கலைக்கு மொழி தடையில்லை!

வட நாட்டில் ஹோலிப் பண்டிகை,  தீபாவளி பண்டிகை, ரக்ஷா பந்தன்,   நவராத்திரி ஆகியவை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.  
கலைக்கு மொழி தடையில்லை!

வட நாட்டில் ஹோலிப் பண்டிகை,  தீபாவளி பண்டிகை, ரக்ஷா பந்தன், நவராத்திரி ஆகியவை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால்,  அன்றைக்கு வடமாநில நகரம் ஒன்றில் தமிழக பாரம்பரிய கிராமிய இசையான நையாண்டி மேள சப்தமும், நாட்டுப்புறப் பெண்களின் குலவையிடும் குரலோசையும் பனி சூழ்ந்த காலை வேளை காற்றில் கீதமாக கலந்து வந்து கொண்டிருந்தது.

ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் தலைநகரான சண்டீகரில்தான் அந்தக் குலவை சப்தம்.  தேசத்தின் மொழி ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில்,  பல மாநில மொழி பேசும் ஆண்களும், பெண்களும் அங்கே ஒரு சேரக் கூடியிருக்க, பெண்கள்  பானையில் பொங்கலிட்டுக் கொண்டிருந்தனர். ஆம்,  தேசத்தின் ஒற்றுமையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த மகாகவி பாரதியாரின் பெயரில் சண்டீகர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பாரதி பவனில் நடைபெற்ற பொங்கல் விழாவில்தான் இந்தச் சிறப்பு அரங்கேறியது.

வேற்றுமையில் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் விதமாக பஞ்சாபி, தமிழ் , கேரளம் , கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழி பேசுவோர் அந்த விழாவில் மகிழ்வுடன் கூடியிருந்ததைக் காணமுடிந்தது.

சண்டீகர் தமிழ்ச் சங்கம் நடத்திய பொங்கல் விழாவானது,  உறவுகளைப் பிரிந்து, மாநிலத்தின் எல்லையைத் தாண்டி வேறு மொழி பேசும் சக நாட்டு மக்களுடன் ஒன்றிணைந்து கொண்டாடும் நிகழ்வாக அமைந்திருந்தது.

அதுமட்டுமா,  அந்த நிகழ்வுக்கு சிறப்புச் சேர்ப்பதாக தமிழ் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் அமைந்திருந்தன.கலைக்கு மொழி ஒரு தடையில்லை என்பதை எடுத்துரைக்கும் விதத்தில் பரத நாட்டிய நிகழ்வில் பங்கேற்ற சிறிய குழந்தைகள்  பார்வையாளர்களைக் கவரும் வகையில் அற்புதமாக நடனமிட்டு அசத்தினர். தென்னகப் பண்பாட்டு மையத்தின் சார்பில் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள்   நாட்டுப்புறக் கலைகளை வடநாட்டினர் வியந்து பாராட்டும் வகையில் மேடைகளில் அரங்கேற்றி மகிழ்வித்தனர்.

தமிழ், மலையாளம், பஞ்சாபி என பல்வேறு மொழிகளைப் பேசும் பெற்றோர்களின் குழந்தைகள் அங்கே மேடையில் பரத நாட்டியமாடி பார்வையாளர்களை மிகவும் கவர்வதாக அமைந்திருந்தது. இது தொடர்பாக பரத நாட்டிய நிகழ்ச்சியை நடத்திய சண்டீகரைச் சேர்ந்த ரஞ்சனி சேஷாத்ரி அளித்த பேட்டி:

""எனது பூர்வீகம் சென்னை;  பிறந்தது, வளர்ந்தது எல்லாம் ஹைதராபாதில்தான்.  பத்து வயதிலேயே பரதநாட்டியம் கற்றுக் கொள்ளத் துவங்கினேன். தற்போது இருபத்தைந்து ஆண்டுகளாகப் பரத நாட்டியம் பயின்றும்,  மற்றவர்களுக்குப் பயிற்றுவித்தும் வருகிறேன். என்னுடைய கணவர் வரதராஜன் சண்டீகர் அருகே உள்ள இந்தியக்  கல்வி, அறிவியல் ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார்.  எனது நாட்டிய குரு ராஜேஸ்வரி சாய்நாத்.  சண்டீகரில்  கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.

எனது கணவருடன் பணியாற்றும் ஒடிஸா,  கேரளம், தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம்  என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சக ஊழியர்களின் குழந்தைகளுக்கு கேஷுவலாக பரதம் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். தற்போது,  நல்ல ஆதரவும், வரவேற்பும் கிடைத்து வருகிறது. குழந்தைகள் ஆர்வத்துடன் பரதம் கற்று வருகின்றனர். 

வட இந்தியாவில் மேற்கத்திய நடனம், பாங்கரா நடனம் ஆகியவை பிரபலம். ஆனால்,  அவற்றைவிட  பரதம் கற்பதில் இந்தக் குழந்தைகள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். பரதநாட்டியம் கற்பதில் இந்தக் குழந்தைகளுக்கு மொழி ஒரு தடையாக இல்லை. இதை  எனது அனுபவத்தில் உணர்கிறேன்.  என்னிடம் தற்போது 6 முதல் 10 வயது வரை உள்ள 25 குழந்தைகள்  பரதம் பயின்று வருகின்றனர்.  இந்தக் குழந்தைகள் பொங்கல் விழாவில் கணபதி வந்தனம், தைப்பொங்கலை மையப்படுத்திய கும்மிப்பாட்டு ஆகியவற்றில் பங்கேற்றனர்.  இக்குழந்தைகள் மேடை ஏறுவதற்கு சண்டீகர் தமிழ்ச் சங்கம் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. இதுபோன்று பிற அமைப்புகளும், சபாக்களும் குழந்தைகள் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஆதரவு அளித்தால்  ஊக்குவிப்பாக இருக்கும்.

சண்டீகர் தமிழ்ச் சங்கத்தைப் பொருத்தமட்டில் இதுபோன்ற கலை நிகழ்ச்சியை நடத்துவதற்கு மிகுந்த ஆதரவும், ஊக்கமும் அளித்து வருகின்றனர். ஏற்கெனவே நவராத்திரி விழாவில் நிகழ்ச்சி நடத்த ஆதரவளித்தனர்.  நாங்களும் இது போன்ற பிற  அமைப்புகளை அணுகத் திட்டமிட்டுள்ளோம். தற்போது  நடனப் பள்ளியை நடத்தினாலும்,  பெயருடன் கூடிய அமைப்பாக இல்லை.  விரைவில் இதற்கான அமைப்பைத் தொடங்கி பரதநாட்டியத்தை சண்டீகர் மட்டுமல்லாமல், அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளேன்.

குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிக்க வேலையைத் துறந்தேன். தற்போது இதுபோன்ற கலைப் பணியை மேற்கொள்வதன் மூலம் ஆத்ம திருப்தி கிடைக்கிறது.  பரதத்தை கற்றுக் கொடுக்கும் போதும் குழந்தைகள்

அதை ஆர்வத்துடன் பயிலும் போதும் மனசுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது''  என்று முகம் மலரக் கூறுகிறார் ரஞ்சனி சேஷாத்திரி.  

படம்:  டி.ராமகிருஷ்ணன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com