Enable Javscript for better performance
தோட்டம் அமைக்கலாம் வாங்க...நா.நாச்சாள்- Dinamani

சுடச்சுட

  

  தோட்டம் அமைக்கலாம் வாங்க...நா.நாச்சாள்

  By DIN  |   Published on : 03rd July 2019 10:52 AM  |   அ+அ அ-   |    |  

  mm3

  சென்ற இதழில் வீட்டுத்தோட்டத்தில் கிடைக்கும் நன்மைகளையும் அதனால் ஏற்படும் உடல் ஆரோக்கியத்தையும், இன்றைய சூழலுக்கு அவசியமானவையும் பார்த்தோம்.
   இந்த இதழில் எளிமையாக இருக்கும் இடத்தில் எவ்வாறு வீட்டு தோட்டத்தை அமைப்பது, என்னென்ன பொருட்களை பயன்படுத்தி வீட்டுத்தோட்டம் அமைப்பது என்பதையும் வீட்டுத் தோட்டத்திற்கு மிக முக்கியமான மண்ணை பற்றியும் தெரிந்து கொள்வோம்:
   யாருக்குதான் மரஞ் செடிகளைப் பிடிக்காது. என்ன... இன்றைய நவீன உணவுகளால் ஏற்படும் உடல் அசதி, வேலை பளு, சோம்பல் போன்றவற்றால் எதையும் செய்ய மனமில்லாத ஒரு நிலை பலரின் மத்தியிலும் உள்ளது. யாராவது நம் வேலைகளையெல்லாம் செய்து கொடுத்தால் போதும், ஒரு கையில் மொபைல், மறுகையில் நொறுக்குத்தீனி, எதிரிலோ தொலைக்காட்சி... இதற்கெல்லாம் காரணம் முழுக்க முழுக்க நம்முடைய வாழ்க்கை முறையும் உணவு பழக்கமும் தான் என்பதை மறந்துவிடக் கூடாது. குறிப்பாக நச்சுகள், ரசாயனங்கள் மற்றும் பலவகையான உணவு ரசாயன சேர்க்கைகள் தான் காரணம். இதிலிருந்து வெளிவரவும், ஆரோக்கியமான குடும்ப சூழல், உடல் நிலை பெறவும் அவசியமாகிறது வீட்டில் நமக்கான தோட்டம்.
   சரி... தோட்டம் என்றதும் பலர் ஏதோ அதற்கு நிறைய இடம் வேண்டும், நிறைய செடி கொடிகள் இருந்தால்தான் அது தோட்டம் அதெல்லாம் இன்றைய நகர வாழ்க்கையில் சாத்தியமில்லை என்று நினைக்கிறோம். நமக்கு தேவையான நான்கு செடிகள் இருந்தாலே அது வீட்டு தோட்டம் தான். உதாரணத்திற்கு கற்றாழை, துளசி, கற்பூரவள்ளி, கருவேப்பிலை இப்படி எந்த பெரிய பராமரிப்பும் இல்லாத இந்த நான்கு செடிகள் இருந்தாலே நாமும் வீட்டு தோட்டம் வைத்திருப்பவர் தான்.
   செடி வளர்க்க இடத்தேர்வு:
   செடிகளை வளர்க்க எந்த பிரத்யேக இடமும் தேவையில்லை. சாதாரணமாக சூரிய ஒளி படக்கூடிய வீட்டு வாசற்படி யருகில், ஜன்னல்கள், வராண்டா, மொட்டை மாடி என வீட்டை சுற்றி இருக்கும் எந்த இடத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
   செடி வளர்க்க தேவைப்படும் தொட்டிகள்:
   இதற்கென்று பிரத்யேகமாக சந்தையில் கிடைக்கும் தொட்டிகளைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருக்கும் உடைந்த டப்பாக்கள், வாளிகள், பழங்கள் வாங்கிய மரப்பெட்டிகள், அரிசி சாக்கு பைகள், மறுசுழற்சி செய்யவேண்டிய சாதாரண நெகிழி, குடிநீர் பாட்டில்கள் என ஆரம்பத்தில் செலவின்றி ஒரு கொள்கலன்களை தேர்வு செய்து தயார்படுத்திக் கொள்ளவேண்டும். அவற்றில் மிக முக்கியமானது எந்த கொள்கலனாக இருந்தாலும் அவற்றின் அடியில் சுற்றளவுக்கு ஏற்ப நீர்வடிகால் வசதி செய்யவேண்டும். அதாவது செடிகளுக்கு ஊற்றப்படும் தண்ணீர் தொட்டிக்குள் தேங்கிவிடாமல் வெளியேற சிறுசிறு துளைகள் இடவேண்டும்.
   மண் வளம்:
   அடுத்ததாக செடிவளர்க்க மிக முக்கியமான மண்ணைப்பற்றி தெரிந்துகொள்வோம். இன்றைய தொழில்நுட்பங்கள் மண்ணில்லாத விவசாயம், மண்ணில்லாத தோட்டம் என்றெல்லாம் பல சாகசங்களை செய்துதான் வருகிறது. அதற்கெல்லாம் நாமும் பலியாகிவிடக் கூடாது.
   செடிவளர்ச்சிக்கு மிகமிக முக்கியமானது பஞ்சபூதங்களின் ஒன்றான மண்.. இந்த மண்ணில் விளையும் பொருட்களை உண்டு நம் உடலை வளர்ப்பதாலேயே நம் உடலுக்கு அன்னமயகோசம் என்ற பெயருண்டு. இயற்கையாக மண்ணிலிருக்கும் பல தாதுக்கள் நேரடியாக நமது காய்கனி, தானியங்களுக்கு கிடைக்கப் பெற்று அவற்றை நாம் உண்பதால் பலவகையான தாது குறைபாட்டு நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு சாதாரணமாக நம் கடல், காற்று, மண் ஆகியவற்றில் கொட்டிக்கிடக்கும் அயோடின் என்ற தாது நம் காய்களிலும் பொதுவாக நிரம்பியிருக்க வேண்டிய ஒன்று.. ஆனால் இந்த நவீன விவசாயத்தாலும், ரசாயனங்களைக் கொண்டும் வளர்க்கப்படும் இன்றைய காய்களில் இந்த அயோடின் தாது பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. இதனால் அதிகளவில் நம்மவர்கள் தைராய்டு நோய்களுக்குள்ளாகின்றனர். இதைபோல் பல நோய்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள கட்டாயம் இயற்கையான மண்ணில்தான் செடிகளை வளர்க்கவேண்டும்.
   செடிகளுக்கு தேவையான மண்கலவையை எவ்வாறு தயாரிப்பது.
   மண்ணும் மணலும் அதனுடன் குப்பைகளும் சேர சிறந்த செடி வளர்ச்சியை பெறலாம். இன்றைய சூழலில் இருக்கும் மண் தட்டுப்பாடு காரணமாக இந்த முறையில் இன்னும் சிலவற்றை சேர்த்து மண்கலவையினை தயார் செய்யலாம். வளமான மண் அல்லது செம்மண் ஒரு பங்கிற்கு மண்புழு உரம் (வரும் இதழ்களில் வீட்டுக் காய்கறி கழிவிலிருந்து மண்புழு உரம் தயாரிப்பு முறையை தெரிந்துகொள்ளலாம் ) ஒரு பங்கும், மக்கிய எரு ஒருபங்கும், கறித்தூள், சாம்பல் அல்லது மணல் மற்றும் சுற்றுப்புறத்தில் கிடைக்கும் சிறிது மண் ஒருபங்கும், இலைதழை, மக்கும் குப்பை அல்லது தேங்காய் நார்கழிவு ஒருபங்கும் என ஐந்து பங்குகளையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு வேப்பம்புண்ணாக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மண்கலவையினை நமது கொள்கலன்களில் அல்லது மண் தொட்டிகளில் நிரப்பவேண்டும். இந்த மண் கலவை செடிகளுக்கு சிறந்த வளர்ச்சியினை அளிக்கக் கூடியதாக இருக்கும்.
   அடுத்த இதழில் இந்த மண்கலவையில் எவ்வாறு விதைப்பது என்பதையும் விதைகளைப்பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
   
   

  kattana sevai