Enable Javscript for better performance
என் பிருந்தாவனம்! 24- Dinamani

சுடச்சுட

  
  BRINDAVANAM

  நெல் கருதறுப்பு மட்டுமல்ல, எல்லா தானிய அறுப்புகளும் முடிந்துவிட்டன. ஊருக்குள் புதுதானிய வாசனையும், புது தட்டை வாசனையும் காற்றோடு கலந்து வீசியது.
   அந்த வாசனையை முகர்ந்து, முகர்ந்து மக்கள் மகிழ்ந்தார்கள் அவர்களின் உழைப்பின் வாசனையல்லவா அது...
   இப்போது தங்கராசுவிற்கு நேரம் நிறைய இருந்தது. தன்னை விட களத்திலிருக்கும் நெல்தான் பெருசு என்று சொல்லிவிட்டு போனாரே என்று பொருமிய கௌசிகா இப்போதெல்லாம் அவனைக் கண்டு மயங்குவதில்லை. ஓடி வந்து அவன் மீது சாய்வதில்லை. வீட்டில் அடுக்கியிருக்கும் நெல் மூட்டையையே கட்டிக் கொண்டு அழட்டும் என்று ஊடலாகத் திரிய ...
   தங்கராசுக்கும் பத்தாயிரம் ரூவா பெறும் கிடேரியை தொலைத்துவிட்டாளே. "ஏன் கௌசி இப்படி செஞ்சே...' என்று இவன் கேட்டதோடு சரி.
   சங்கரியும், ""தாயீ அடுத்த வருஷம் அது பால் மாடு இப்படி அத அவுத்து விட்டுட்டேயே எங்க போயி நானு அத தேடுவேன்'' என்றாள்.
   அவ்வளவுதான் ஓ.. வென்று கதறிக் கொண்டே வீட்டிற்குள் சென்று கதவை அடைத்தவள்தான், இரண்டு நாளாக கதவைத் திறக்கவுமில்லை சாப்பிடவுமில்லை எல்லோரும் கெஞ்சி, கெஞ்சி கூப்பிட்டுப் பார்த்தார்கள்.
   கடைசியாய் தங்கராசு, "இரும்மா நான் போய் அவ அப்பாவை கையோடு கூட்டிட்டு வாரேன்'' என்று சொன்னப்பிறகு தான் கதவைத் திறந்தாள்.
   மறுநாள் கொஞ்சம் ஆசுவாசமாயிருந்த தங்கராசுவிடம், "இங்க இருக்க மலையில கருப்பசாமி கோயில் இருக்காமே .. நான் கருப்ப சாமியை பார்த்ததேயில்ல. இன்னைக்கு அங்க போயிட்டு வருவோமா'' என்று
   கௌசிகா கேட்டதும்.
   "இன்னும் நாலு நாளைக்கு எங்கயும் போக முடியாது'' கௌசி என்றான் தங்கராசு.
   "எப்பதான் உங்களுக்கு லீவு இருக்குமாம். என்னம்மோ கவர்னர் வேலை பாக்கிறமாதிரி. எழுபது ஆயிரம் சம்பளம் வாங்குற மாதிரியும் பீத்திக்கிறீங்க'' என்று கௌசிகா கேட்டதும், சுருக்கென்றது தங்கராசுவுக்கு.
   "இதோபாரு கௌசி விவசாயம் செய்றவனுக்கு எப்பவும் லீவே கிடையாது. எந்த நேரமும் வேல இருந்துக்கிட்டுதான் இருக்கும். அவனா லீவு போட்டாத்தான் உண்டு''
   "நீங்க எங்கேயாவது, என்ன ஹனிமூனுக்கு கூட்டிட்டுப் போவீங்கன்னு என் பிரண்ட்ஸ் கிட்டயெல்லாம் சொல்லி
   யிருக்கேன். அவங்க ஆளாளுக்கு ஒரு ஊரச் சொல்லியிருக்காங்க, அவங்க சொன்ன ஊரையெல்லாம் நான் சொல்லட்டுமா''
   "ஒரு நாளைக்கு நீ என் கூட வா, நம்ம தோப்புகளச் சுத்திக் காட்டுறேன். ரொம்ப நல்லா இருக்கும். இளநி நிறைய சாப்பிடலாம். பக்கத்தில பனந்தோப்பு இருக்கும் பதினி, நுங்குன்னு சாப்பிட்டுவிட்டு வருவோம். ரொம்ப ஜாலியா இருக்கும்'' என்று தங்கராசு சொல்லவும்,
   கௌசிகாவிற்கு நாம் கல்யாண விஷயத்தில் ஏமாந்து விட்டோமோ என்று தோன்றியது. தினமும் ஓட்டலுக்கும், சினிமாவுக்கும் போகணும் பெங்களூர், மைசூரென்று டூர் போகலாம் என்று என்ன, என்னவோ கற்பனையில் மிதந்திருந்தவளுக்கு இந்த ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை.
   "எங்கேயும் கூட்டிட்டும் போக மாட்டீங்க, ராத்திரியும், பகலுமா என் கூட தங்கவும் மாட்டேங்குறீங்க. அப்பறம் நான் என்னதான் செய்வதாம்''
   "நீ ஒரு விவசாயியோட பொண்டாட்டி, அத ஞாபகம் வச்சிக்கோ. இந்த மாதிரி புருஷன் கூடவே எப்பவும் போவனும், அவன் நம்ம கூடவே இருக்கனுமின்னு நினைச்சா, நீ எதுக்காவ என்னக் கட்டிக்கிட்டே. மாத சம்பளக்காரன் எவனையாவதுப் பார்த்துக் கட்டிக்கிட வேண்டியதுதானே''
   "எப்படியோ கட்டிக்கிட்டேன்'' என்றவள் அவன் தோள்மீது சாய்ந்தவாறே, "எனக்குள்ள ஒரு ஐடியா இருக்கு அதுமாதிரி செய்யலாமா?'' என்றாள்.
   " சரி சொல்லு, என்ன ஐடியா?''
   "நாம பட்டணத்துக்குப் போயிரலாமா? அங்க, எங்கப்பா உங்களுக்கு ஸ்வீட் கடை வச்சி தரதா சொல்லியிருக்காரு'' என்றதும் சட்டென அவளை உதறிவிட்டு எழுந்தான் தங்கராசு.
   "ஒன்னு மட்டும் நல்லாப் புரிஞ்சிக்கோ கௌசி, விவசாயிக மட்டுமில்லாட்டா பெரிய, பெரிய பதவியில் இருக்கோமின்னு சொல்லி வியர்வைன்னா என்னன்னு கூடத் தெரியாம கார்ல போறாங்க பாரு அவங்களே சோத்துக்கு தாளம் போடணும். இன்னைக்கு விவசாயத்துக்கான நிலத்த அழிச்சி வெறும் உயிரில்லாத கட்டடமா கட்டிக்கிட்டிருக்காக அதுமட்டுமில்ல , நீர் வரத்துக்கான ஆறு, குளம், மரம் எல்லாத்தையும் காணாம செஞ்சதோடு வெட்ட வெளிபொட்டலா ஆக்கிட்டாங்க.
   "எங்க தாத்தா காலத்துல ஒரு ரூபாய்க்கு எட்டுபடி நெல்லு வித்துருக்கு, அதே எங்கப்பா காலத்தில நாலு படி நெல்லு ஒரு ரூபாய்க்கு வித்துருக்காங்க. ஆனா இன்னும் கொஞ்ச நாளையில ஒரு கிலோ அரிசி ஆயிரம், ரெண்டாயிரம்ன்னு விக்கப் போவுது. அப்பத்தான் தெரியும் எல்லோருக்கும் இந்த பூமியோட அருமையும், என்னை மாதிரி விவசாயிகளோட உழைப்பும்.
   "நீ ஒரு விவசாயியா மாற வேண்டாம். ஒரு விவசாயிக்குப் பொண்டாட்டியா இரு. சினிமா பாக்கிறதும், ஓட்டல்ல சாப்பிடறதும், கார்ல சுத்தறதும் ஒரு வாழ்க்கையாகாது அதை நீ புரிஞ்சுக்கோ'' என்றவன் ஆத்திரத்தோடு விருட்டென்று வெளியேறினான்.
   கௌசிகாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. முன், பின் யோசிக்காமல் இப்படி ஒரு பட்டிக்காட்டில் வந்துச் சிக்கிக் கொண்டோமே என்று கவலைப் பட்டவளுக்கு வாழ்க்கையே பெரிய சுமையாக தோன்றி அவளை அழுத்தியது. பட்டிக்காட்டு ஆட்களைப் பார்த்தாலே அவளுக்குப் பிடிக்கவில்லை. எல்லோரும் அழுக்கான ஆட்களாக தெரிந்தார்கள்.
   ஆண்களும் சரி, பெண்களும் சரி முதல்ல உடையை ஒழுங்கா உடுத்தி அழகாக இருக்காங்களா? வேறு பெண்களைப் பற்றி பேச வேண்டாம். அவளோடு இருக்கும் கமலாவே அப்படித்தானே இருக்கிறாள்.
   முதன் முதலாகப் பட்டணத்திலிருந்து வரும்போது, கமலா
   விற்காக சோப்பு, பவுடரென்று நிறைய அழகுப் சாதனப் பொருள்கள் வாங்கி வந்து ஆசையோடு கொடுத்தாள். ஆனால், கமலா அதை வாங்கவே மறுத்துவிட்டாள்.
   "இது எதுக்கு மதினி எனக்கு, இதெல்லாம் வீட்டுக்குள்ளேயே அடஞ்சி கிடக்கிறவங்களுக்குத்தான் லாய்க்கு. இதையெல்லாம் பூசிக்கிட்டு நான் வெய்யில போனேன்னு வச்சிக்கோங்க. வேர்த்துக் கொட்டிரும். பிறகு அந்த வேர்வையிலயும், இந்த அலங்காரத்திலயும் நானு ஒரு கோமாளி மாறித்தேன் தெரிவேன்'' என்றாள்.
   கமலா சொன்னதைக் கேட்டு கௌசிகாவிற்கு ஆச்சரியமாயிருந்தது.
   "ஏன் கமலா நீயும் ஒரு கன்னிப் பொண்ணுதான, நம்ம அழகா இருக்கணும், அதுக்காக அலங்காரம் பண்ணிக்கணுமின்னு தோணலயா?'' என்று கௌசிகா கேட்ட கேள்விக்கு,
   கமலா தன்னைத்தானேப் பார்த்துக் கொண்டே "ஏன் இப்ப நல்லாத்தான இருக்கேன். நாள் முழுக்க வெய்யில்லயே இருக்கிறதினால் கொஞ்சம் கருத்துப் போயிருக்கேன். மத்தபடி எனக்கு என்ன குறைவு இருக்குன்னு நீங்க நினைக்கீங்க'' என்று கமலா கேட்டபோது கௌசிகாவால் பதில் பேச முடியவில்லை. அவள் சொல்வதிலும் நியாயம் இருப்பது போல் தோன்ற வெறுமே சிரித்து வைத்தாள்.
   இவள் கமலாவிற்காக வாங்கிக் கொடுத்த பொருள் சீந்து வாரின்றி அவளிடமே கிடந்தன.
   கௌசிகாவிற்கும் கூட இப்போதெல்லாம் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் அவ்வளவாய் நாட்டமில்லை.
   அலங்கரித்து என்ன செய்வது பிறந்த வீட்டிலென்றால் உடுத்தியிருக்கும் டிரெஸ்சும், முகத்திலிருக்கும் மேக்கப்பும் கலையாமலிருக்க படாதபாடு படுவாள்.
   கொஞ்சமாய் கலைந்தால் கூட கவலைப்படுவதோடு பிரண்ட்ஸ்களுக்குள் ஒருத்திக்கு ஒருத்தி கேட்டுக் கொண்டு உடனே கைப் பையிலிருக்கும் சிறு கண்ணாடியைப் பார்த்து அதை சரிசெய்தப் பிறகுதான் அவளுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் நிம்மதியே தோன்றும்.
   உல்லாசமாக சிரித்தவாறு ஆட்டோவிற்கும், பேருந்துவிற்கும் தோளில் கைப்போட்டவாறு நடப்பார்கள்.
   சினிமாவிற்குப் போய் கும்மாளம் போடுவார்கள். வாலிபர்களைக் கண்டால் தங்களுக்குள் கிசு, கிசுத்துக் கொண்டு கலாய்ப்பார்கள். பெரிய பெரிய ஓட்டலுக்குப் போய் தங்களை எல்லாரும் பார்க்க வேண்டும் என்று உரக்கப் பேசி, சிரித்து தமிழ்நாட்டு உணவுகளை விட்டு விட்டு மேல் நாட்டு பானங்களை குடிப்பார்கள்.
   ஆனால், இவள் பண்ணும் அலங்காரத்தை தங்கராசுவை விட்டால் பார்ப்பதற்கு வேறு ஆள் இல்லை. இந்த வீட்டில் இருக்கும் கமலா கூட ஆட்டையும், மாட்டையும் அக்கரையாகப் பார்க்கிறாளே தவிர, இவளைத் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. கௌசிகாவிற்கு கோபமாக வந்தது. ஒரு திசையும் அறியாதப் பறவையைப் போல திகைத்தாள்.
   - தொடரும்..
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai