Enable Javscript for better performance
ஊக்கம் தந்த ஊடகப் படைப்பு!- Dinamani

சுடச்சுட

  

  16 ஆவணப்படங்கள், குறும்படங்களை தயாரித்து இயக்கியுள்ளேன்!

  Published on : 24th July 2019 12:41 PM  |   அ+அ அ-   |  

  jeevitha

  தமிழ் திரைப்பட உலகமும் மும்பை படவுலகம் போல 'professional" லாக மாறி வருகிறது. 'கிரியேட்டிவ் ஹெட்' என்று ஒருவரை வேலைக்கு அமர்த்தி கதை தேர்வு, திரைப்படத் தயாரிப்பு, செலவு, வியாபாரம், வசூல், லாபம், நஷ்டம் போன்றவற்றை படம் எடுக்கத் தொடங்குமுன் திட்டமிட்டு பட்ஜெட் போட தயாரிப்பாளருக்கும், பைனான்சியருக்கும் உதவுவதுதான் "கிரியேட்டிவ் ஹெட்'டின் பொறுப்பு. இந்தப் புது அணுகுமுறையை தொடங்கியிருப்பது சென்னையைச் சேர்ந்த எம்.கே.ஆர்.பி. (MKRP) பட நிறுவனம்.

  'இவன் தந்திரன்', 'பூமராங்' படங்களைத் தயாரித்து வெளியிட்டிருக்கும் இந்த பட நிறுவனம் நான்கு படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் 'கிரியேட்டிவ் ஹெட்' ஆக இருப்பவர் சென்னையைச் சேர்ந்த ஜீவிதா சுரேஷ் குமார்.  அநேகமாக தமிழ்ப்பட உலகில் "கிரியேட்டிவ் ஹெட்' பொறுப்பை ஏற்றிருக்கும் முதல் பெண்மணி ஜீவிதாவாகத்தான் இருக்க வேண்டும். 

  மீடியா பிரசென்டேஷனில் எம்பிஏ முடித்திருக்கும் ஜீவிதா கல்லூரியில் படிக்கும் போதே டாக்குமெண்டரி படங்களை தயாரித்து இயக்கியவர். சின்ன வயதிலிருந்தே காமிராவிடம் மனதைப் பறி கொடுத்த ஜீவிதா, 'படித்தால் விஸ்காம்தான் படிப்பேன்' என்று ஒற்றைக்காலில் நின்று சாதித்தவர். செய்திப் படத்துறையில் தொடங்கி சின்னத் திரைக்குப் போகாமல் நேராக சினிமா துறைக்கு வந்த பயணம் குறித்து ஜீவிதா மனம் திறக்கிறார்: 'கோவையிலுள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பில் பாதியில் போய் சேர்ந்தேன். கணக்கு வகுப்பில் டீச்சர் ஒரு சூத்திரம் பற்றி கேட்டார். அந்த சூத்திரம் குறித்து நான் முன்னர் படித்த பள்ளியில் சொல்லிக் கொடுத்திருக்கவில்லை. அதனால் விழித்தேன். கோபமடைந்த டீச்சர் "இது கூட தெரியலையா... நீயெல்லாம் சினிமாவில் நடிக்கத்தான் லாயக்கு' என்று திட்டினார். இந்த மாதிரி பலமுறை நடந்தது. இதனால், டீச்சர் சொன்ன மாதிரியே திரைத்துறையில் நடிப்பு தவிர்த்து, இதர பிரிவுகளில் சாதிக்க வேண்டும் என்று மனசுக்குள் தீர்மானித்தேன். 

  அதற்கு உதவும் படிப்பு "விஸ்காம்'தான். அதனால் அதில்தான் சேர வேண்டும் என்று தீர்மானிதேன். அப்பாவுக்கு என்னை சொந்த ஊரான கோவையில் விஸ்காம் படிக்க வைக்க விருப்பம் இல்லை. காரணம், கல்லூரியில் மாணவர்களும் ஒன்றாக படிப்பதுதான். 

  'வேறு பாடம் எடுத்துப் படி' என்றார். நான் ஒத்துக் கொள்ளவில்லை. சொந்த பந்தங்களும் "பெண்ணுக்கு எதுக்கு விஸ்காம் படிப்பு..' என்று முணுமுணுத்தார்கள். படித்தால் விஸ்காம்தான் படிப்பேன் என்று பிடிவாதம் பிடித்ததும் திருச்சியில் பெண்களுக்கான கல்லூரியில் விஸ்காம் படிக்க அனுமதித்தார்.  இருந்தாலும், மிதமான வெப்பம் இருக்கும் கோவைக்கே சீக்கிரம் திரும்ப வந்துவிடுவாள் என்று நினைத்துத்தான் என்னை அப்பா திருச்சியில் சேர்த்துவிட்டார். நான் அப்பாவின் மகளாச்சே..! 

  விஸ்காமிற்காக வெப்பத்துடன் சமரசம் செய்து கொண்டு படித்து முடித்தேன். கல்லூரியில் படிக்கும் போதே அகில இந்திய வானொலியில் "வாய்ஸ் ஓவர்' கலைஞராக பங்களிப்பு செய்து வந்தேன். மேலும் ஆவணப் படத்தையும் தயாரித்தேன். "எம்பிஏ'க்காக சென்னை லயோலாவில் சேர்ந்து "ஊடகப் படைப்பு' குறித்து படித்தேன். இறுதி ஆண்டு படிக்கும் போதே திருமணம் ஆனது. காதல் திருமணம்தான்.

  'திருமணம், பிறகு இரண்டு பெண் குழந்தைகள்... என்றாலும் ஆவணப் படங்கள், குறும்படங்கள் தயாரிப்பதை விடவில்லை. 16 ஆவணப்படங்கள், குறும்படங்களை தயாரித்து இயக்கியுள்ளேன். மைசூரில் செயல்படும் இந்திய மொழிகளுக்கான மத்திய அரசு கழகத்திற்காக தமிழில் செய்திப் படங்கள் தயாரித்திருக்கிறேன். எனது ஆவணப்படங்கள் பலவற்றை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளன.  எனது மூத்த மகள் தனது தோழிகளை வைத்து அவளாகவே ஒரு செய்தி படம் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட, மகளுக்கும் அவளது தோழிகளுக்கும் படப்பிடிப்பு எப்படி நடக்கிறது என்ற நேரடி அனுபவத்தைத் தருவதற்காக, சினிமா ஷூட்டிங்கிற்காகப் பயன்படுத்தும் காமிரா ஸ்பாட் லைட்டுகள் சகிதம் ஒரு நாளில் படப்பிடிப்பை மகளைக் கொண்டு நடத்தச் செய்தேன். ஏழு நிமிடம் ஓடும். "சுதந்திர நாள் விற்பனைக்கு' என்ற தலைப்பிடப்பட்ட அந்தப் படத்தை நடிகர் அதர்வா, நடிகை நிக்கி கல்ராணி இணைந்து வெளியிட்டார்கள். "யூ டியூபில்' அந்தப் படத்தைப் பார்க்கலாம். எனது ஆவண மற்றும் செய்தி படங்களுக்கு வசனம், விவரிப்பு எழுதுவதும் நான்தான். பின்னணி இசை, எடிட்டிங், வர்ணனையாளர்.. என்று வெளியாட்களை அமர்த்திக் கொள்வேன். ஒரு ஆவணப்படம் தயாரிக்க ஐம்பதாயிரம் வரை செலவாகும். ஆவணப் படங்கள் தொடர்பான எல்லா வேலைகளையும் நானே கையாண்டு வந்தேன். இந்த அனுபவங்கள்தான் ஒரு பட நிறுவனத்தின் 'கிரியேட்டிவ் ஹெட்' பொறுப்பை ஏற்க உதவியுள்ளது. 

  எனது புதிய பொறுப்பிற்கு அப்பா பெரிதும் உதவுகிறார். வீட்டில் கணவரின் குழந்தைகளின் ஒத்துழைப்பு உண்டு. நான் வசிக்கும் வீட்டிற்கு பக்கத்திலேயே அலுவலகம் இருப்பதால் போய்வருவதில் சிரமம் இல்லை. கிரியேட்டிவ் ஹெட் என்பவர் திரைப்படத் தயாரிப்பில், படப்பிடிப்பில் நேரடி பங்கிருக்காது. படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு போகவும் வேண்டாம். ஆனால் படத் தயாரிப்பாளர், ஃபைனான்சியருக்கு படத் தயாரிப்பு, வியாபாரம், செலவு, லாபம்.. குறித்த திட்டமிடலைத் தயாரித்து பட வேலைகள் தொடங்குமுன் அளிக்க வேண்டும்.

  நடிகரின் மார்க்கெட் மதிப்பின் அடிப்படையில், இந்தக் கதையை திரைப்படமாக எடுத்தால் ஓடுமா.. நஷ்டத்தை எப்படி தவிர்ப்பது என்றெல்லாம் பரிசீலனை செய்ய வேண்டும். விளக்கிச் சொல்ல வேண்டும். நடிகர் நடிகையர் ஒப்பந்தம் ஆவதிலிருந்து படம் திரையிடப்படும் வரை படத் தயாரிப்பு திட்டமிட்டது மாதிரி எடுக்கப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.  இந்த புதிய பொறுப்பு காரணமாக தற்சமயம் ஆவணப் படங்கள் தயாரிப்பதற்ககு விடுமுறை கொடுத்திருக்கிறேன். அதே சமயம் இன்னொரு பணியிலும் ஈடுபட்டு வருகிறேன். எனது நெருங்கிய தோழி மார்பக புற்று நோயால் முப்பத்திரண்டு வயதில் இறந்துவிட்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள். அவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர். தனது காதல், திருமணம், புற்று நோய் பாதிப்பு அதற்கான சிகிச்சை, அவர் அனுபவித்த வலி .. மனப்புழுக்கம் குறித்து அனைத்தையும் விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார். தோழியின் நினைவாக அவருக்கு அஞ்சலியாக அவர் கதையை நாவலாக எழுதி வருகிறேன். நாவல் வெளிவந்ததும் திரைப்படமாக தயாரித்து இயக்கவும் எண்ணம் இருக்கிறது'' என்கிறார் ஜீவிதா.
  - பரிணாமன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai