என்றும் இளமையான சந்தேரி சேலைகள்!

மத்திய பிரதேசம்  தென்மேற்குப் பகுதி  அருகே உள்ள  பெட்வா  நதிக்கரையில் அமைந்துள்ள  குணா  ( அசோக் நகர்)  மாவட்டத்தைச் சேர்ந்த  சிற்றூரான சந்தேரியில்  நெய்யப்படும்  கைத்தறிப்  பட்டு - பருத்தி  மற்றும்  
என்றும் இளமையான சந்தேரி சேலைகள்!

மத்திய பிரதேசம்  தென்மேற்குப் பகுதி  அருகே உள்ள  பெட்வா  நதிக்கரையில் அமைந்துள்ள  குணா  ( அசோக் நகர்)  மாவட்டத்தைச் சேர்ந்த  சிற்றூரான சந்தேரியில் நெய்யப்படும் கைத்தறிப்  பட்டு - பருத்தி  மற்றும்  பட்டுச் சேலைகள் இந்தியாவின் மிகப் பழமையான  பாரம்பரிய மிக்க   சேலைகளாகும்.

இந்த சேலைகளின் அழகையும் நேர்த்தியையும் மகாபாரதத்திலேயே குறிப்பிட்டிருப்பதாக ஒரு தகவலும் உண்டு.  கண்ணைக் கவரும் வண்ணங்கள், அபூர்வமான நெசவு,  வித்தியாசமான  கலை நயமிக்க பார்டர்கள்,  லேசான எடை, ஒரளவு ஒளி புகுமளவிலான தரம் ஆகியவை இந்த சேலைகளின்  சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும்.

ஆரம்ப காலங்களில்  சந்தேரி  நெசவாளர்கள்  பெரும்பாலும்  முஸ்லீம்களாக இருந்தனர். 1350-ஆம் ஆண்டுக்குப்  பின்னர்  ஜான்சியிலிருந்து  இங்குவந்து குடியேறிய கோஸ்டி நெசவாளர்கள்  மட்டுமே  இப்போது  இந்த உலகப்  பிரசித்திப் பெற்ற சேலைகளை  நெய்கின்றனர்.

மொகலாயர்  ஆட்சி காலம் நெசவாளர்களின்  பொற்காலமாக  விளங்கியது. வரலாற்று குறிப்பின்படி, மிக நீளமாகவும் அகலமாகவும் நெய்யப்பட்ட துணியை  சிறிய அளவில் மடித்து  ஒரு சிறு மூங்கில்  குழாயில்  அடைத்து மொகலாய மன்னர் அக்பருக்கு அன்பளிப்பாக  அளிக்கப்பட்டதாம்.  அதை வெளியில் எடுத்து பிரித்தபோது, ஒரு யானையை முழுமையாக போர்த்துமளவுக்கு பெரியதாக இருந்ததைப் பார்த்த அக்பர் பிரமித்துப் போனாராம். சிறப்பு மிக்க சந்தேரி நெசவுத்  தொழிலுக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். பாரம்பரியம்  மிக்க இந்த சேலைகள்  தூய்மையான பருத்தி இழைகளைக் கொண்டு  கைகளால்   நெசவு  செய்து  தயாரித்து  அரச குடும்பத்தினர்களுக்கும்  அனுப்பிவைப்பதுண்டு. 

மொகலாயர்கள் மட்டுமின்றி, பரோடா மகாராணி, அகல்யாபாய், ஹோல்கரும் இந்த சேலைகளுக்கு வாடிக்கையாளர்களாவர்,  தரம் வாய்ந்த சிந்தேரி தலைப்பாகைகள் கூட மிகவும் பிரபலமானதாகும். மராட்டிய மன்னர்களுக்காகவே  தயாரிக்கப்பட்ட இந்த  தலைப்பாகைகளை  ஆறு அங்குல தறியில்  விசேஷமாக  நெய்வார்களாம்.  ஆனால்  இன்று எந்த நெசவாளியும்  தலைப்பாகை  தயாரிப்பதில்லை.

சந்தேரி சேலைகளை  நெய்யும்போது  300  எண்ணிக்கையில்  கைகளால்   பாவு எடுக்கப்பட்ட நூலை பயன்படுத்துவார்கள். டாக்கா மஸ்லின்  என்று பிரபலமான  இந்த நூற்பு  முறை,  தற்போது  நெசவுத் தொழிலில்  ஏற்பட்டுள்ள மாற்றங்களால்  மறைந்துவிட்டது.  மேலும்  பிரிட்டிஷார்  மான்செஸ்டரிலிருந்து குறைந்த விலையில்  120 முதல்  200  எண்ணிக்கை  கொண்ட  பருத்தி நூல்களை இறக்குமதி  செய்ததால், சந்தேரி சேலை  உற்பத்தி  பாதிக்கத் தொடங்கியது. இறக்குமதி செய்யப்படும் நூலைப் பயன்படுத்தினால் சேலைகள் பளபளப்பாக இருப்பதில்லை  என்பதால்  சந்தேரி  நெசவாளர்கள்  பட்டு நூலை பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் பருத்தி நூலால்  தயாரிக்கப்படும் சந்தேரி   சேலைகளை  மார்க்கெட்டில் காண்பது  அரிதாகிவிட்டது. மாறாக பட்டுச் சேலைகள்  அதிகரிக்கத் தொடங்கின.

50- ஆண்டுகளுக்கு  முன்பு வரை சந்தேரி சேலைகளில் டையிங்  செய்ய குங்குமப்பூ  மற்றும் மலர்களால்  தயாரிக்கப்படும்  இயற்கையான  வாசனை மிக்க வண்ணங்களைப் பயன்படுத்தினர். சேலையின் உடல் பகுதிக்கும் தலைப்புக்கும் ஏற்ற வண்ணங்களையும், டிசைன்களையும்  அமைப்பதில் சிறப்பாக செயல்பட்டனர். காலத்திற்கேற்ப தற்போது சந்தேரி நெசவாளர்களும் ரசாயன டையிங்  பயன்படுத்துவதோடு,  கண்களைக் கவரும் தங்க நிற பார்டரையும், முந்தானைகளில் தங்க  இழைகளையும் சேர்க்கின்றனர். தலைப்புகளில்  பறவைகள், பழங்கள்,  மலர்கள்,  தாவரங்கள் போன்றவை இடம் பெறுவதுண்டு. சில சேலைகளில்  சரிகை வேலைப்பாடுகள் செய்வதும் உண்டு, 12-ஆம் நூற்றாண்டு முதல் இந்த சந்தேரி  சேலைகள், பாரம்பரியமாக  நெசவாளர்களின்  ஜீவாதாரமாக விளங்குவது  ஆச்சரியமான விஷயம்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com