Enable Javscript for better performance
என் பிருந்தாவனம்! 23 - பாரததேவி- Dinamani

சுடச்சுட

  
  BRINDHAVAN_THODAR

  அன்று ஒரு நாள்தான் மறுநாள் வேலை முடிந்துவிடும். நீ பத்திரமா இரு. கமலாவும், அம்மாவும் வீட்டுக்கு வந்திருவாங்க' என்று சொல்வதற்காகவே வீட்டிற்கு வந்தான் தங்கராசு.
   வரும்போதே நெல் பொலி போட்ட தூசியெல்லாம் போக கிணற்றில் ஒரு முங்கி, முங்கி அரைக்குளிப்பாக குளித்து முடித்தான். வேப்பங்குச்சியின் தீட்டலில் அவன் பல் வரிசை பளபளத்தது. அவன் அடர்வான முடி காற்றுக்கு கலைந்து முன் நெற்றியில் ஊஞ்சலாடியது. அவன் தோளில் ஒரு துண்டு மட்டும் கிடந்தது. அதன் நுனி அவனின் பரந்த மார்பை தொட்டுக் கொண்டிருந்தது.
   "கௌசி..'' என்று கூப்பிட்டுக் கொண்டே கதவை திறந்தவனின் மார்பில் ஓடிவந்து சாய்ந்த கௌசிகா, விம்மி, விம்மி அழ ஆரம்பித்தாள்.
   தங்கராசுவிற்குப் பதட்டமாயிருந்தது. எதுக்காவ இவ இப்படி அழுவுதா? நம்ம இல்லாத நேரத்தில ஏதாவது நடந்திருக்குமோ? அவன் கதவைத் தாள்ப் போட்டுவிட்டு வந்து, "என்னடா கௌசி, என்ன நடந்தது? எதுக்காவ நீ இப்படி அழுவுதே!'' என்று கேட்க,
   அவள் எதுவுமே சொல்லாமல் விம்மி, விம்மி ரொம்ப நேரம் அழுதாள்.
   அவள் கண்ணீரைத் துடைத்து அவள் முகத்தை தன் உள்ளங்கையில் ஏந்தினான். கௌசியின் முகத்தில் வழக்கம்போல் எந்த பகட்டான அலங்காரமுமில்லை. அதுவே அவனுக்கு அழகாக தெரிந்தது.
   அவன் அவளை அணைத்தான், "எதுக்காக நீ இப்ப அழுவுற?''
   "நீங்க எல்லாரும் என்ன தனியே விட்டுட்டுப் போயிட்டீங்க, நான் மட்டும் தனியா என்ன பண்றது''
   "அதுக்குத்தேன் உன்னக் கூட்டிட்டுப் போயி உங்க வீட்டுல விடுறேன்னு சொன்னேன். போவட்டும் வேல முடிஞ்ச மாதிரிதேன். அம்மாவும், தங்கச்சியும் இப்ப வந்திருவாங்க''
   " அப்ப நீங்க''
   "நான் களத்துக்கு போகணும். நூறு மூட நெல்லு வரைக்கும் பொலி ஏத்தி அம்பாரமா குமிஞ்சிருக்கு நாளைக்கு எல்லா நெல்லயும் அளந்துட்டோமின்னு வச்சிக்கோ. பெறவு எனக்கு களத்தில வேலயில்ல''
   "இன்னைக்கு நீங்க களத்துக்குப் போகக் கூடாது. நான் உங்கள போக விடமாட்டேன்''
   "கூறு கெட்டாப்பல (புத்தி) பேசாத, இன்னைக்கு நானு போயே ஆவணும்''
   "அதான் உங்கத் தம்பியும், வேலக்காரனும் இருக்காங்களே''
   " ஆயிரம்பேர் இருந்தாலும், நெல்லுக்குச் சொந்தக்காரன் நான் போயிதான் ஆகனும்''
   "போகக் கூடாது, போகமாட்டேன்னு எனக்கு சத்தியம் செஞ்சிக் கொடுங்க'' என்று தன் கையை நீட்டினாள் அவள். உள்ளங்கையிலும், விரல்களிலும் மருதாணி வரையப்பட்டிருந்தன.
   தங்கராசுவிற்கு சிரிப்பாய் வந்தது, "இதுக்கெல்லாம் உனக்கு சத்தியம் செஞ்சிக் கொடுத்தா என்னப் போல முட்டாள் ஒருத்தனும் இருக்க மாட்டான்'' என்று சொல்லிக் கொண்டே எழப்போனவனை, பாய்ந்து தன் கைகளால் அணைக்க வந்தாள் கௌசிகா.
   அவளுக்கு ஏனோ அவன் இருந்த அந்த கோலம் என்றைக்குமில்லாமல் இன்றைக்கு ரொம்பப் பிடித்திருந்தது.
   தங்கராசு அவளிடமிருந்து விலகி நின்றான். களத்தில் குவிந்திருக்கும் தானியங்கள் விவசாயிகளுக்கு தெய்வத்திற்கு சமமானது. ஒரு பெண்ணோடு கூடிவிட்டு போனால் எந்தக் காலத்திலும் எந்தத் தானியமும் நம் வீடும் தங்காது காட்டிலும் விளையாது என்பது பரம்பரை சம்பிரதாயம்.
   இன்னும் தன்னை நெருங்க முயலும் கௌசிகாவை கோபத்தோடுப் பார்த்தான். அவன் முகம் கனன்று சிவந்தன. "இதோ பாரு கௌசி, விவசாயியா இருந்தாக் கூட அவங்களுக்கும் சில கட்டுப்பாடும், நேர்மையுமிருக்கு, விவசாயியா இருக்கவங்களுக்கு ஓய்வும், ஒழிச்சலும் கிடையாது. ராத்திரியும் சரி, பகலும் சரி காடுதான் அவனுக்குப் பிறப்பிடம் மட்டுமல்ல இருப்பிடமும் கூட. நிலவு வரும்போது வெள்ளிகளே இல்லாத இருட்டு வானத்த மட்டுமல்ல, இருண்ட மேகத்தையும் பார்த்ததில எங்கே மழ வந்திருமோன்னு நானு என் உயிர் கூட்டுல நெருப்ப வளத்துக்கிட்டு இருக்கேன். ஒரு மழைத்துளி விழுந்தாலும் எல்லாம் நாசம். நான் ஒரு விவசாயின்னு தெரிஞ்சுதான் கட்டிக்கிட்டே. நமக்கு கல்யாணமாகி ஆறுமாதத்துக்கு மேல ஆவப்போவுது. நீ வந்து காட்டுல வேல செய்யாட்டாலும் பரவாயில்ல'' என்று அவன் சொல்லி முடிக்குமுன்பே,
   "அப்படி வேற உங்களுக்கு நெனப்பு இருக்கா, அதனாலதான் என்ன சிறைக் கூண்டுல வச்சமாதிரி அடைச்சிட்டுப் போறீகளா?'' என்றவள்.
   "அய்யோ... அம்மா... என்ன பாழுங்கிண்ணத்துல தள்ளீட்டீங்களே'' என்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
   தங்கராசு திணறிப் போனான். ஒரு நிமிஷம் ஒரு ஊதல் காற்று அவன் மேனியைத் தடவி விட்டுப் போக அவன் திடுக்கிட்டுப் போனான். ஒருவேளை மழை வந்துவிடுமோ? குவிந்திருக்கும் நெல் அம்பாரம் நாசமாகி விடுமோ? இந்த நேரத்தில் இவளை சமாதானப்படுத்திக் கொண்டிருக்க முடியாது என்று கதவைத் திறக்கப் போக,
   கௌசிகா ஓடி வந்து அவனை வழிமறித்தாள்.
   "கௌசி, வழியை விடு என்னை முரடனாக ஆக்கிவிடாதே'' என்று தங்கராசு சொன்னதும்,
   கௌசிகா, தலைவிரிக் கோலத்தில் முகத்தில் ரௌத்திரம் பொங்க,
   "இப்ப உங்களுக்கு நான் முக்கியமா, களத்தில கிடக்க நெல் முக்கியமா'' என்று சீற்றத்தோடு கேட்டாள்.
   தன் உள்ளத்துக்குள் எழுந்த கோபத்தை ஒரு நிமிஷம் பொறுமையுடன் அடக்கிய தங்கராசு.
   " இப்போதைக்கு எனக்கு களத்தில கிடக்கும் நெல்தான் முக்கியம்'' என்றான்.
   "அப்போ உனக்கு நான் தேவையில்லைன்னா, என்னை இப்பவே கூட்டிக்கிட்டுப் போயி எங்க வீட்டுல விட்டுட்டுபோ'' என்று அவனைப் பற்றி உலுக்க அவன் அவளை செந்தூக்காக தூக்கி கட்டிலின் மீது போட்டுவிட்டு களத்துக்காக நடந்தான்.
   வாசல் வரைக்கும் வந்த கௌசிகா, "நீ போறதுக்குள்ள உன் நெல்லெல்லாம் நனஞ்சி நாசமா போகட்டும்... நாசமா போகட்டும்...'' என்று கத்த தங்கராசு உடைந்து போனான். அந்த நேரத்தில் நிலா வேறு இருட்டு மேகத்துக்குள் மறைந்துக் கொண்டு அவனைப் பயமுறுத்தியது.
   வீட்டிற்குள் வந்த கௌசிகா, தான் வந்தபோது கன்றுக் குட்டியாயிருந்து இப்போது கிடேரியாக இருந்த பசுவின் முன்னால் போய் நின்றாள்.
   அந்தப் பசு என்னை முட்டி தூக்கி எறிய வேண்டும். அதைப்பார்த்து தன் புருஷன் எப்படி துடிக்கிறான் என்பதை கண் குளிர பார்க்க வேண்டும் என்ற வக்கிரமான எண்ணம் ஒன்று அவளுக்குள் உருவானது.
   ஆனால் அந்தப் பசுவோ இவளைக் கண்டதும் பாசத்தோடு தன் முகத்தை நீட்டியது. அதனால் அவளின் கோபம் இன்னும் அதிகமானது.
   வீட்டிற்குள் போய் பழம் வெட்டும் கத்தியை எடுத்து வந்தாள், அந்தக் கிடேரியை கட்டியிருந்த கயிற்றை அறுத்துவிட்டாள். பக்கத்திலிருந்த கம்பை எடுத்து அதன் முதுகில் ஒன்று போட,
   அது, ""ம்மா...'' என்று அலறிக் கொண்டு கொல்லைப் பக்கமாக ஓடியது. அதே வேகத்தோடும், கோபத்தோடும் வீட்டிற்குள் வந்தவள், இறுக தாழ்ப்பாளைப் போட்டாள். அப்படியே கட்டிலில் சாய்ந்தாள். கோபத்தில் அவள் நெஞ்சம் குமுறிக் கொண்டிருந்தது.
   இருட்டியப் பிறகு வீட்டிற்கு வந்த சங்கரி வழக்கம்போல், இரை போடுவதற்காக தொழுவில் போய் பார்த்தாள் கிடேரியைக் காணாமல் அலறினாள்.
   "அய்யய்யோ, கொடுமையே இன்னைக்குள்ள விலைக்கு வித்தாலும் பத்தாயிரத்துக்கு விக்கலாமே, எவனோ கள்ளப் பயதேன் வந்து கிடேரிய அவுத்துக்கிட்டுப் போயிருக்கான். அவன் கையில புத்துப் புறப்பட, அவன் நாசமாத்தேன் போவான்'' என்று அலற,
   கமலா, "எப்படிம்மா சொல்ற களவாணிப் பயதேன் அத்தான்னு'' என்று கேட்டாள் சந்தேகத்தோடு.
   "கவுத்தப் பார்த்தாலே தெரியுதே, இந்தா பாரு கவுறு இப்படியா இருக்கும்'' என்று அறுந்து கிடந்த கயிறை அவிழ்த்துக் கொண்டு வந்து காட்டினாள்.
   அந்தக் கயிற்றைப் பார்த்தவுடன் கமலாவுக்கு சந்தேகம் தீர்ந்தது.
   "ஆமாம்மா, எவனோ வேணுமின்னு கயிர கத்தியால அறுத்து கிடேரியக் கொண்டு போயிருக்கான்'' என்றாள்.
   சங்கரிக்கு வயிற்றெரிச்சல் தீரவில்லை, "அவன் கையில குட்டம் புறப்பட்டு, அவன் புழுவா, புழுத்துதேன் சாவான்'' என்று இன்னும் வசவான வசவு வஞ்சிக் கொண்டிருக்க,
   படாரென்று கதவைத் திறந்தாள் கௌசிகா.
   தலைவிரி கோலமாக அவள் நின்றதை புரியாமல் சங்கரியும், கமலாவும் பார்க்க..
   "அந்த மாட்ட நான்தான் அவுத்து விரட்டிவிட்டேன். இப்ப என்ன செய்யப் போறீக?'' என்று கௌசிகா கேட்க, சங்கரியும், கமலாவும் அஞ்சி ஒடுங்கி நின்றார்கள்.
   - தொடரும்..
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai