போக்கர் விளையாட்டில் இந்தியப் பெண்!

இன்றைய நவீன யுகத்திலும், ஆண் இனம் மட்டுமே கோலோச்சும் பல துறைகளில் போக்கர் (சீட்டாட்டம்) விளையாட்டும் ஒன்று.
போக்கர் விளையாட்டில் இந்தியப் பெண்!

இன்றைய நவீன யுகத்திலும், ஆண் இனம் மட்டுமே கோலோச்சும் பல துறைகளில் போக்கர் (சீட்டாட்டம்) விளையாட்டும் ஒன்று. ஆனால், அதிலும் பெண் சளைத்தவள் அல்ல என்று நிரூபித்துள்ளார் பாரம்பரிய பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணான முஸ்கான் சேத்தி. இவர், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக போக்கர் விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டு பல விருதுகளைப் பெற்று தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர். கடந்த 2018 -ஆம் ஆண்டில் தேசியளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 100 பெண்களில் இவரும் ஒருவர். போக்கர் விளையாட்டு வீராங்கனை மற்றும் சமூக ஆய்வாளரான முஸ்கான் சேத்தி கூறியதாவது:
 "போக்கர் விளையாட்டினை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் என் அப்பாதான். அப்பா மருத்துவர், என்றாலும் போக்கர் விளையாட்டுப் பிரியர். அவர் ஓய்வு நேரங்களில் இணையத்தில் இந்த விளையாட்டை பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார். அவர் பார்க்கும்போது நானும் அவருடன் சேர்ந்து பார்ப்பேன். அப்போது எனக்கு இந்த விளையாட்டை பற்றி புரிந்து கொள்ளும் வயதில்லை; இருந்தாலும் அப்பா பார்க்கிறார், அதனால் நானும் பார்த்தேன். அந்த வயதில், நான் டி.வியில் கார்ட்டூன் பார்த்ததை விட அப்பாவுடன் போக்கர் பார்த்ததுதான் அதிகம்.
 என்னுடைய 20-ஆவது வயதில்தான் முதன்முதலில் முகநூல் மூலம் போக்கர் விளையாட ஆரம்பித்தேன். ரொம்பவும் இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. அதனால் தொடர்ந்து விளையாடினேன். ஒரு கட்டத்தில், நான் சீட்டாட்டம் விளையாடுவதை கண்டால் அம்மா திட்டுவாங்களோ என்ற பயத்தில், அம்மாவுக்கு தெரியாமல் மறைத்து மறைத்துதான் இணையத்தில் விளையாடுவேன். ஒரு நாள் நான் விளையாடுவதை அம்மா பார்த்துவிட்டார். என்ன சொல்லப் போகிறாரோ என்று பயத்தில் இருந்தபோது, எனக்கு போக்கர் விளையாட்டு மீதிருந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்டு, நான் வெற்றி பெறுவதையும் பார்த்து சந்தோஷப்பட்டார். இந்நிலையில், ஒரு விபத்தில் அம்மா தவறிட, அவரின் இழப்பு என்னை பெரிதும் பாதித்தது. அந்த தனிமை தான் என்னை போக்கர் விளையாட்டில் அதிகளவில் ஈடுபட செய்தது. விளையாட ஆரம்பித்த பிறகு தான் தெரிந்தது எனக்கான தளம் இதுதான் என்று.
 நான் போக்கர் விளையாடுவதை அறிந்த என் உறவினர்கள், தெரிந்தவர்கள் எல்லாம் ""பாரம்பரிய குடும்பத்தில் பிறந்துவிட்டு இந்த போக்கர் விளையாட்டு தேவையா? வேற வேலை எதுவும் உனக்கு கிடைக்கவில்லையா? யாரும் உன்னை கல்யாணம் செய்து கொள்ள மாட்டார்கள்'' என்று பலவிதமான விமர்சனங்களை வைத்தார்கள். ஆனால், அதிலிருந்து நான் பின் வாங்கவில்லை.
 ஒரு கட்டத்தில் எனக்கு திருமணமானது. என்னைப் புரிந்து கொண்ட, என் கணவர் என்னிடம் சொன்னது ஒரே விஷயம்தான், "இது ஒரு விளையாட்டு இதில் வெற்றி, தோல்வி இருக்கும். அது முழுமையாக நம் அதிர்ஷ்டம் சார்ந்தது. அதனால் நீ ஒரு தரமான முழுமையான போக்கர் விளையாட்டு இணையத்தில் இணைந்து விளையாடு'' என்றார்.
 அவர் சொன்னது போல் போக்கர்ஸ்டார்ஸ்.காம் என்ற இணையத்தில் எனக்கான கணக்கினை 2014-ஆம் ஆண்டு தொடங்கினேன். நான் சேர்ந்தபோது, கட்டணம் இல்லாத விளையாட்டிற்கான அழைப்புகள் வந்தது. அதாவது ஜெயிப்பவர்களுக்கு பணம் பரிசாக வழங்கப்படும். மொத்தம் 20 ஆயிரம் போட்டியாளர்கள். அதில் முதல் 20-இல் வருபவர்களுக்கு ஷார்க் கேஜ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பு உண்டு என்றும் அறிவித்து இருந்தனர். போக்கர் விளையாட்டே ஒரு வித போதை என்றாலும் அதன் மூலம் நமக்கு அங்கீகாரம் கிடைக்கும்போது ஆசை தொற்றிக் கொண்டது. அதனால் நான் அந்தப் போட்டியில் பங்கு பெற்றேன். 10-ஆவது நபராக தேர்ச்சி பெற்றேன். அதன்பிறகு, உலகில் எங்கு போக்கருக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றாலும், அதில் பங்கு பெற ஆரம்பித்தேன்.
 அப்படி ஒருமுறை ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு இந்தியாவிற்கு திரும்பியபோது, இங்கும் நிறைய பேர் போக்கர் விளையாட ஆரம்பித்திருந்தனர். அதை பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
 மற்ற விளையாட்டுகளில் வயது, இனம் மற்றும் இதர விஷயங்கள் சார்ந்து இருக்கும். போக்கர் அப்படி இல்லை. இதில் வயது வரம்பு, இனம் எதுவுமே தேவையில்லை. நுணுக்கமாக விளையாட வேண்டும் அவ்வளவுதான்.
 இது ஆன் லைன் விளையாட்டு. நாம் யார்? ஆணா, பெண்ணா என்று எதிரில் விளையாடுபவர்களுக்கு தெரியாது.
 பெரும்பாலும் ஆண்கள் தான் விளையாடுவார்கள். ஒரு முறை நான் என்னுடைய அடையாளத்தை வெளியிட்ட போது, ஒருவர் "பெண்ணாக இருந்து கொண்டு ஏன் இதை விளையாடுகிறாய்? போய் சமையல் அறையில் வேலை செய்' என்று பதிவிட்டிருந்தார். அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விளையாட்டில் மட்டுமே தீவிரமாக கவனம் செலுத்தினேன். வெற்றிகள் என்னைத்தேடி வர தொடங்கியது.
 கடந்த 2018- ஆம் ஆண்டு இறுதியில் திடீரென்று ஜனாதிபதி மாளிகையில் இருந்து அழைப்பு வந்தது. ஆண் ஆதிக்கம் நிறைந்த துறைகளில் நுழைந்து வெற்றிக் கண்டிருக்கும் சிறந்த 100 பெண்களுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் தேசிய விருது வழங்க இருப்பதாகவும் அதற்கு என்னைத் தேர்வு செய்திருப்பதாகவும் சொன்னார்கள். யோசித்துப் பாருங்கள்... போக்கர் விளையாட்டு பற்றி கேள்விப்படாத நாட்டில் அதற்கான தேசிய விருது வழங்கி இதையும் ஒரு விளையாட்டாக அவர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர் என்று நினைக்கும் போது பெருமையாக இருந்தது. ஜனாதிபதி கையால் விருதினை வாங்கிய போது என்னால் அந்த மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை'' என்கிறார் முஸ்கான் சேத்தி.
 - ஸ்ரீதேவி
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com