாள்?

தங்கராசு இப்படி சிந்தித்துக் கொண்டு இருக்கும்போதே  மீண்டும்  இவர்கள் கூரையிலிருந்த  சேவல்  காதை அறைகிறார் போல் கொக்கரக்கோ  என்று கூவ...

""அய்யோ  என் தலயே  வெடிச்சிடும் போலிருக்கே.. என்ன இப்படி மரமாட்டும் நின்னுக்கிட்டு  இருக்கீக?  இப்ப நீங்க போவாட்டி  நானுபோயிருவேன்'' என்று கட்டிலிலிருந்து  எழுந்து நிற்க..

தங்கராசு  அவளை அமைதிப்படுத்திவிட்டு  தானே எழுந்துபோனான்.

வாசல் கதவைத் திறந்த உடனே சில்லென்று குளிர்காற்று இவன் மீது பாய்ந்தது. தெரு ஆட்கள்  எல்லாரும்  சாணி தெளித்திருந்த  வாசலில் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். பகலில் வேலை செய்த  அலுப்பில் ஒவ்வொருவரும்  தங்களுக்கான சாக்கு, பழைய சீலையின் விரிப்பை விட்டுவிலகியிருந்தார்கள். அமாவாசைக்கான வானத்தில் ஒன்றிரண்டு நட்சத்திரங்களோடு  விடியற்கால இருட்டை  சுமந்திருந்தது. 

இவன்  கூரையில் அடைந்திருந்த சேவலைப் பார்த்தான்.  கோழிகள் எல்லாம் அடக்கமாய் படுத்திருக்க சேவல்கள் மட்டும் இன்னும் கூவுவதற்கு தயாராகயிருந்தன.

இதற்குள் பக்கத்து வீட்டு கூரையிலிருந்த  சேவல் ஒன்று  நீளமாய் கூவி அடங்கியது. தங்கராசு தன் கூரையில் அடங்கியிருந்த இரண்டு சேவல்களையும் கைக்கொன்றாகப் பிடித்து  தெருவில்  எறிந்தான்.  அவை கொக்கரித்துக் கொண்டே  இருட்டுக்குள்ளே திசை தெரியாமல் ஓடியது.

அதென்னவோ தெரியவில்லை மனிதர்கள் மட்டும்தான்  விடியும்வரை தூங்குகிறார்கள். இந்தப் பறவைகளுக்கு மட்டும் உறக்கமே வராது போலிருக்கிறது. வீட்டுக் கூரையிலும்,  மரங்களிலும்,  வேலிகளிலும் எங்கே அடைந்திருந்தாலும்  சரி இருட்டு  கலையுமுன்பே  அதன், அதன் பாஷைகளில் கிறீச்சிட்டவாறு  விடியுமுன்பே  பறந்து விடுகின்றன.

கௌசிகா  அவன் மீது  பாய்ந்த கோபத்தில்  அவனுக்குப் பக்கத்துவீட்டு சேவலையும் பிடித்து எரிய வேண்டுமென்ற கோபம்தான் கொந்தளித்தது. ஆனால்,  அப்படி அவைகளைப் பிடித்து எரிந்தால்  அவன் வீட்டுக்கும்,  பக்கத்து வீட்டுக்குமான சண்டை  விடியுமுன்னே  ஆரம்பமாகிவிடும்  பிறகுநாள் முழுக்க ஓயாது என்று நினைத்துக் கொண்டே  தங்கராசு   கதவை  அடைத்து விட்டு தன் படுக்கைக்குத் திரும்பிய போது கௌசிகா  நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.

பளிச்சென்று  நன்றாக விடிந்து  சூரியனின் மஞ்சள்  வெயில் கூட நிலங்களிலும்,  மேட்டிலும், மரங்களின் இலைகளிலும்  படரத் தொடங்கிய நேரம். கௌசிகா அப்போதுதான்  கண்விழித்தாள்.  கண் விழித்ததுமே  தன் கணவனைத் தேடினாள்.  அவனைக் காணவில்லை.  அவளுக்கு கோபமாயிருந்தது.

"இந்நேரத்துக்கே  எழுந்து என்ன செய்யப் போறாராம்.  இன்னும் கொஞ்ச நேரம்  படுத்திருக்கலாமில்ல?' என்று எண்ணியவளுக்கு இப்போது எழுந்திரிக்க மனசே இல்லை. அவளின்  தாய்வீட்டில்  விடிந்து ரொம்ப நேரம் வரை தூங்கியே சுகப்பட்டு  போனவள். அதுவும்  விடியற்கால  தூக்கமென்றால் அவளுக்கு ரொம்பப்பிடிக்கும். புல் பவரில் பேனை  ஓடவிட்டு மொடக்கிப்படுத்தவாறு சமுக்காளத்தை எடுத்து  மூடிக் கொண்டு  அவள் அம்மா காபி கொண்டு  வந்து கொடுக்கும்  வரை தூங்கினால் அதுவே  தனி சுகம்.

கௌசிகாவிற்கு படுக்கையிலிருந்து எழுந்ததும்  மோவாய் கூட கொப்பளிக்காமல்  காப்பி குடித்து விட வேண்டும். இல்லாவிட்டால்  அவளுக்கு தலைவலி  வந்துவிடும்.  அவளையும், அவள்  தங்கை பானுவையும் அப்படியே பழக்கியிருந்தாள் அவள் அம்மா.

இங்கே புருஷன் வீட்டிலோ  அவளை  ஏன் என்று கேட்க  ஒரு நாதியில்லை. முதல்நாளே புருஷனிடம்  தன் வெறுப்பு,  விருப்பங்களை  கூறியிருந்தாள் அதோடுதான் எழுந்ததுமே காப்பி குடிக்கும் விஷயத்தையும்  அழுத்தமாய் கூறியிருந்தாள். அப்படி   சொல்லியிருந்தும்  கூட இப்போது  அவள் தனியாக அம்போ என்று  விடப்பட்டிருந்தாள்.

கௌசிகாவிற்கு கோபமும், அவமானமும் தாங்கமுடியவில்லை. தான் மூடியிருந்த  சமுக்காளத்தை  எடுத்துபட்டென்று  உதறிவிட்டு நாலே  எட்டில் வெளியே வந்தாள். 

வாசலோரமிருந்த ஆட்டுக்கல்லில் தங்கராசு பருத்தி விதையை ஆட்டிக் கொண்டிருப்பதைக் கண்டவளுக்கு  ஆத்திரமாய் வந்தது.

""தங்கம், தங்கம்''  என்று கொஞ்சம்  சின்ன சத்தமாக  கூப்பிட்டாள்.  ஆனால், அவள் கூப்பிட்டது  அவனுக்கு கேட்கவே இல்லை.  அவன்  பாட்டிற்கு  தன் வேலையிலேயே  கவனமாயிருந்தான்.  கௌசிகாவிற்குப் பொறுக்கவில்லை. தன் வீட்டில்  எவ்வளவு  செல்வமாக  வளர்ந்தவள்.  இங்கே  தன்னை ஏனென்று கேட்பார்க் கூட இல்லை என்று  நினைத்தவள் இன்னும் கொஞ்சம் ஆத்திரத்தோடு ""தங்கராசு''  என்றாள் சத்தமாக..

இவள் சத்தமாய்  கூப்பிட்டதும்  திடுக்கிட்டுப் போன தங்கராசு தான் ஆட்டுவதை  நிறுத்திவிட்டு வேகமாய்   இவளிடம் ஓடி வந்தான்.  

சுற்றும், முற்றும்  பார்த்துக் கொண்டே  கிசு, கிசுப்பான குரலில்  ""இந்தாபாரு கௌசி  நம்ம தனியா இருக்கும்போது மட்டும் நீ தங்கமின்னு  கூப்பிட்டுக்கோ. ஆனா,  இப்படி  வீட்டுக்கு வெளியே  வந்து என் பேரைச் சொல்லி கூப்பிடாத. யாருக்கும் நீ கூப்பிட்டது கேட்டுச்சின்னா அம்புட்டுத்தேன். இந்தக் குடும்பத்துக்குள்ள  ஒரு பெரிய  வில்லங்கமே வந்துச் சேரும்''. 

""பிறகு உன்னை  எப்படி  கூப்பிடுறதாம்?'' என்று கௌசிகா  கேட்டதும், தங்கராசுவிற்கு  சுருக்கென்றது.  

அவன் இது நாள் வரையிலும்  தாலிகட்டிய  புருஷனை  யாரும் வா, போ, நீ என்று கூப்பிட்டு  பார்த்ததில்லை. இதுவரையில்  கேள்விப்பட்டதுமில்லை. தான் கட்டிக் கொண்டு வந்தவள்  தான் இப்படி  புதிதாக  கூப்பிடுகிறாள். அவள் அப்படி கூப்பிடும்போதெல்லாம்  அவனுக்கு  தன் ஆண்மைக்கு பங்கம் வந்தாற்போல  தோன்றியது. 

"இவளை   என்ன செய்யலாம்? எப்படி திருத்தலாம்?' என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது ""உன்ன எப்படி  கூப்பிடுறதுன்னு  கேட்டேன்''  என்று மீண்டும்  அழுத்தமாய் கேட்டாள் கௌசிகா.

""எங்க ஊருல  எல்லாரும்  புருஷன மாமன், மச்சான்னுதேன் கூப்பிடுவாங்க''.

""எனக்கு அப்படியெல்லாம்  கூப்பிட வராது.  வேண்ணா அத்தான்னு கூப்பிடட்டுமா?''  என்று அவள் கேட்க, பிறந்ததிலிருந்து  கிராமத்து வளையத்துக்குள்ளேயே  இருந்த  தங்கராசுவுக்கு  "அத்தான்'  என்ற வார்த்தை எப்படியோ  இருந்தது.

""அத்தானும்  வேண்டாம், பொத்தானும் வேண்டாம்  நீ என்னை வாங்க, போங்கன்னே கூப்பிடு''  என்றான்.

""சரி முயற்சி பண்றேன். இப்ப நான் உன்னை எதுக்கு தேடி வந்தேன் தெரியுமா?''

 ""சொல்லு..''

""எனக்கு எந்திரிச்சதுமே  காப்பி குடிச்சாவணும்.  இல்லாட்டி  தல வலி வந்துரும்.  எங்க வீட்டுல,  எங்க அம்மா காப்பி கையோடதான் எங்கள எழுப்புவாங்க''.

""இங்க காப்பியெல்லாம்  கிடையாது.  காலயில  எந்திரிச்சதும்  அவங்கவங்க அவக வேலயப் பாக்கப் போயிருவாங்க. அம்மா இப்பத்தேன்  மோரு  கடஞ்சி வச்சிருக்கா,  போயி ஒரு  கிளாசு  மோந்து குடி.  சூட்டுக்கு  ரொம்ப நல்லது'' என்று அவன்  சொல்லி முடிக்கும் முன்பே,  

""மோரெல்லாம்  எனக்கு வேண்டாம். இப்ப எனக்கு உடனே  காப்பி வேணும்  நீ போட்டு எடுத்துட்டு வா. நானு நம்ம ரூம்ல  இருக்கேன்'' என்று  சொல்லிக் கொண்டே  கௌசிகா  நடக்க...

அப்போது தான் தங்கராசுவிற்கு "ஆகா அம்மா  எம்புட்டோ  எடுத்துச் சொன்னா அவபேச்ச  கேக்காம  தப்பு செய்து விட்டோ'மென்று தோன்றியது.

 - தொடரும்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com