முகப்பு வார இதழ்கள் மகளிர்மணி
72 ஆண்டுகள் பிரிவுக்கு பின் சந்தித்த தம்பதிகள்!
By DIN | Published On : 28th February 2019 10:11 AM | Last Updated : 28th February 2019 10:11 AM | அ+அ அ- |

திருவனந்தபுரத்தில், 1946- ஆம் ஆண்டு பிரிந்த தம்பதி, 72 ஆண்டுகள் பிரிவுக்கு பிறகு சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
1946-ஆம் ஆண்டு 18 வயது நாராயணன் 14 வயது முறைப்பெண்ணான சாரதாவை குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி எட்டு மாதங்கள் மட்டும் தான் இணைந்து வாழ்ந்துள்ளனர்.
அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி நடைபெற்றது. திருமணமான சில மாதத்தில் கேரளாவில் விவசாய நிலங்களை எல்லாம் நில பிரபுக்களுக்கு கீழ் கொண்டு வந்து அவர்களின் கீழ் கொத்தடிமைகளாக வேலை பார்க்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக விவசாயிகள் மத்தியில் போராட்டம் எழுந்தது. இதில் நாராயணன் நம்பியார் மற்றும் அவரது தந்தை தாலியன் ராமன் நம்பியாரும் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளனர். இதில் அவரது தந்தை சிறையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். நாராயணன் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் சாரதா ஆங்கிலேயர்களுக்கு பயந்து, தனது தாய் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். சிறிது காலம் கடந்த பின் குடும்பத்தினர் சமாதானப்படுத்தி சாரதாவிற்கு வேறு ஒரு திருமணத்தை செய்து வைத்துள்ளனர்.
எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் 1954 - ஆம் ஆண்டு சிறைவாசம் அனுபவித்து விட்டு நாராயணன் வருகிறார். தனது மனைவி இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை அறிந்து கொண்டு, அவரை தொந்தரவு செய்யாமல், தனக்கென ஒரு வாழ்க்கையைத் தேடிக் கொள்கிறார். சாரதாவிற்கு ஆறு பிள்ளைகளும், நாராயணனுக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
தங்களது குடும்ப வாழ்வில் இருவரும் சந்தோசமாக இருந்த நிலையில், நாராணயணன் வாழ்க்கையை வைத்து ஒரு நாவலாக எழுத்தாளர் சந்தா கவுபாய் எழுதி வருகிறார். இதை அறிந்த சாரதாவின் மகன் பார்கவன் எழுத்தாளரை சந்தித்து இரண்டு குடும்பங்களிடமும் பேசியுள்ளார்.
பின்னர் நாராயணன், சாரதாவின் சந்திப்பிற்கு இரு குடும்பத்தாரும் ஏற்பாடு செய்தனர். இந்த சந்திப்பை சாராதாவின் மகன் பார்கவன் வீட்டில் வைத்தனர். அப்போது, நாராயணனை வரவேற்க சாரதாவின் வீட்டில் கேரளாவின் அனைத்து உணவு வகைகளுடன் வரவேற்றுள்ளனர்.
72 ஆண்டுகள் கழித்து சந்தித்த இருவரும் முதலில் மவுனங்களை மட்டும் பரிமாறிக் கொண்டனர். சிறிது நேரம் கழித்து பேச தொடங்குகிறார் நாராயணன். அப்போது, பதிலளித்த சாரதா, "எனக்கு யார் மேலேயும் கோபம் இல்லை'' என்கிறார்.
"அப்புறம் ஏன் பேசாம இருக்க...'' என பாசத்தோடு கேட்கிறார் நாராயணன்!
இப்படி இருவரும் பேச்சைத் தொடங்கி பேச ஆரம்பித்தனர். பின்னர் சில மணி நேரம் கழித்து "போய்ட்டு வரேன்' என்கிறார், நாராயணன். சற்றே வெட்கமடைந்து தலை குனிந்தே பதிலளிக்கிறார் சாரதா.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திருமண பந்தத்தில் இணைந்த இருபாசப்பறவைகள், ஒரு கூட்டில் வசித்த அனுபங்களின் பரிமாறலாகவே இருந்தது. அண்மையில் வெளிவந்த "96' திரைப்படம் போன்று இருந்த இந்த முன்னாள் தம்பதியின் சந்திப்பில் தங்கள் உணர்வுகளை பரிமாறிக்கொண்ட அந்த தருணங்கள் நம்மை அன்பால் ஆட்கொள்கிறது!
- வேதவல்லி