Enable Javscript for better performance
மேடையைக் கலக்கும் வைஷ்ணவி..!- Dinamani

சுடச்சுட

  
  mn2

  சிங்கப்பூர் நகரில் வாழும் தமிழ் சமுதாயத்தினருக்கிடையில்  பிரபலமாகி வருபவர் வைஷ்ணவி லட்சுமி. இலக்கிய மேடைகளில் பேசி வரும் வைஷ்ணவிக்கு பதினான்கு வயது. ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார்.

  சமீபத்தில் சென்னை வந்திருந்த போது வடசென்னை தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பாரதி விழாவில் சொற்பொழிவாற்றினார்.   சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த ஒரு சிறுமி, பாரதியை பல கோணங்களில் பாராட்டிப் பேசி அதிசயிக்க வைத்தார். "சிங்கப்பூரில்  வாழ்ந்து கொண்டு பாரதியார் குறித்து இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாரே... பாரதியார் பாடல்களை மனப்பாடமாகச் சொல்கிறாரே..! என்று  மலைக்கவும் வைத்தார். எதிர்காலத்தில் இலக்கியமேடை பேச்சாளராக வேண்டும் என்ற  லட்சியம் வைத்திருக்கும் வைஷ்ணவிக்கு இது எப்படி சாத்தியமாயிற்று  என்று கேட்டோம்:

  ""எல்லாம் சிங்கப்பூர் அரசு தமிழ் மொழிக்குத் தரும் முக்கியத்துவம்தான். சிங்கையில் தமிழ், மலாய், சீன மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டிருப்பவர்கள் வாழ்கிறார்கள்.  சிங்கை மக்கள் தொகையில் பன்னிரண்டு சதவீதம்  தமிழ்  சமுதாயத்தினர்.  தாய் மொழிக்கு அது தமிழாக இருந்தாலும் சரி... சீனம், மலாயாக இருந்தாலும் சரி... தாய் மொழிக்குத்தான் முக்கியத்துவம். தமிழர்களாக இருந்தால் தமிழும், சீனர்கள் சீனமும், மலேயர்கள்  மலாய் மொழியும் கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும். அடுத்தது ஆங்கிலம்  இரண்டாம்   மொழி . படித்தேயாக வேண்டும். மூன்றாம் மொழியாக சீனம் அல்லது மலாய் மொழியை தெரிவு செய்து கொள்ளலாம்.

  உயர்நிலைப்  பள்ளியில்   பொதுத்  தமிழ், உயர்நிலை தமிழ்   என்ற இரண்டு   பிரிவு உள்ளது.  உயர்நிலை தமிழில்   இலக்கியம் படிக்கலாம். நான் உயர்நிலை தமிழ் படிக்கிறேன். அது எனது இலக்கியத் தேடல்களுக்கு தீனி போடுகிறது. தாய் மொழியில் தேர்வு பெற்றால்தான் அடுத்த  மேல் வகுப்பில் படிக்க அனுமதிப்பார்கள். வேறு பாடங்களில்  தோல்வி அடைந்தாலும், அடுத்த மேல் வகுப்பில் படிக்க அனுமதிப்பார்கள். பிறகு அந்தப் பாடத்தில் தேர்வுகளை மீண்டும் எழுதி தேர்ச்சி பெற்றுக் கொள்ளலாம். வேறு பாடங்களில்  நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கினாலும்  போனஸ்  எனப்படும்  சலுகை மதிப்பெண்  கிடைக்காது. ஆனால், தாய் மொழியில்  அதிக மதிப்பெண்கள் பெற்றால் சலுகை மதிப்பெண்கள் கிடைக்கும். அதனால் எடுத்த  மொத்த மதிப்பெண்களுடன்  இந்த சலுகை மதிப்பெண்களும்  கூட்டப்படும்.  இந்த முறையால்  தாய் மொழியை  அனைவரும்  நல்ல  முறையில் படிப்பார்கள். பள்ளியில்  தமிழ் நாடகம் அரங்கேறும்.  அதில் நடித்த அனுபவமும்  எனக்கு உண்டு .

  ஆசிரியர்கள் மேடைப் பேச்சில்  பயிற்சி  தருகிறார்கள்.   சிங்கை  அரசு ஆண்டுதோறும்  ஏப்ரல்    மாதம்   "தமிழ் மொழி விழா'  கொண்டாடுகிறது. சிங்கப்பூரில்   பல  இலக்கிய அமைப்புகள்  உள்ளன . அங்கு  மாதந்தோறும் பட்டிமன்றம் , கவியரங்கு , இலக்கிய சொற்பொழிவுகள் நடக்கும். 

  அப்பா கண்ணன்  சேஷாத்ரி  இங்கே  பொறியாளராகப்  பணி புரிகிறார். பட்டிமன்றங்களில் பேசுவார்.  வீட்டிலும் தமிழ் ஆர்வலர்கள்  வந்து போவார்கள். அவர்களின்  உரையாடல்கள்  தமிழ் இலக்கியம் பற்றியிருக்கும். இந்த சூழ்நிலைகள்   மேடையில் தமிழில்   பேச வேண்டும்  என்ற  ஆர்வம்  ஏற்பட காரணமாக  அமைந்தது.   சிங்கப்பூரில் நடக்கும்  இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுவருகிறேன். சிங்கப்பூரில்  மேடைப் பேச்சில்  முன்னணியில் இருக்கும் மாணவ மாணவிகளை  தமிழகத்திற்கு அழைத்துச் சென்று இலக்கிய நிகழ்ச்சிகளில்  பங்குபெறச்  செய்வதுடன்,  தமிழகத்தில் மேடைப் பேச்சில் சிறந்து நிற்கும் மாணவ மாணவிகளை சிங்கப்பூர்  அழைத்து இலக்கிய நிகழ்ச்சிகள்  நடத்துவது குறித்து தமிழக  இலக்கிய அமைப்புகளுடன்  பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அப்பா அம்மாவுக்கு கும்பகோணம்  சொந்த ஊர்.   அப்பா  வேலையில்  தொடரும் வரை  சிங்கப்பூரில்   வாழ்வோம். ஆசிரியராக  வேண்டும் என்பது எனது விருப்பம்''  என்கிறார்  நாளைய  சொற்பொழிவாளர்  வைஷ்ணவி லட்சுமி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai