சுடச்சுட

  
  mn3

  தனது கடின உழைப்பு, விடாமுயற்சியால் தோடரின சமுதாயத்தின் முதல் பெண் மருத்துவராகியிருக்கிறார் பாரதி. கோவை தனியார் மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவ பட்டம் பெற்ற பாரதியை அந்த இனமே  கொண்டாடி வருகிறது.   இது குறித்து பாரதி கூறுகையில்:

  ""நீலகிரி மாவட்டத்தில்  உள்ள மலைவாழ் மக்களில்,  தோடர் இனத்தில் பிறந்து வளர்ந்தவள் நான்.  அப்பா மந்தேஷ்குட்டன் தோடர் சமுதாயத்தின் தலைவர். அம்மா நேரு இந்திரா இல்லத்தரசி. எங்கள் சமுதாயத்தில் டாக்டர், கலெக்டர் போன்ற உயர் பதவிகளில் யாரும் இல்லை.  எனவே, நான்  டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்பது  என் அப்பாவின் கனவு.  எனது சிறு வயதிலிருந்தே  இதை பற்றியேதான் ஆசையாக பேசிக் கொண்டிருப்பார். இதனால் எனக்கும் சிறு வயது  முதலே டாக்டராக வேண்டுமென்ற ஆர்வம் தொற்றிக்கொண்டது. விளையாடும்போது கூட பொம்மை ஸ்டெதஸ்கோப்பை வைத்துக் கொண்டுதான் விளையாடுவேன். 

  எங்கள் ஊரில் உள்ள அரசு பள்ளியில்  பள்ளிபடிப்பு முடிந்ததும், கோவையில் பிளஸ் 2 வரை படித்தேன்.  பின்னர்,  மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தேன். ஆனால், இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில், கவுன்சிலிங் மூலம் பல் மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. 

  கல்லூரிக்குள் நுழைந்ததும் ஒருவித பதற்றம் இருந்தது. பாடங்கள் மிகவும் கடினமாக  இருந்தன. பள்ளியில் தமிழ் வழியில் படித்ததால், மருத்துவக் கல்லூரியில் ஆங்கிலத்தில் படிப்பது கஷ்டமாக இருந்தது. எனினும், கல்லூரியில் நல்லபயிற்சி கொடுத்ததால், தேர்ச்சி பெற்றேன்.  நான் தோடர் இனப்பெண் என்பது என் நண்பர்களைத்தவிர, வேறு யாருக்கும் தெரியாது.  நான் 3-ஆவது ஆண்டு படிக்கும் போது சென்னையில் ஆங்கில நாளிதழ் ஒன்று நடத்திய  மாநாட்டில் கலந்துகொண்டேன். அந்த பத்திரிகையில் தோடர் இன முதல் பெண் டாக்டர் என்று என்னைப் பற்றிய  செய்தி வந்தது. 

  அதன் பிறகே கல்லூரியில் உள்ள அனைவருக்கும் என்னைப் பற்றி தெரிந்தது. கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் என்னைப் பாராட்டி உற்சாகம் கொடுத்தனர்.

  எங்கள் சமுதாய மக்கள் அனைவரும் ""எப்போது டாக்டராகி வருவாய்?'' என்று கேட்பார்கள். எங்கள் கிராமத்துக்கு யார் சென்றாலும், ""எங்கள் பெண் டாக்டருக்கு படிக்கிறாள்'' என்று பெருமையாக கூறுவார்கள். அது எனக்கு இன்னும் உத்வேகத்தைக் கொடுத்தது.  இதனால் கண்ணும் கருத்துமாக படித்து தற்போது பல் மருத்துவராகியுள்ளேன். 

  நீலகிரி மாவட்டத்தில் 70 கிராமங்களில்  2000 தோடர் இன மக்கள் மட்டுமே வசிக்கின்றனர்.  இதில்,  தோடர், கோத்தர், இருளர், பனியர், குரும்பர், காட்டுநாயக்கர் ஆகிய ஆறு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஆறு பழங்குடியின மக்களில் தோடர் மற்றும் கோத்தர் இன மக்களிடம் நிலங்கள் இருப்பதுடன், வேலைவாய்ப்பும் பெற்றுள்ளதால் முன்னேற்றமடைந்துள்ளனர். ஆனால், இருளர், பனியர், குரும்பர், காட்டுநாயக்கர் பழங்குடியின மக்கள்  இன்னமும் முன்னேற்றம் அடையவில்லை.

  இதனால், கிராமந்தோறும் சென்று இலவச  முகாம் நடத்தி, சிகிச்சை அளிப்பேன். இன்றும் சிலர் வேப்பங்குச்சியை வைத்துத்தான் பற்களைத் துலக்குகிறார்கள். வயதானாலும் அவர்களது பற்கள் உறுதியாக உள்ளன. எனினும், தற்போதைய உணவுப் பழக்கத்திற்கு பிரஷ் வைத்து துலக்கினால்தான் சுத்தமாகும்.

  இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, பற்களைப்  பாதுகாக்குமாறு அறிவுறுத்துவேன். சிலர் புகை பிடிக்கிறார்கள். அதை நிறுத்தும்படி அறிவுறுத்தி, எங்கள் இனத்தை ஆரோக்கியமான சமூகமாக மாற்ற முயற்சிப்பேன். கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கச் செய்வேன்.  அது போன்று, எங்கள் சமுதாய மக்களுக்கு சுகாதாரம் குறித்து சொல்லிக்கொடுத்து, சிறந்த கிராம மக்களாக மாற்றுவேன். முக்கியமாக, எந்த நேரத்திலும் எங்களது பண்பாடு, கலாசாரத்தை மறக்க மாட்டேன்'' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai