Enable Javscript for better performance
பார்க்கின்சன் நோய்: பெண் மருத்துவரின் சவால்!- Dinamani

சுடச்சுட

  

  பார்க்கின்சன் நோய்: பெண் மருத்துவரின் சவால்!

  By DIN  |   Published on : 21st February 2019 10:31 AM  |   அ+அ அ-   |    |  

  alzheimers-and-parkinsons

  தாத்தாவும், பாட்டியும் மருத்துவர்கள்; அப்பாவும், அம்மாவும் மருத்துவர்கள்; மூன்றாம் தலைமுறையான சாந்திப் பிரியாவும் அவர் கணவர் சிவாவும் மருத்துவர்கள்; தற்போது இவர்களின் ஒரே மகன் கனிஷ்க்கும் மருத்துவம் இறுதியாண்டு படித்து வருகிறார். இப்படியோர் மருத்துவப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் சாந்திப்பிரியா ஒரு கண் சிகிச்சை நிபுணரும் கூட. இவரது கணவர் உறுப்பினராக இருக்கும் ரோட்டரி சங்கம் மூலம் பல்வேறு இலவச கண் சிகிச்சை முகாம்களை நடத்தியுள்ளார். பார்வையற்றோர் அணியும் வகையில், பிரத்யேகமான "கான்டாக்ட் லென்ஸ்' ஒன்றை இவர் உருவாக்கியுள்ளார். 
  பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அளிக்கும் மருத்துவ சேவையையே தனது உயிர் மூச்சாகக் கொண்ட இவர், கடந்த ஏழாண்டுகளுக்கு முன்னர் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டார். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்காக உட்கொள்ளும் மருந்தை நிறுத்தவே கூடாது என்பது வருத்தத்துக்குரிய மருத்துவ விதி!
  ஆனால், இதற்கெல்லாம் சவால் விடுத்து, புதுப்புது சிகிச்சை முறைகளை தனது ஆராய்ச்சிகள் மூலம் உருவாக்கி வருகிறார் மருத்துவர் சாந்திப்பிரியா. அத்துடன், 50 வயதுக்கு உட்பட்ட திருமதிகளுக்கான அழகிப் போட்டியில் பங்கேற்று இரண்டு முறை முதலிடம் பெற்றார். சிங்கப்பூரில் நடந்த அழகிப் போட்டியில் "எம்பவர்டு விமன் 2018-19' என்ற பட்டத்தை கடந்த அக்டோபரில் பெற்றுள்ளார். 
  பார்க்கின்சன் நோய் என்றால் என்ன? அதை எப்படி அறிவது? பார்க்கின்சன் நோய் எத்தகைய பாதிப்புகளை உருவாக்கும்? இதுகுறித்து அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் என்ன? அதிலிருந்து மீண்டு வந்து சாதனைகள் புரிய சாந்திப்பிரியாவுக்கு எப்படி சாத்தியமானது? என்பது குறித்து விரிவாக அறிய சென்னை அண்ணாநகரில் வசிக்கும் அவரைச் சந்தித்தோம்:
  "பார்க்கின்சன் நோய் என்பது மூளையில் ஏற்படும் ஒருவித நெகிழ்வுத் தன்மையால் உருவாகும் நோய். குத்துச் சண்டை வீரர் முகமது அலிக்கு பார்க்கின்சன் நோய் பாதிப்பு ஏற்பட்ட போது தான், இந்நோய் குறித்து பரவலாக உலக மக்களுக்குத் தெரியவந்தது. மனிதர்களுக்கு இந்நோயின் பாதிப்பு ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் பார்க்கின்சன். அதனால், அவர் பெயரையே இந்நோய்க்குச் சூட்டியுள்ளனர். இந்நோய் மூன்று நிலைகளில் மனிதர்களைத் தாக்குகிறது.

  முதலாவது: 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏற்படுவது, இதற்கு "ஜுவைனல்' என்று பெயர். 
  இரண்டாவது: 20-40 வயதுடையவர்களைத் தாக்குவது, இதற்கு " யங் ஆன்சைட் பார்க்கின்சன்' என்று பெயர். 
  மூன்றாவது: 40 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு வருவது; இதற்கு "பார்க்கின்சன்' என்று பெயர்.
  கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு இந்நோய் உள்ளது என்பதை என் கணவர் சிவா தான் எனக்கு உணர்த்தினார்.
  அப்போது என் வலது கை ஒரு விதமாக வளைந்திருந்தது. வழக்கமான செயல்பாடுகளை எனது கரங்கள் இழந்து விடுமோ என்று அதிர்ச்சியாக இருந்தது. அடுத்த ஒரு நொடியே இந்நோயிலிருந்து மீள வேண்டும் என்பதை ஒரு சவாலாக எடுத்தேன். "இது யங் ஆன் செட் பார்க்கின்சன்! நீ மருத்துவராக இருக்கிறாய்! எனவே, தைரியத்தை இழக்காமல் இதுகுறித்து ஆராய்ச்சி செய்து உடற்பயிற்சியில் ஈடுபட்டால் இதிலிருந்து மீண்டு விடலாம்' என்று என் கணவரும் எனக்கு ஊக்கமளித்தார். 
  பார்க்கின்சன் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறிகள்: கை நடுக்கம் ஏற்படுதல், சிறிதாக கூன் விழுதல், பேச்சு சப்தம் குறைதல், கையெழுத்து சுருங்குதல் போன்றவை மூலம் இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும்!
  எனவே, நான் பாதிக்கப்பட்டதும் முதல் வேலையாக பார்க்கின்சன் நோய் குறித்து எழுதப்பட்ட நூல்களைத் தேடித்தேடி படிக்க ஆரம்பித்தேன். பின்னர், இந்நோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கினேன். தினமும் உடற்பயிற்சி செய்தல், பிளாட்டஸ் என்ற நடனப் பயிற்சி, டைட்ஸி என்ற ஒரு வகைக் கராத்தே பயிற்சி, நியூரோ பாக்ஸிங் பயிற்சி போன்ற பல பயிற்சிகளில் ஈடுபட்டேன்.
  இதன்மூலம் பார்க்கின்சன் நோயின் பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்தேன். இதற்கு என் மன உறுதியும், குடும்பத்தினரின் அக்கறையும், ஒத்துழைப்புமே காரணம். அப்போதுதான் 50 வயதுக்கு உட்பட்டோர் பங்கு பெறும் திருமதிகளுக்கான அழகிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக கேட் வாக், ராம்ப் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டேன். சென்னையில் நடந்த ஆடிஷனில் பங்கேற்ற 22 பேரில் நான் முதலாவதாகத் தேர்வானேன்.
  பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணா இப்படி அருமையாக நடனமாடி அசத்துகிறார் என்று பார்ப்பவர்கள் எல்லாம் வியந்துப் பாராட்டினர். அதேசமயம் இப்போட்டியில் பங்கேற்ற பெண்களில் மருத்துவர் நான் மட்டுமே. இந்தப் பாராட்டு எனக்குப் பெரிய தெம்பைக் கொடுத்தது.
  இதையடுத்து, கடந்த 2018 அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற திருமதிகளுக்கான அழகிப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்ததுடன், "எம்பவர் விமன்' என்ற பட்டத்தையும் அளித்து கெளரவித்தனர். என் பலம் என்ன என்பதை அப்போது தான் உணர்ந்தேன்! 
  இது எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து, பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், நாமே ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கலாம் என்ற எண்ணமும் எனக்குள் எழுந்தது. அதற்காக "Saar Foundation' என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறோம். மேலும், இடைவிடாத ஆராய்ச்சிகளின் மூலம் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த மூன்று வகை தெரபி சிகிச்சை முறைகளை உருவாக்கியிருக்கிறேன்.
  நிலம், காற்று, நீர்-இதுதான் எனது புதிய தெரபியின் "கான்செப்ட்'.
  நிலம்: டைட்ஸி, டான்ஸிங் முறையில் தெரபி அளித்தல்.
  காற்று: பாக்ஸிங், திறந்த வெளி உடற்பயிற்சி மூலம் தெரபி அளித்தல், 
  நீர்: நீருக்குள் நடன அசைவுகள் மூலம் தெரபி அளித்தல்.
  இந்த மூன்று வகை தெரபியை எடுத்துக் கொள்வதன் மூலம் பார்க்கின்சன் நோயின் பாதிப்பு அதிகமாகாமல் தடுக்க முடியும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை! 
  எனது நம்பிக்கைக்குக் காரணம் நானே ஓர் உதாரணம் என்பதைக் கூறவும் வேண்டுமா?'' என்று மலர்ந்த முகத்துடன் புன்னகை பூக்கிறார் மருத்துவர் சாந்திப்பிரியா!
  -என்.எஸ். சுகுமார்


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai