நண்பர்களுடன் பழகுங்கள்!

மனநலம் சார்ந்த வாசகர்களின் கேள்விகளுக்கு மனோ தத்துவ நிபுணர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் அளித்த பதில்கள்
நண்பர்களுடன் பழகுங்கள்!

மனநலம் சார்ந்த வாசகர்களின் கேள்விகளுக்கு மனோ தத்துவ நிபுணர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் அளித்த பதில்கள்:
 சிலருக்கு கோபம் வந்தால் என்ன பேசுகிறோம் என அறியாமல் பேசுகிறார்கள். இது ஏன்? அதுபோன்று யாரைக் கண்டாலும் மனதில் வெறுப்புணர்ச்சி வருகின்றது. காரணம் என்ன? அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தும் மனதை எவ்விதம் சரிப்படுத்துவது?
 - வள்ளி நாயகம், மருங்கூர்.
 ஒருவருக்கு கோபம் வருகிறது, யாரையும் பிடிக்கவில்லை, சின்ன விஷயங்களையும் பெரிது படுத்துகிறார் என்றால், அவருக்கு தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணம் உள்ளது. இதனால் அவருக்கு மனதளவில் ஒரு வெறுப்புணர்ச்சி ஏற்படுகிறது. இந்த வெறுப்புணர்ச்சியின் காரணமாக யாராவது, ஏதாவது சொன்னால் கோபப்படுகிறார். இதில் ஒரு விஷயம் என்னவென்றால், சின்ன விஷயத்தைக் கூட நான் பெரியதாக்குகிறேன் என்று அவருக்கே தெரிகிறது. ஆனால், அதை அவருக்கு கட்டுப்படுத்த தெரியவில்லை. காரணம், இது மன அழுத்த நோயின் ஆரம்ப அறிகுறி. நமக்கு வயசாகும்போது, மன அழுத்த நோய் இருந்தால், நமக்கு யாரையுமே பிடிக்காது, எதையுமே பிடிக்காது , சின்ன விஷயங்கள் கூட நம் மனதை சென்ஸிட்டிவ்வா கொண்டு போய்விடும். இல்லை. இதுதான் என் சுபாவம் என்றால், அவரது சிறுவயதில் அப்பா, அம்மா ரொம்ப கண்டிப்பானவர்களாக இருந்திருப்பார்கள். இதனால் சிறுவயதில் பெற்றோரின் அன்புக்காக அவர் ஏங்கியிருக்கக் கூடும். அது நாளடைவில் அவரது ஆழ்மனதில் பதிந்து போயுள்ளது. இதனை மற்றவர்களிடத்தில் பேசும்போது கோபமாக வெளிப்படுத்துகிறார். அவரைப் பற்றி, அவரது சிறுவயது வீட்டுச் சூழல் பற்றி தெரிய வேண்டும். சிறுவயதிலேயே தனியாக விடப்பட்ட மனநிலையில் இருந்திருந்தாரா? இப்போதைய சூழலில் இவர் நன்றாக தூங்குகிறாரா? அவர் செய்யும் வேலையைப் புரிந்து கவனமாக செய்கிறாரா? வீட்டுச் சூழல் இவை எல்லாம் தெரிந்தால்தான் மேலும் ஆலோசனை வழங்க முடியும்.
 மிகவும் முதியவர்களுக்கு பரவலாகக் காணப்படும் மறதி நோய் என்பது மன நலம் சார்ந்த பிரச்னையா? இதனை வராமலேயே தடுத்துவிட முடியுமா? பயிற்சிகள் தேவையா?
 - முனைவர்.ச. சுப்புரெத்தினம்,
 மயிலாடுதுறை.
 பொதுவாக மறதி நோயைப் பொருத்தவரை "அல்சைமன்ஸ் டிமன்சியா' என்று சொல்கிறோம். இது வயதாக ஆக வரக் கூடியது. முக்கியமாக நீரிழிவு நோயோ அல்லது ரத்த அழுத்த நோயோ இருந்தால் முதுமைக்கு முன் நிலையிலேயே வரக் கூடிய வாய்ப்புகள் அதிகம். இது மன நலம் சார்ந்த பிரச்னையா என்பதைவிட, இது மூளை சார்ந்த பிரச்னை என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு முதல் அறிகுறி மன அழுத்தமாக இருக்கலாம் அல்லது அவரது நடத்தையில் மாறுபாடு இருக்கலாம். திடீர் என்று சின்ன பசங்களோடு நன்றாக பேசுவார்கள், திடீர் என்று நன்றாக டிரஸ் செய்து கொள்வார்கள் இல்லையென்றால், யாரோடும் பேசமாட்டார்கள், டிரஸ் பண்ணுவதில் கவனம் இல்லாமல் ஏனோ, தானோ என செய்து கொள்வார்கள். சில நேரங்களில் இன்செக்யூரா பீல் பண்ணுவார்கள், அதாவது யாரோ வந்து தன்னுடைய பொருட்களையெல்லாம் எடுத்துச் செல்கிறார்கள் என்று பூட்டி பூட்டி பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வார்கள். முதல் அறிகுறி மனநிலை பிரச்னைகள் மாதிரி இருக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இது நியூராலஜி மற்றும் மனோ தத்துவம் இரண்டும் கலந்த பிரச்னை. இதை தடுத்து நிறுத்த முடியுமா? பயிற்சிகள் தேவையா? என்பதற்கு, பதில் நடைப் பயிற்சி, உடற்பயிற்சி எல்லாம் செய்ய வேண்டும், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இரண்டையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும், மனதை அழுத்தம் இல்லாமல் லேசாக வைத்துக் கொள்ள வேண்டும், கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்து விட வேண்டும், மூளைக்கு எப்போதும் வேலை கொடுத்துக் கொண்டிருந்தால் இந்த மறதி நோய் குறையும். வயதாக வயதாக தனி அறையில் அமர்ந்து கொண்டு டிவியைப் பார்த்துக் கொண்டு இல்லாமல், புத்தகங்கள் படிப்பது, பசில்ஸ் விளையாடுவது, வார்த்தை விளையாட்டு, சுடோகோ போடுவது, வெளியில் வந்து நண்பர்களுடன் பேசுவது, பழகுவது, கோயிலுக்குச் செல்வது, வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவிற்குச் சென்று வருவது. நண்பர்களை நேரில் சென்று பார்க்க முடியவில்லை என்றால் போனிலாவது பேசிக் கொண்டிருப்பது. இப்படி செய்து வந்தால், நிச்சயம் மறதி நோயைக் குறைக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.
 - தொடரும்...
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com