பாடி பில்டர் போட்டியில் தென்னிந்தியப் பெண்!

சர்வதேச மகளிர் பாடி பில்டர் போட்டியில் பங்கேற்பதற்காக வழங்கப்படும் அனுமதி அட்டையை (pro card) பெற்றுள்ள பெங்களூரைச் சேர்ந்த முதல் தென்னிந்தியப் பெண் மமதா சனத்குமார்தான் இவர்
பாடி பில்டர் போட்டியில் தென்னிந்தியப் பெண்!

சர்வதேச மகளிர் பாடி பில்டர் போட்டியில் பங்கேற்பதற்காக வழங்கப்படும் அனுமதி அட்டையை (pro card) பெற்றுள்ள பெங்களூரைச் சேர்ந்த முதல் தென்னிந்தியப் பெண் மமதா சனத்குமார்தான் இவர். ஜூலை 31-ஆம் தேதி போர்ச்சுகல் நாட்டில் 13 நாடுகளைச் சேர்ந்த மகளிர் பாடி பில்டர்கள் பங்கேற்கும் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார்.
 பாடிபில்டர் ஆனதற்கான காரணத்தை மமதாவே கூறுகிறார்:
 "பாடி பில்டர் ஆக வேண்டுமென்பது நான் திடீரென எடுத்த முடிவல்ல, என்னுடைய கனவை நிறைவேற்றுவதற்காக நான் எடுத்த முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல, பாடி பில்டர் பயிற்சி பெற நான் முயற்சித்தபோது பலத்த எதிர்ப்பு எழுந்ததோடு ஆதரவளிக்கவோ, பண உதவி செய்யவோ என் குடும்பத்தினர் முன் வரவில்லை.
 மேலும் நான் பிறந்தது ஆசாரமான குடும்பம் என்பதால் டூ பீஸ் உடையணிந்து பயிற்சி பெறுவதையும், மேடையில் தோன்றுவதையும் அவர்கள் விரும்பவில்லை.
 என்னைப் பொருத்தவரை நான் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவள். அதனால் என் பயணத்தை என்னுடைய விருப்பப்படி துவங்குகிறேன்.
 நான் பயிற்சிப் பெறுவதை பார்த்து பலரும் பாராட்ட, நிலைமை மாறியது. என்னுடைய கணவர் சனத், அவரது உறவினர்கள், பெற்றோர் அனைவரும் ஆதரவளிக்கத் தொடங்கினர். என்னுடைய கணவர் வேலையை இழந்த காரணத்தினாலேயே நான் பாடி பில்டர் பயிற்சிப் பெற தீர்மானித்தேன். என்னுடைய ஏமாற்றத்திலிருந்தும், வீட்டு விஷயங்களிலிருந்தும் விடுபடவே நான் பாடி பில்டர் பயிற்சி பெறத் தொடங்கியதாக என் கணவர் நினைத்தார்.
 ஆனால் நான் நினைத்ததை சாதிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் சுலபமானதல்ல, இயற்கையிலேயே பெண்கள் ஆண்களை விட உடல் அமைப்பில் சிறிது வலு குறைந்தவர்கள் என்பதால் பாடி பில்டர் பயிற்சி பெறுவது கடினமாக இருக்கும். ஆனால் ஒரு மனதோடு தீவிரமாக ஈடுபட்டால் சில நாட்களுக்குள் சுலபமாகிவிடும்'' என்று கூறும் மமதாவின் தீவிர ரசிகை அவரது ஐந்து வயது மகள் பூர்விகாதானாம்.

 பாடி பில்டராகவும், குடும்பத் தலைவியாகவும் ஒரு சேர எப்படி செயல் பட முடிகிறது?
 "என்னுடைய அம்மாவும், பூர்விகாவும் எனக்கு ஆதரவாக உள்ளனர். நான் பாடி பில்டர் செய்வது என் மகளுக்குப் பிடித்துள்ளது. சிறியவளாக இருந்தாலும், தன்னுடைய தாய் தனக்கும், இந்த நாட்டிற்கும் புகழ் வாங்கி தர ஏதோ பெரிதாக செய்கிறார் என்று நினைக்கிறாள். சர்வதேச மகளிர் பாடி பில்டர் அனுமதி அட்டையை நான் பெற்றிருப்பதே பெரிய சாதனையாகும். இந்த அனுமதி அட்டை மூலம் நான் இந்தியா சார்பில் ஒலிம்பிக்ஸ் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியும். அதுமட்டுமின்றி தென்னிந்தியாவில் இந்த அனுமதி அட்டையைப் பெற்றுள்ள ஒரே பெண்ணும் நான்தான்.
 நாம் நினைத்ததை சாதிக்க வேண்டுமெனில் தினமும் அதற்காக ஒரு மணி நேரமாவது ஒதுக்கினால் வாழ்க்கை சிறப்பாக அமையும். உடலை வலுப்படுத்தும் இந்த பயிற்சிக்காக மாதந்தோறும் 60 ஆயிரம் ரூபாய் செலவழிக்கிறேன். போர்ச்சுகலில் நடைபெறும் 13 நாடுகளைச் சேர்ந்த பெண் பாடி பில்டர்கள் பங்கேற்கும் புரோலீக் போட்டியில் பங்கேற்க தீவிர பயிற்சியில் மும்முரமாக இருக்கிறேன். யாராவது ஸ்பான்சர் செய்ய முன் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பிலும் இருக்கிறேன்'' என்று கூறும் மமதா, பாடி பில்டராக விரும்பும் பெண்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார்.
 - பூர்ணிமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com