Enable Javscript for better performance
அனைவரிடத்திலும் அன்பு செலுத்துங்கள்!- Dinamani

சுடச்சுட

  

  அனைவரிடத்திலும் அன்பு செலுத்துங்கள்!

  By DIN  |   Published on : 28th February 2019 11:20 AM  |   அ+அ அ-   |    |  

  MAHIMA_7

  கடந்த ஆண்டு "கைண்ட்னெஸ் வாரம்' என்று பிப்ரவரி 14 முதல் 21 தேதி வரை, ஒருவாரம் அன்பைப் பரப்பும் வாரம் என ஒரு கொண்டாட்டத்தை உருவாக்கினார் சென்னை வாசியான மஹிமா போடார்.
   மஹிமா, அங்கீகரிக்கப்பட்ட எக்ஸ்ப்ரஸிவ் ஆர்ட் தெரபி பயிற்சியாளர் ஆவார். கருணை திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார். குழந்தை வன்முறை தடுப்பில் சிறப்புப் பயிற்சி பெற்றவர், பள்ளிகளில் நடக்கும் வன்முறையைக் கண்டறிவது, தடுப்பது உள்ளிட்டவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார். அன்பையும், தன்னம்பிக்கையையும் உயர்த்துவதன் மூலம் ஒருவர் அனைத்துத் துயரங்களில் இருந்தும் விடுபடுவார் என்பது மஹிமாவின் நம்பிக்கை. இது குறித்து அவர் மேலும் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
   "எக்ஸ்ப்ரஸிவ் ஆர்ட் தெரபி என்பது, ஒருவகையான கவுன்சிலிங். பொதுவாக கவுனிசிலிங் என்பது பேச்சு மூலமாக ஒருவருடைய ஆழ்மனதில் உள்ள அழுத்தங்களை களைவது. ஆனால், எக்ஸ்பிரஸிவ் ஆர்ட் தெரபி என்பது ஓவியம் வரைதல், இசை, நடனம், கதை சொல்லுதல் என பலவகையான கலைகள் மூலம் சிகிச்சை அளிப்பது. பேச்சு மூலம் ஒருவருடைய மனதை அமைதிப்படுத்துவதை காட்டிலும், இதுபோன்ற உணர்வுகள், அசைவுகள் மூலம் அமைதி படுத்துவது என்பது இன்னும் எளிதாக உள்ளது. விரைவில் குணம் தெரிகிறது. 2012-இல் இருந்து இந்த எக்ஸ்பிரஸிவ் ஆர்ட் தெரபி சிகிச்சை அளித்து வருகிறேன். இதுவரை நான் சிகிச்சை அளித்துள்ளதை வைத்து உணர்ந்தது என்னவென்றால் ஒருவருடைய சுயமரியாதை, அவர் மேல் காட்டப்படும் பச்சாதாபம் ( எம்பத்தி) பாதிக்கப்படும்போதுதான் அவர் மன அழுத்தத்தைச் சந்திக்கிறார்.
   சமீபகாலமாக மக்கள் மனதில் அமைதி குறைந்து எதிலும் ஒருவித வேகம், அவசரம், ஆக்ரோஷ உணர்வு தற்போது ஏற்பட்டு வருகிறது. இதுவே குற்றங்கள் நடைபெற அடிப்படை காரணமாகிறது. எனவே, ஒவ்வொருவரும் அடுத்தவரிடத்தில் அன்பு செலுத்துவதும், இரக்கம் காட்டுவதும்தான் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க ஒரே வழி என நான் உணர்ந்தேன்.
   எனவே, எல்லாரிடத்திலும் அன்பு செலுத்துங்கள் என எனக்கு எங்கெல்லாம் பேச வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தெரிவத்து வருகிறேன். மேலும், சோஷியல் மீடியா மூலம் அன்பு செலுத்துவதின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறேன். அதன் அடிப்படையில்தான் கடந்த 2016 -இல் "கைண்ட்னெஸ் பிராஜக்ட்' என்று ஒன்றை உருவாக்கினேன். இதன் மூலம் எல்லாரிடத்திலும் அன்பு செலுத்துங்கள் என்று வாய்மொழியாக சொல்லுவதை விட சோஷியல் மீடியாவில் சின்ன சின்ன வீடியோக்களாக பதிவிட்டேன். உதாரணமாக, நாம் ஒரு ஹோட்டலுக்குச் செல்கிறோம். உணவருந்திவிட்டு வெளியே வரும்போது அங்குள்ள வெயிட்டருக்கு ஏதாவது டிப்ஸ் வைத்துவிட்டு வருகிறோம். இதை நம்மை யாரும் கட்டாயப்படுத்தி வைக்கச் சொல்வதில்லை. நாமாகத் தான் செய்கிறோம். ஆனால் அது கைண்ட்னெஸ் இல்லை. அதுவே அந்த வெயிட்டருக்கு ஒரு பிரச்சனை என்று அறிந்து நாம் அவருக்கு தானாக முன் வந்து கூடுதலாக டிப்ஸ் கொடுக்கிறோம் என்றால் அதுதான் அன்பு. கைண்ட்னெஸ். அதுபோன்று சென்னையில் வெள்ளம் வந்தது, "வர்தா' புயல் வந்தது. அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிறைய பேர் முன் வந்தனர், அவர்கள் மதம், இனம், ஜாதி என எதையும் பார்க்கவில்லை. உதவி வேண்டும் என்றவர்களுக்கு உதவினார்கள். மனிதர்கள் மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட மிருகங்களுக்கும் உதவினார்கள். இதுதான் அன்பு, மனிதாபிமானம், கருணை. ஒரு குறிப்பிட்ட நேரத்தோடு முடிந்துவிட்ட அந்த அன்பு எல்லா நேரத்திலும் இருக்க வேண்டும். அதற்கு கொஞ்சம் வழிகாட்டினால் போதும். அதைத்தான் நான் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.
   அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு அன்பைப் பரப்பும் வாரம் (கைண்ட்னஸ் வீக்) என கொண்டு வந்தேன்.
   இதன்மூலம் தனிநபர்கள், பள்ளிகள் என அன்பையும் இரக்கத்தையும் பெறுபவர்களாகவும் கொடுப்பவர்களாகவும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் முன்னிறுத்தப்படுகிறார்கள்.
   அந்த வகையில், இந்த ஆண்டு எங்களின் தீம் "ஒரு ஹீரோவாக இருங்கள்; அனைவரிடமும் மிகுந்த இரக்கத்துடன் இருங்கள்' என்பதாகும். தி கைண்ட்னெஸ் வீக் என்பது ஒவ்வொரு காரியத்தையும் சிந்தித்துச் செய்ய வேண்டும் என்பதைப் பழக்கமாக கொள்ள வலியுறுத்துகிறது. நாம் எதைச் சொல்வதாக இருந்தாலும் அன்பாக உணர்வுப் பூர்வமாகப் பேசினால், மக்கள் கண்டிப்பாக செவி கொடுத்து கேட்பார்கள். என்பதை உணர்த்துகிறது. இதனை நேரடியாகப் பார்க்க ஆசைப்பட்ட நாங்கள், இரண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தோம். பொதுமக்களிடையே இரக்கம் நிறைந்த செயல்களை அதிகரிக்கத் திட்டமிட்டோம். சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், பரிசுப் பொருட்கள் கொடுத்தும் பங்கேற்பாளர்களுக்கு ஆச்சர்ய அனுபவங்களைக் கொடுக்க நினைத்தோம்.
   இதற்காக சமூக வலைத்தளங்களில் கைண்ட்னெஸ் சேலஞ்ச் என்னும் ஹேஷ்டேக்கை உருவாக்கினோம். அதன் கீழ் மக்களை தாங்கள் செய்த இரக்கம் நிறைந்த செயல்களை வீடியோவாகவோ புகைப்படங்களாகவோ பதிவு செய்ய சொன்னோம். உதாரணமாக வகுப்புக்கு வராத தோழருக்காக ஆசிரியர் நடத்தும் பாடங்களை குறிப்பு எடுத்து வைப்பது, நம் பக்கத்து வீட்டுக்காரரின் குப்பைகளையும் சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்புவது, யாரோ ஒருவருக்கு உதவி செய்வது என அனைத்துமே இரக்கம் நிறைந்த செயல்கள் தான். இவற்றைப் போன்று ஏதேனும் ஒரு செயலை பதிவு செய்யலாம்.

   இந்நிகழ்வில் பங்குபெறுபவர்களுக்கு பிராண்ட் பார்ட்னர்களிடமிருந்து தங்களுக்குப் பிடித்த பரிசுப் பொருட்களை வாங்கி, தங்களுக்குத் தெரிந்த குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். பரிசுப் பொருட்களாக கூப்பன்களையும் கொடுக்கலாம். அந்த கூப்பன்கள் ஒரு நாளைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். திரையரங்கு, விளையாட்டு அரங்கு, சலூன் உள்ளிட்ட இடங்களில் கூப்பன்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே இவை ஏழைக் குழந்தைகளுக்கு அரிதான பரிசு பொருட்களாக அமையும். எனவே, இது போன்ற நிகழ்வு அனைவரின் அன்றாட வாழ்விலும் இரக்கத்தை விதைக்கும். மாற்றத்தை உண்டாக்கும். பிறரிடம் இரக்கமாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் .
   இதில் பங்கேற்கும் பள்ளிகள், ஒரு வாரத்துக்கு அன்பு நிறைந்த வளாகங்களாக மாறும். எளிமையான நிகழ்ச்சிகள் வாயிலாக மாணவர்களிடையே இரக்கத்தை ஊக்குவித்து, வகுப்பறையிலும் அதற்கு வெளியேயும் அன்போடு நடந்து கொள்ள கற்றுக் கொடுக்கும். குழந்தைகள் மற்றவர்களிடம் கருணை காட்டுவதன் மூலம் ஒருவருக்கொருவர் அன்பையும் வலுப்படுத்துவார்கள்.
   இதில் சில வணிக நிறுவனங்களும் எங்களுடன் கைகோர்த்துள்ளனர். அந்நிறுவனங்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகள் இதுவரை காணாத புதிய அனுபவத்தைக் கொடுத்து வருகிறார்கள். மனிதர்கள், விலங்குகள் மற்றும் நம் சுற்றுச்சூழல் மீது பரிவு காட்டுவதன் மூலம் இந்த ஆண்டின் கைண்ட்னெஸ் வாரத்தை சிறப்பாக்கி உள்ளோம். எங்களால் முடிந்த அளவு அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவோம். இந்த உலகம் எவ்வளவு அழகான அன்பான இடம் என்பதை உணரச் செய்வோம்'' என்றார்.
   - ஸ்ரீதேவி குமரேசன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai