ஓடு... ஓடு...இலக்கை எட்டும் வரை...!

இளம்பெண்கள் துணிந்து விளையாட்டை வாழ்க்கையாக எடுத்துக் கொள்ளலாம். 100 சதவீத உழைப்பை கொடுத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
ஓடு... ஓடு...இலக்கை எட்டும் வரை...!

இளம்பெண்கள் துணிந்து விளையாட்டை வாழ்க்கையாக எடுத்துக் கொள்ளலாம். 100 சதவீத உழைப்பை கொடுத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். மகனோ அல்லது மகளோ விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தால் அவர்களுக்கு பெற்றோர் ஆதரவளிக்க வேண்டும்.
அவர்களால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் 3 முறை பங்கேற்று முதல் 10 இடங்களுக்குள் வந்தவர். சிறந்த குடிமக்களுக்கு வழங்கப்படும் நான்காவது மிக உயரிய விருதான பத்ம ஸ்ரீ, விளையாட்டுத் துறையில் சாதனை புரிபவர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா ஆகிய விருதுகளைப் பெற்றவர். ஆசியப் போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப்ஸ், ஒலிம்பிக், உலகக் கோப்பை, உலக சாம்பியன்ஷிப் உள்பட பல போட்டிகளில் பங்கேற்று நாட்டுக்காக நூற்றுக்கும் அதிகமான பதக்கங்களை அள்ளி வந்தவர்.
1984 ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் சில மணித் துளி இடைவெளியில் பதக்க வாய்ப்பை இழந்தவர். ஒலிம்பிக்கில் தடகளப் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் அடுத்த தலைமுறையை உருவாக்கிவரும் இந்தியாவின் தங்க மங்கை பி.டி.உஷாவை சந்தித்தோம்:
பயிற்சியாளர் அல்லது வீராங்கனை எது கடினம்?
இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. ஒரு வீராங்கனையாக இருப்பதைக் காட்டிலும் பயிற்சியாளராக இருப்பது கடினமானது. ஏனென்றால், வீராங்கனையாக இருக்கும்போது நமக்கு என்ன தேவை என்பது நமக்கு தெரியும். ஆனால், பயிற்சியாளர் பணியை மேற்கொள்ளும்போது பிற வீராங்கனைகளுக்கு விளையாட்டு நுணுக்கங்களை கற்றுத் தர வேண்டும் என்பதால் அவர்களுக்கு என்ன வரும் என்பதை கண்டறிய வேண்டும். இது சவால் நிறைந்த ஒன்றாகும். பயிற்சியாளராக இருப்பது கடினம். எனினும், அதை விரும்பிச் செய்கிறேன்.
இளம் வீராங்கனைகளில் யார் அடுத்த பி.டி.உஷா?
என்னை மாதிரி யார் அடுத்தது என்று கூறுவது கஷ்டம். ஏனென்றால், எனது காலத்தில் 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டம், தடை ஓட்டம் என ஒரே நேரத்தில் பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றிருக்கிறேன். அதேபோன்று இப்போது உள்ள இளம் வீராங்கனைகளால் பங்கேற்க முடியுமா என்று தெரியவில்லை. ஈட்டி எறிதலில் இளம் வீரர் நீரஜ் சோப்ரா, கடந்த ஆண்டு 20 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீ ஓட்டத்தில் தங்கம் பதக்கம் வென்ற ஹிமா தாஸ் ஆகியோர் சிறப்பாக சாதித்து வருகின்றனர். நமது நாட்டில் பல சிறந்த வீரர், வீராங்கனைகள் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
உஷா தடகளப் பயிற்சி பள்ளி? இதுவரையிலான சாதனை?
கோழிக்கோடு மாவட்டத்தில் கினாலூர் என்ற கிராமத்தில் உஷா தடகளப் பயிற்சி பள்ளியை 2002-ஆம் ஆண்டில் தொடங்கினேன். எனது மாணவிகள் 2 பேர் ஒலிம்பிக்கில் பங்கேற்றிருக்கின்றனர். டின்டு லுக்கா 2 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றார். எனக்கு பிறகு மிக இளம் வயதில் (17) ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஜிஸ்னா மாத்யூ எனது பள்ளியில் பயிற்சி எடுத்தவர். ஒலிம்பிக்கில் தடகளத்தில் இந்தியா நிச்சயம் பதக்கம் வெல்லும். அதில் சந்தேகம் வேண்டாம்.
பயிற்சியாளராக உங்களுடைய குறிக்கோள்?
ஒலிம்பிக்கில் தடகள பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தர வேண்டும் என்பதே எனது ஒரே குறிக்கோள். அதற்காக எனது மாணவிகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகிறேன். இலக்கை எட்டும் வரை ஓடிக் கொண்டிருப்பேன்.
சர்வதேச அளவில் தடகளத்தில் இந்தியா ஜொலிக்க இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
எனது காலத்தில் இருந்த வசதிகளுடன் ஒப்பிடும்போது இப்போது அதிக வசதிகள் உள்ளன. ரஷியாவின் மாஸ்கோ நகரில் முதல் முறையாக ஒலிம்பிக்கில் நான் பங்கேற்றபோதுதான் சிந்தெடிக் ஓடு தளத்தைக் கண்டேன். ஆனால், இப்போது, ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மாவட்டங்களிலும் சிந்தெடிக் ஓடு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, ஆண்டு முழுவதும் பயிற்சி அளிப்பதற்கான முகாம்கள் இங்கே நடைபெறுகின்றன. முன்பெல்லாம் பயிற்சி பெறுவது அவ்வளவு கடினமாக இருந்தது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். "கெலோ இந்தியா' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது வரவேற்க வேண்டிய ஒன்று.
பல வீரர்கள் இன்னமும் போதிய வசதிகள் கிடைக்காமல் உள்ளனர். 14 வயதுக்கு உள்பட்டவர்களின் விளையாட்டுத் திறமையைக் கண்டறிந்து அவர்களுக்கு நீண்ட காலப் பயிற்சியை அளிக்க வேண்டும். அதைதான் உஷா பயிற்சி பள்ளி செய்து வருகிறது. சில தேர்வுகளை வைத்து இளம் வீராங்கனைகளைத் தேர்வு செய்வோம். பின்னர், அவர்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை அளித்து தொடர்ந்து பயிற்சி வழங்குவோம். இவை அனைத்தும் இலவசம்தான். கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.
இப்போது எத்தனை பேர் பயிற்சி எடுத்து வருகிறார்கள். செலவுகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?
தற்சமயம் 20 பேருக்கு பயிற்சி அளித்து வருகிறேன். மத்திய அரசும், மாநில அரசும் உதவி செய்தன. தினசரி செலவுகளுக்கு ஸ்பான்சர்ஷிப்பைப் பெற முயற்சி செய்து வருகிறேன். முன்பு கிடைத்தது போன்று இப்போது அதிக அளவில் உதவிகள் கிடைப்பதில்லை.
வீராங்கனையாக இருக்கும்போது யார் உங்களின் ரோல் மாடல்? இப்போது யாரை ரோல் மாடலாக கருதுகிறீர்கள்?
வீராங்கனையாக இருக்கும்போது அப்போது தடகளத்தில் சாதனை படைத்தவர்களைப் பார்த்து அதுபோல் நானும் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். என்னைப் பொருத்தவரை வெற்றி பெற வேண்டும் என்பதையே மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். பயிற்சியாளராக யாரையும் ரோல் மாடலாக கருதவில்லை. எனது மாணவிகள் வெற்றி பெற்றால் அதுவே போதும்.
நமது நாட்டில் தற்போது விளையாட்டுத் துறை எப்படி இருக்கிறது?
1980-ஆம் ஆண்டு கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் இப்போது பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இருப்பினும், ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டால் வசதிகள் இங்கே குறைவுதான். நாம் இன்னும் வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். பள்ளிகளில் விளையாட்டையும் ஒரு கட்டாயப் பாடமாக்கினால் நன்றாக இருக்கும். பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
உங்கள் குடும்பம்?
கணவர், மகன், தாயார், உறவினர்கள் என வாழ்க்கை அழகாகச் சென்றுகொண்டிருக்கிறது. மகன் எம்.பி.பி.எஸ் படித்து முடித்திருக்கிறார். ஸ்காட்லாந்தில் மேல்படிப்பு படித்து வருகிறார். கணவர் எனக்கு பக்க பலமாக இருந்து வருகிறார். தாயாரும் எனக்கு ஆதரவளித்து வருகிறார். சகோதர, சகோதரிகளும் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
விளையாட்டுத் துறையை வாழ்க்கையாக இளம்பெண்கள் துணிந்து எடுக்கலாமா?
எனது காலத்தில் ஒரு வசதியும் இல்லை. இருப்பினும், எனக்கு இருந்த ஆர்வமும், பெற்றோர் தந்த உந்துதலும் என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. சர்வதேச அளவில் 103 பதக்கங்களை வென்றிருக்கிறேன். இளம்பெண்கள் துணிந்து விளையாட்டை வாழ்க்கையாக எடுத்துக் கொள்ளலாம். 100 சதவீத உழைப்பை கொடுத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். மகனோ அல்லது மகளோ விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தால் அவர்களுக்கு பெற்றோர் ஆதரவளிக்க வேண்டும். அவர்களால் நிச்சயம் வெற்றி பெற முடியும். நாட்டுக்கும் அவர்கள் பெருமை சேர்ப்பார்கள்.
தடகளம் அல்லாமல் உங்களுக்கு மிகவும் பிடித்த வேறு விளையாட்டு?
கால்பந்து, பாட்மிண்டன்.
தற்போது உங்களுக்கு பிடித்த தடகள வீரர், வீராங்கனைகள்?
நீரஜ் சோப்ரா, ஹிமா தாஸ்.
சுயசரிதை?
எனது சுயசரிதையை எழுதி வருகிறேன். விரைவில் புத்தகம் வெளிவரும்.
உங்களது வாழ்க்கை திரைப்படமாகப் போவதாக வந்தத் தகவல்?
உண்மைதான். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் யார் நடிக்கப் போவது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

சந்திப்பு - படங்கள்:
மணிகண்டன் தியாகராஜன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com