மீண்டும்  நடிக்க வந்தபோது  நடுங்கினேன்!

""நான் ஒரு நடிகையாக இருந்தாலும்  சுதந்திரமானவள்.  சிறு  வயதிலேயே எனது தந்தை பணத்தைப் பொருத்தவரை  ""உன்னுடைய வாழ்க்கையில் உனக்கு நீ தான்  எஜமானனாக சுதந்திரமாக  இருக்க வேண்டும்'' என்பார்.
மீண்டும்  நடிக்க வந்தபோது  நடுங்கினேன்!

""நான் ஒரு நடிகையாக இருந்தாலும் சுதந்திரமானவள்.  சிறு  வயதிலேயே எனது தந்தை பணத்தைப் பொருத்தவரை ""உன்னுடைய வாழ்க்கையில் உனக்கு நீ தான் எஜமானனாக சுதந்திரமாக இருக்க வேண்டும்'' என்பார். நாங்கள் நல்ல வசதியான ராஜ்புத் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்களை கல்வி கற்க அனுமதிப்பார்களே தவிர, வேலைக்குச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். நான் வித்தியாசமானவளாக, பணம் சம்பாதிப்பதில் உறுதியாக இருக்க விரும்பினேன். எனவே, திருமணம் செய்து  கொள்ள விருப்பமின்றி  வீட்டை விட்டு வெளியேறினேன்.

சினிமாவில்  நடித்துக் கொண்டிருந்தபோதுதான், கிரிக்கெட்  என் வாழ்க்கையில்  குறுக்கிட்டது.  நல்ல உச்சத்தில்  இருந்த நான் நடிப்பை விட்டுவிட்டு  ஐபிஎல்லை  தேர்ந்தெடுத்தேன். நாம் ஒன்று  நினைத்தால்  தெய்வம் ஒன்று நினைக்கும் என்று   சொல்வார்களே அதுபோல்.  ஆணாதிக்கம் மிகுந்த  விளையாட்டு மற்றும்  வியாபாரத்தில்  நான் துணிந்து  இறங்கிய போது, அந்த துறையில்  நான் ஒருத்திதான்  பெண். என் எதிர்கால வாழ்க்கைக்கு  தேவையான  பணத்தை  சம்பாதிக்கவும், சுதந்திரமாக இருக்கலாமென்றும் நினைத்தேன்.

முதல்நாள்  போட்டியின்போது  நான் கவர்ச்சியாக  உடையணிந்திருந்தாலும், பின்னர் ஜீன்ஸ்  மற்றும்  பெரிய  சைஸ் டி ஷர்ட்களையும்  அணியத் தொடங்கினேன்.  ஏனெனில்   என்னை  ஒரு நடிகையாக காட்டிக் கொள்ள விரும்பவில்லை. எனக்கென்று  மரியாதையும், மதிப்பும்  கிடைக்க வேண்டுமெனில் ஐபிஎல்  விளையாட்டையும், இது தொடர்பான வியாபாரத்தையும் கவனிக்க வேண்டியது  முக்கியமென  தோன்றியது.

அதே நேரத்தில்  என் மீது  மற்றவர்கள்  காட்டிய  வெறுப்புணர்வை  பற்றியும் சொல்லாமல்  இருக்க முடியாது.  கே.கே.ஆர்.  குழு வெற்றிப்  பெற்றதும் சோயிப் அக்தர்,  ஷாருக்கானை  தன் கரங்களால்  மேலே தூக்கி  மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினார். என்னுடைய  குழு வெற்றிப் பெற்றபோது  யுவராஜ்சிங் என்னைத்  தூக்கி  மகிழ்ச்சியை  தெரிவித்தபோது,  எனக்கும்  அவருக்கும் தொடர்பு  இருப்பதாக  வதந்தியைப்  பரப்பினார்கள்.  நான் எது சொன்னாலும்,  செய்தாலும்  அது செய்தியானது.

இந்நிலையில்  சன்னிதியோல்  என்னை வைத்து  ஒரு படம் தயாரிக்க  விரும்பி என்னிடம் வந்தார்.  நான் படங்களில்  நடிப்பதில்லை  என முடிவெடுத்திருப்பதாக  கூறினேன்.  அவர் விடவில்லை.  முதலில்  கதையை கேட்டுவிட்டு  பிறகு முடிவை  கூறும்படி  சொன்னார்.  கதையை  கேட்டேன். என்னுடைய  பாணிக்கு  ஏற்ற கதையல்ல  என்றாலும்  நகைச்சுவை கலந்த கதையாக  இருந்ததோடு,  இதுவரை  நான் ஏற்று  நடிக்காத  பார்த்திரமாகவும் இருந்தது.  அதனால்  நடிக்க  ஒப்புக் கொண்டேன்.  இரண்டு  நாள் படப்பிடிப்புக்கு  பிறகு என்ன நடந்ததோ,  அடுத்து மூன்றாண்டுகள் வரை மேற்கொண்டு யாரும்  என்னை அணுகவில்லை.

மீண்டும்  என் திருமண  தினத்தன்று  சன்னி  என்னை  படத்தில் நடிக்கும்படி அழைத்தார்.  நான் மறுத்தேன்.  என்னால் நடிக்க முடியாது  வேறு யாரையாவது போட்டு படமெடுத்துக் கொள்ளுங்கள் என்று  கூறி வேறு சில நடிகைகளின் போன் நம்பர்களை கொடுத்தேன்.  என்னுடைய  கணவர் ஜெனிக்கு  இந்த தகவல்  எப்படியோ  கிடைத்து  என்னை நடித்து  தரும்படி  கூறினார்.  அவர் இந்தியா  வந்தபோது  என்னுடைய ரசிகர்கள்  சிலர் அவரை சந்தித்து  மீண்டும் என்னை நடிக்க  அனுமதிக்கும்படி கூறியுள்ளனர்.  ""அவர்களுக்காக நீ நடிப்பது நல்லது''  என  என் கணவர் கூறவே,  இந்தியாவுக்கு வந்த நான்  அந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தேன்.  படமும் வெற்றிப் பெற்றது.

என்னை வருத்தப்படக்கூடிய  சம்பவங்களும்  உண்டு.    நல்ல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்த போது  நான் இங்கு இருப்பதில்லை. கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்த முடியவில்லை. எதிர்காலத்திற்காக நிரந்தரமாக  பணம் சம்பாதிக்க  வேண்டுமென்று  ஐ.பி.எல்லை  தேர்வு செய்ததற்காக  நான் வருத்தப்பட்டதில்லை.  இப்போது  என்னால்  நான் நினைப்பதை  சாதிக்க முடியும் என்ற  நம்பிக்கை  ஏற்பட்டுள்ளது.  ஒரு வகையில்  நான் மீண்டும்   நடிக்க  வந்ததற்கு  சன்னி  தியோலுக்கு  நன்றி சொல்ல வேண்டும்.  மேலும்  படங்களில்  நடிக்க விரும்புகிறேன். முதல்நாள் படப்பிடிப்பில்  கலந்து கொண்டபோது  சிறிது நடுக்கம் ஏற்பட்டது.  நடிப்பை மறந்து  விட்டோமோ  என்று கூட  நினைத்தேன்.  நீண்ட காலமாக  புடவை அணியாததும்  காரணமாக  இருந்திருக்கலாம்.

பெண்களுக்கு  மற்ற துறைகளைவிட திரைப்படத் துறை பாதுகாப்பானது என்றே  கருதுகிறேன்.  இன்று ஒரு நடிகை  தனக்கேற்பட்ட  அவமானத்தைக் கூறினால்  கேட்க மக்கள்  இருக்கிறார்கள்.  மற்ற துறைகளில்  பாதிக்கப்படும் பெண்கள்  கூறுவதை  கேட்க யாரும் முன் வருவதில்லை.  அத்துடன் அவளுடைய  வேலையும் இழக்க வேண்டியதாகிறது.

திரைப்படத் துறையை  பொருத்தவரை  துவங்கியுள்ள  "மீடூ'  கருத்துப் பதிவு ஒரு நல்ல  ஆரம்பம்.  இதற்குமுன்  இதுபோன்ற  குற்றசாட்டுகள்  கிளம்பினால் அதை அப்படியே  மூடி மறைத்துவிடுவார்கள்.   திரைப்படத் துறையிலாகட்டும், கிரிக்கெட்டிலாகட்டும்  என்னிடம்  யாரும் தவறான  எண்ணத்துடன் அணுகியதும்  இல்லை.  முன்னுரிமை  எடுத்துக் கொண்டதும்  இல்லை. படங்களில்  நடன காட்சிகளில் சில அசைவுகள்  ஆபாசமாக இருந்தாலோ, ஆபாசமான  கோணத்தில்  படமெடுத்தாலோ நானே  அனுமதிப்பதில்லை. இதனால்  திரையுலகில்  பெண்கள் பாதிக்கப்படுவதில்லை  என்று என்னால் உறுதியாக  கூற முடியாது''  என்கிறார்  ப்ரீத்தி ஜிந்தா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com