Enable Javscript for better performance
வெற்றிக்கான தனி சூத்திரம் எதுவுமில்லை!- Dinamani

சுடச்சுட

  

  வெற்றிக்கான தனி சூத்திரம் எதுவுமில்லை!

  By DIN  |   Published on : 10th July 2019 11:22 AM  |   அ+அ அ-   |    |  

  PADMA

  துடிப்பு மிக்க பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னிலை வகிக்கிறார்கள். பெருமை சேர்க்கிறார்கள். அப்படிப் பெருமை மிக்க பெண்ணாக வலம் வருபவர் தான் பத்மஜா சுந்துரு நிர்வாக இயக்குநர் மற்றும் இந்தியன் வங்கியின் தலைமை செயல் அதிகாரி. 1981-இல் தொடங்கிய இவரது பயணம் இன்றும் வெற்றிப் பயணமாகதொடர்கிறது. தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:
  உங்கள் சிறுவயது நினைவுகள்?
  என் தந்தை மத்திய அரசு ஊழியராக இருந்தார். அதனால் ஏறத்தாழ இந்தியா முழுவதும் அவர் சென்று பணியாற்ற வேண்டிய நிலை இருந்தது. நான் புனாவில் பிறந்தேன். என்னுடைய பள்ளிப்படிப்பு சிறுவயதில் ஷில்லாங்கில் அமைந்தது. வளர்ந்தபின் ஹைதராபாதிலும் என் கல்வியை தொடர்ந்தேன். நாங்கள் மூன்று சகோதரிகள் மிகுந்த உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் இருந்தோம். ஆண் பிள்ளைகள் இல்லாத வீடு எங்கள் வளர்ச்சிக்கு மிகுந்த ஊக்கம் கொடுத்த பெற்றோர் இப்படித்தான் அமைந்திருந்தது.
  படிப்பு விஷயத்தில் என் தாயார் மிகுந்த கண்டிப்பாக இருப்பார். என் தகப்பனார் அது பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைப்பட மாட்டார். ஆனால் என்னைப் பொருத்தவரை நான் எப்போதும் முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பேன். வேடிக்கையும் கேளிக்கையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நண்பர்களோடு கேலி பேசுவது சற்றே குறும்புத்தனங்கள் என்று இருப்பேன். கல்லூரியில் நான் வணிகவியல் தேர்வு செய்தேன். கல்லூரி நாட்களில் நான் பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் வகுப்புகள் எடுத்து சம்பாதிக்கவும் செய்தேன். நடுத்தரவர்க்க குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் என்பது எப்போதும் அவசியமானது தானே இது என்னுடைய இளமைப் பருவம்.
  உங்கள் குடும்பம் உங்களின் கல்விக்காக எப்படித் துணை நின்றது?
  என் அம்மா அந்தக் காலத்திலேயே பட்டப்படிப்பு முடித்து இருந்தார். பட்டப்படிப்பை முடித்து வங்கிப் பணியில் சேர வேண்டும் என்பது என் அம்மாவின் கனவாகவே இருந்தது. அதற்காகவே அவர் எங்களைத் தயார் செய்தார். எல்லாவற்றிலும் முதன்மையானது படிப்பு தான். அதிலே ஒரு நாளும் சமரசம் செய்துகொள்ள அவர் அனுமதிக்க மாட்டார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே வங்கிகளுக்கான தேர்வுகளுக்கும் தயாராகிக் கொண்டிருந்தோம். அந்த அளவுக்கு என் தாயார் எங்களைக் கல்வியில் ஊக்கப்படுத்தினார்கள்.
  உங்கள் பணியை எப்போது எப்படித் தொடங்கினீர்கள் 1981-இல் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுதே ஆந்திரா வங்கியில் எனக்கு வேலை கிடைத்தது. படித்து முடித்தவுடன் உடனடியாக பணியில் சேர்ந்து விடவேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். வங்கித் தேர்வு எழுதி 1984-இல் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் பணி நியமனம் செய்யப்பட்டேன். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் வந்து கொண்டே இருந்தது. அதே நேரத்தில் திருமணமும் ஆனது. என் கணவரும் அதே வங்கிப் பணியில் இருந்தார். தொடர்ந்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் என்னுடைய சேவை 2018 வரை தொடர்ந்தது. சென்ற ஆண்டில் தான் இந்தியன் வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றேன்.
  திருமணத்திற்குப் பின் உங்கள் குடும்பத்தையும் வங்கிப் பணியையும் எப்படி சமாளித்தீர்கள்
  நான் என் கணவர் இருவருமே வங்கிப்பணியில் தான் இருந்தோம். பணியிட மாற்றம் ஏற்பட்ட பொழுது சற்று சிரமத்திற்கு உட்பட்டு இருக்கிறேன். ஆனால் காலப்போக்கில் அதுவே பழக்கமாகி விட்டது. என்னுடைய மாமனார் மாமியார் உடன் இருந்தார்கள். இருவருமே நான் பணியில் முன்னேற்றம் அடைவதைப் பெருமையாகக் கருதினார்கள். ஊக்கம் தந்தார்கள். என் மாமியார் மிகுந்த அக்கறையோடும் அன்போடும் குடும்பத்தைக் கவனித்து குழந்தைகளையும் அன்போடு பராமரித்தார்கள். வேலை நேரத்தில் முழுமையாக வேலையில் கவனம் செலுத்துவதும் வீட்டிற்கு வந்து விட்டால் குழந்தைகள் படிப்பிற்கு முக்கியத்துவம் தருவதுமாக கவனம் செலுத்துவேன். அவர்களைப் படிக்க வைப்பதை என்னுடைய முதன்மைப் பணியாகக் கருதினேன். வீட்டில் பெரியவர்கள் கருத்துக்கு மரியாதை தந்து நடந்து கொண்டதே குடும்பச்சூழல் பணிச்சூழல் இரண்டிலும் எந்த இறுக்கமும் இல்லாமல் செயல்பட ஏதுவாக அமைந்திருந்தது.
  பணியில் உங்களின் சவாலான அனுபவங்கள் ?
  ஒருமுறை எனக்கு அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலெஸில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போது எதைப் பற்றியும் யோசிக்காமல் என் குழந்தைகள் என்னோடுதான் இருக்க வேண்டும் என்று அவர்களையும் என்னோடு அழைத்துச் சென்று விட்டேன். அங்கே தனியாக இருந்து அவர்களைப் பார்த்துக் கொள்வதும் புதிய இடத்தில் வேலை செய்வதும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனாலும் அந்தக் கடினமான முடிவு என் குழந்தைகள் வாழ்வில் மிகப்பெரிய திருப்பத்தை கொண்டு வந்தது.
  அதேபோல விசாகப்பட்டினத்தில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த கொத்தவல்சா என்ற சிறிய ஊரில் நான் அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். மழை வெள்ளத்தில் ஊரே மிதந்தது. வங்கியில் அப்போது அதிக அளவில் பணம் வைக்கப்பட்டு இருந்தது. அதையெல்லாம் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருப்பதாக உணர்ந்தேன் ஆனால் வங்கிக்கு பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் அனைவருக்கும் எங்களாலான உதவியைச் செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் உணவு வழங்கும் பணியை மேற்கொண்டோம். சில நாட்களுக்கு இந்தப் பணியை நாங்கள் தொடர்ந்தோம். இதற்காக மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது. அப்போது முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு எங்கள் வங்கிக்கு வந்து எங்களைப் பாராட்டினார். அது மறக்க முடியாத நிகழ்வு என்பதோடு அந்த வெள்ளத்தில் பணியாற்றியது சவாலானதாக இருந்தது.
  பெண்ணியம் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா ?
  அந்த அளவுக்கு யோசித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு தாயாக என்னுடைய கடமைகளை நான் எப்படி நிறைவேற்றுகிறேன், நான் விரும்பும் பணியை செய்ய நான் மேற்கொள்ளும் முயற்சிகள் என்ன, எனக்கான விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான வெளியை எப்படி ஏற்படுத்திக் கொள்கிறேன், என் குடும்பத்திற்காக என் நேரம் எப்படி செலவிடப்படுகிறது என யோசித்தாலே போதும் என்று நினைக்கிறேன். மற்றபடி பெண்ணியம் போன்ற விஷயங்களில் எனக்கு அக்கறை இல்லை.
  நம் முந்தைய தலைமுறை பெண்களின் ஆற்றல் திறன் இவற்றைப் பற்றி உங்கள் கருத்து?
  நமக்கு முந்தைய தலைமுறைப் பெண்கள் நம்மைக் காட்டிலும் அறிவாற்றலிலும் நிர்வாகத்திலும் மிகமிகத் திறமை படைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். குறிப்பாக நான் என்னுடைய தாயார் மற்றும் மாமியார் இவர்களையே உதாரணமாக இங்கே சொல்ல விரும்புகிறேன். ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக என் தாயார் பெண் குழந்தைகளைப் படிக்க வைப்பதிலும் அவர்களை வேலைக்கு அனுப்புவதிலும் கொண்டிருந்த உறுதியை நினைத்தால் இப்போதும் பெருமையாக இருக்கிறது. எத்தனை சிக்கல்கள் வந்த போதிலும் என் தாயார் அவருடைய இந்த உறுதிப்பாட்டில் இருந்து ஒருபோதும் பின்வாங்க வில்லை. அதேபோல என் மாமியாரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவர் கல்லூரிகளில் போய் படித்திருக்கவில்லை. ஆனால் யாரிடம் எப்படிப் பேசுவது என்ன பேசுவது எப்போது பேச வேண்டும் எப்போது பேசாமல் மெளனம் காக்க வேண்டும் என்பன போன்ற விஷயங்களில் அவரிடம்தான் நாம் பாடம் கற்க வேண்டும். அப்படி மனிதர்களைக் கையாள்வதில் மிகுந்த சாமர்த்தியம் கொண்டவர். இவர்கள் என் அளவிலான உதாரணங்களே. சென்ற தலைமுறைப் பெண்களில் எல்லாப் பெண்களிடமும் இத்தகைய குணங்களைக் காண முடியும். அவர்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றிருக்கவில்லை. ஆனாலும் தங்கள் வாழ்க்கையை நேர்த்தியாய் வைத்துக் கொள்வதில் மிகுந்த சாமர்த்தியசாலிகளாகவும் அறிவில் சிறந்தவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுக்கு இருக்கும் அறிவு முதிர்ச்சியும் பொறுமையாய் இருந்து தன் லட்சியங்களை காரியங்களை நிறைவேற்றிக் கொண்ட பாங்கையும் வியப்போடு பார்க்கிறேன். பொதுவாக அவர்கள் கற்றுக் கொள்வதில் மிகுந்த வேகமும் ஆர்வமும் கொண்டவர்களாகவே எப்போதும் இருக்கிறார்கள். அது தொழில்நுட்பமோ அல்லது பிற விஷயங்களோ எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இருக்கிறது.
  உயர் பதவிகளில் பெண்கள் மிகக் குறைவாக காணப்படுவதற்கு காரணம்?
  உண்மைதான். இது வருத்தம் அளிக்கிறது என்றாலும் அதற்கான காரணங்களையும் நாம் ஆராய வேண்டியிருக்கிறது. ஆரம்ப வகுப்புகளில் பள்ளிகளில் கல்லூரிகளில் முதலிடத்தில் இருக்கும் பெண்கள் தலைமையை நோக்கி முன்னேறும் எண்ணம் கொண்டவர்களாக இருக்கவில்லை என்ற உண்மையையும் ஒத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு வங்கியில் பணி கிடைத்த உடனேயே தனக்குப் பதவி உயர்வு தேவையில்லை என்ற முடிவுக்கு பெண்கள் வருகிறார்கள். எனக்கென்று ஒரு வேலை, என் குடும்பத்திற்காக நேரம் இதற்கு மேல் உயர்வு எனக்குத் தேவையில்லை என்ற மனப்பான்மை உள்ளவர்களாக நிறைய பெண்களை நான் கடந்து வந்திருக்கிறேன். முதலில் அந்த எண்ணத்தை நாம் விலக்கிக் கொள்ள வேண்டும். எந்த நிலைக்கு உயர்ந்தாலும் நம்மால் நம் குடும்பத்தையும் தொழிலையும் நிர்வகித்துக் கொள்ள முடியும். அதோடு அல்லாது எதற்கு எப்போது முக்கியத்துவம் தர வேண்டும் என்பதையும், நான் பெண் எனக்கு இவ்வளவு தான், எனக்கு இது போதும் என்ற எண்ணத்தில் இருந்து விடுபட வேண்டும். பணியிடத்தில் அனைவருமே வேலை செய்வதற்காக வந்திருக்கிறோம். இதில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. இந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் இன்னமும் பெண்கள் உயர் பதவிகளுக்கு வருவது எளிதாகும். பெண்கள், தானே முன்னுக்கு வர வேண்டிய அவசியம் இருக்கிறது அவர்களை யாரோ ஒருவர் கொண்டு வந்து முன் நிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

  வங்கிகள் வழியாக பெண்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு பற்றி?
  வங்கிகள் - பெண்களில் சுய தொழில் முனைவோருக்கு மிகப்பெருமளவில் துணை நிற்கின்றன. இந்தியன் வங்கியை பொருத்தவரை 1989-ஆண்டிலேயே தமிழ்நாட்டில் பெண்களுக்கான முன்னேற்றத்தில் தன் பங்களிப்பை செய்ய ஆரம்பித்துவிட்டது. சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு ஏறத்தாழ 30 சதவீத பங்களிப்பை இந்தியன் வங்கி தான் செய்கிறது. இந்தியாவில் 2009 முதல் 2019 மார்ச் வரை 21,000 கோடி ரூபாய் 7.6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவியாக வழங்கப்பட்டிருக்கிறது. அதே போல தமிழ்நாட்டில் 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் 3.8 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பெண்கள் பெற்ற பணத்தை திருப்பி செலுத்துவதில் நேர்மையாக இருக்கிறார்கள். புதிய தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டு அந்த துறைகளில் தொழில்முனைவோராக பெண்கள் உருவாக வேண்டும் என்பதில் எனக்கு விருப்பமும் கவனமும் இருக்கிறது. எங்கள் வங்கியில் அதற்கு நான் முன்னுரிமை தருகிறேன். பெண்களுக்கு வாகன கடன் வழங்குவதிலும் என்னுடைய கவனம் இருக்கிறது. இது அவர்களின் சுதந்திரமான செயல்பாட்டை ஊக்குவிக்கும்.
  சமூகப் பொறுப்பு பற்றி?
  சமூகப் பொறுப்பு எங்கள் வங்கிக்கு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இதற்கென எங்கள் வங்கியில் தனியாக ஒரு துறையே செயல்படுகிறது. சில அரசுப் பள்ளிகளை தத்தெடுத்துக் கொண்டு அவற்றின் முன்னேற்றத்திற்கு நிறைய மெனக்கெடுகிறோம். ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருகிறோம். அங்கே பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தி நாப்கின்கள் வழங்கும் இயந்திரங்களைத் தந்திருக்கிறோம். சென்னையில் தீயம்பாக்கம் ஏரியை புனரமைப்பு செய்வதில் பங்களிப்பைச் செய்திருக்கிறோம். மரம் நடும் விழாக்களை நடத்தி மரம் நடுவதோடு அவற்றைப் பாதுகாப்பது, "தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் பல தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, யோகாசனப் பயிற்சிகளுக்கு ஊக்கம் தருவது என்று பல வகைகளிலும் சுற்றுச்சூழலுக்கும் சமுதாயத்திற்கும் தேவையான அடிப்படை பணிகளில் இந்தியன் வங்கி வழியாக நாங்கள் எங்கள் முயற்சிகளை முன்னெடுக்கிறோம்.
  உங்களின் தனிப்பட்ட விருப்பங்கள்?
  பயணம் செய்வது எனக்குப் பிடிக்கும். புத்தகங்கள் வாசிப்பது, சமீப காலமாக உலகத் திரைப்படங்களைப் பார்ப்பது. இங்கே சென்னையில் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கோயில்களுக்குச் செல்ல விரும்புகிறேன். அஷ்டலட்சுமி கோயில், பார்த்தசாரதி கோயில் போன்ற கோயில்களுக்கு சென்று வருகிறேன். தமிழகத்தின் கோயில்கள் எனக்கு மிகப் பிடித்தமானவை மனதிற்கு நெருக்கமானவையும் கூட.
  ஒரு தாயாக?
  ஒரு தாயாக என் இரு மகன்களின் வளர்ச்சியில் கல்வியில் நான் கவனம் செலுத்தியிருக்கிறேன். அதே நேரத்தில் அவர்கள் வீடு பணியிடம் எல்லாவற்றிலும் தங்கள் வேலைகளை தாங்களே நிறைவு செய்து கொள்வதற்கான பயிற்சியையும் அவர்களுக்குத் தந்திருக்கிறேன். தாய்மார்களிடம் இதை ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறேன். ஆண் குழந்தைகளை வீட்டுப் பொறுப்புகளிலும் ஈடுபடுத்துங்கள். ஆண்பிள்ளைகளும் - பெண் பிள்ளைகளும் சமமாக வளரட்டும்.
  உங்கள் வெற்றிக்கான ரகசியம்?
  வெற்றிக்கு என தனியே ஏதும் சூத்திரங்கள் இருப்பதாக நினைக்கவில்லை. இன்றைக்கு நம்முடைய பணி என்ன அதை எப்படி நேர்த்தியாக செய்து முடிக்கப் போகிறோம் நாளை என்ன செய்யப்போகிறோம் என்ற அளவில்தான் என் சிந்தனை இருக்கும். பத்து, 20ஆண்டுகளுக்குப் பின் என்னவாக இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்கள் எல்லாம் எனக்கு வருவதில்லை. அதோடு எதற்கு முக்கியத்துவம் தருவது எதனை முதன்மைப்படுத்துவது எந்த வரிசையில் பொறுப்புகளை நிறைவேற்றுவது என்பதில் மட்டுமே நான் இன்று வரை கவனமாக இருக்கிறேன். ஒருவேளை அதுவே எனது வெற்றிக்கான காரணமாகவும் இருக்கக்கூடும். நம்மைப் புரிந்து கொள்பவர்கள் நம்மைச் சுற்றி இருப்பதும் நம்மை அவர்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சியான வகையில் நம் விருப்பங்களை வெளிப்படுத்துவதும் அவசியம் என்று நினைக்கிறேன்.
  வெற்றியை எட்ட வேண்டும் என நினைக்கும் பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
  எந்த ஒரு கடின சூழ்நிலையிலும் எதற்காகவும் நீங்கள் செய்ய விரும்புவதை விட்டுக் கொடுத்து விடாதீர்கள். எல்லா இடத்திலும் நம்மை மையப்படுத்திக் கொள்ள அவசியமில்லை. நமக்கு விருப்பமானதை அல்லது தேவையானதை செய்து கொண்டே நகரலாம் அப்போது நமது வளர்ச்சி இன்னும் வேகமானதாக இருக்கும்.
  உங்களுக்கென்று நீங்கள் சம்பாதித்துக் கொள்ளுங்கள். வேறெவரையும் சார்ந்திருக்காமல் செல்ல விரும்பும் இடத்திற்கு உங்கள் சொந்த முயற்சியில் வாகனம் ஓட்டுவது, மொபைல் போன் இவை மூன்றையும் சரியான முறையில் பயன்படுத்தி கொண்டாலே சுதந்திரமான செயல்பாடு சாத்தியமாகிவிடும்.
  சந்திப்பு: ஜோதிலட்சுமி
  படங்கள்: அகிலா

   

  kattana sevai