சமையல்! சமையல்!

பசலைக் கீரை  உடல் சூட்டை  தணிக்கும்,  சிறுநீர்  தொற்று அகற்றும். இதில் சூப்  வைத்தும் அருந்தலாம்.
சமையல்! சமையல்!


தரை பசலை துவையல்

தேவையானவை:
தரை பசலைக் கீரை  - 1 கிண்ணம்
உளுந்து  தோலுடன்  - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்  -  5
புளி  -   நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய்  - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 துண்டு
தாளிக்க :
கடுகு, உளுந்து, சீரகம் -   1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:   கீரையை   ஆய்ந்து நன்கு சுத்தம் செய்து  கொண்டு, வாணலியில் எண்ணெய்விட்டு  உளுந்து, மிளகாய், பெருங்காயம்  சேர்த்து வறுத்து வைத்துக் கொண்டு  பின்பு பசலைக்கீரையைச்  சேர்த்து நன்கு வதக்கி  எடுத்து உப்பு, புளி, சேர்த்து அனைத்தையும்  அரைத்து  எடுத்து  தாளித்து  கொள்ள வேண்டும். சுவையான  சத்தான தரை  பசலைக்கீரை   துவையல்  ரெடி.

குறிப்பு:  பசலைக் கீரை  உடல் சூட்டை  தணிக்கும்,  சிறுநீர்  தொற்று அகற்றும். இதில் சூப்  வைத்தும் அருந்தலாம்.


வேளைக்கீரை குழம்பு 

தேவையானவை :
வேளைக்கீரை  - 1 கைப்பிடி  அளவு
சின்ன வெங்காயம்  -  1 கைப்பிடி அளவு
பூண்டு -  10 பல்
தக்காளி  -  1
புளி -  நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள்  - 1 சிட்டிகை 
மிளகாய் வற்றல்  - 1 தேக்கரண்டி
தனியாத் தூள்  -  2 தேக்கரண்டி
நல்லெண்ணெய்  -   3 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு, சீரகம்,  உளுந்து,  பெருங்காயம் -  1தேக்கரண்டி

செய்முறை:  கீரையை  ஆய்ந்து  சுத்தம்  செய்து பொடியாக  நறுக்கிக் கொள்ளவும். வாணலியில்  எண்ணெய்விட்டு  தாளிக்க  கொடுத்துள்ளவற்றை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக தாளித்து கொண்டு, வெங்காயம், பூண்டு, தக்காளி  சேர்த்து நன்கு வதக்கவும்.  பின்பு  கீரையை  சேர்த்து  வதக்கவும். கீரை வதங்கியதும்  உப்பு,  மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கி தேவையான அளவு புளித் தண்ணீர்விட்டு  நன்கு கொதி வந்ததும் இறக்கவும்.

சுவையான  சத்து மிகுந்த வேளைக்கீரை குழம்பு ரெடி.
குறிப்பு:  வாயுத் தொல்லை நீக்கும்  தன்மையுடையது இந்த குழம்பு. 


ராகி  ஸ்வீட்

தேவையானவை:
கேழ்வரகு  மாவு -  கால் கிலோ
வெல்லம்  - அரை கிலோ
முந்திரி பருப்பு -  10
தேங்காய்ப்பால்  - அரை டம்ளர்
நெய் - 2 தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
எண்ணெய்  - தேவைக்கேற்ப

செய்முறை:  முந்திரி பருப்பை  பொடியாக்கி  சிறிது  நெய்யில் வறுத்தெடுக்கவும். வெல்லத்துடன்  போதிய  அளவு தண்ணீர் சேர்த்து  பாகு காய்ச்சவும். பாகு கம்பி பதம் வந்ததும்,  இறக்கி  வைக்கவும்.  ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை இட்டு தேங்காய்ப் பால்,  முந்திரி பருப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து, நன்கு கலந்து கொள்ளவும். இத்துடன்  பாகை ஊற்றி மீதமுள்ள நெய்யும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, நடுத்தர வட்டமாக தட்டி, கொதிக்கும் எண்ணெய்யில்  இட்டு  பொன்னிறமாக  வேக வைத்து எடுக்கவும்.  ராகி ஸ்வீட் தயார். சுவையும்  சத்துமுள்ள ஸ்வீட்  இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி தின்பர்.


வரகு புளியோதரை

தேவையானவை:
வரகு அரிசி -  கால் கிலோ
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
புளி கரைசல் - 2 மேஜைக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்  - 2 சிட்டிகை
மிளகாய் வற்றல் - 5
மஞ்சள் தூள் - சிறிதளவு
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:  வரகு அரிசியுடன்  போதிய அளவு தண்ணீர்  சேர்த்து நன்கு உதிரியாக வடித்து  எடுத்து வைக்கவும். கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், மிளகாய் வற்றல் இவைகளை  வெறும் வாணலியில் வறுத்து, ஆறினதும்  மிக்சியிலிட்டு பொடித்துக் கொள்ளவும்.  புளி கரைசலுடன் சிறிது நீர் சேர்த்து  கொதிக்க வைத்து அத்துடன் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வைத்துக் கொள்ளவும்.  உதிரியான  வரகு அரிசி  சாதத்துடன்,  தாளித்த புளி கரைசல், வறுத்துப் பொடித்த கலவை,  நல்லெண்ணெய், பெருங்காயத்தூள், உப்பு இவைகளை  சேர்த்து,  நன்கு கிளறி கொடுக்கவும்.  பின்னர்,  மிதமான தீயில்  இரண்டு நிமிடம்  சூடாக்கி  இறக்கவும்.  வரகு புளியோதரை தயார். சுவையான  மணமான  புளியோதரை  இது. தாதுப் பொருட்கள்  அடங்கிய வரகு அரிசி,  உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.


கொள்ளு துவையல்

தேவையானவை:
கொள்ளு  - 150 கிராம்
தேங்காய்த் துருவல்  -  அரை கிண்ணம்
வெள்ளைப் பூண்டு  -  1
மிளகாய் வற்றல்  - 4
மிளகு  - கால் தேக்கரண்டி
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை  - சிறிது
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு -  தேவைக்கேற்ப

செய்முறை:  வாணலியில்  எண்ணெய் விட்டு  கடுகு, கறிவேப்பிலை,  கொள்ளு இவைகளைப்  போட்டு வறுக்கவும்.  கமகம என மணம் வரும் வரை,  கருகாமல் வறுத்துக் கொள்ளவும்.  நன்கு ஆறினதும், தேங்காய்த் துருவல், வெள்ளைப் பூண்டு, மிளகாய் வற்றல், மிளகு, உப்பு  இவைகளைச் சேர்த்து, தண்ணீர் தெளித்து  மிக்ஸியில்  நைசாக  அரைத்துக் கொள்ளவும்.  கொள்ளுத் துவையல் தயார். சாதத்தில் சேர்த்து, சிறிது நல்லெண்ணெய்  விட்டு சாப்பிட்டால்,  சூப்பர் சுவையாக இருக்கும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com