மாதவிடாய் காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு! 

மாதவிடாய் வயிற்று வலிக்கு கொடுக்கப்படும் மருந்துகள் 1969 - கால கட்டத்தில்தான் கண்டறியப்பட்டன என்றாலும், பல நூற்றாண்டுகளாக, மூலிகை மருத்துவமும்,
மாதவிடாய் காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு! 

மாதவிடாய் சுமையல்ல... சுகமே..! 
மாதவிடாய் வயிற்று வலிக்கு கொடுக்கப்படும் மருந்துகள் 1969 - கால கட்டத்தில்தான் கண்டறியப்பட்டன என்றாலும், பல நூற்றாண்டுகளாக, மூலிகை மருத்துவமும், உணவு முறை மாற்றங்களுமே பலராலும் சரியானத் தீர்வாக எண்ணி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதில் உணவுமுறை என்று கூறுவதால், இதற்கென்று பணம் கொடுத்து எங்கும் சென்று பெரிய பெரிய உணவுமுறை பட்டியலெல்லாம் தேடி எடுத்துக் கொண்டு வரவேண்டும் என்றில்லை. தினந்தோறும் உண்ணக்கூடிய உணவுகளையே, மாதவிடாய் காலத்திற்கேற்ப, தேவையான சத்துக்களுக்கேற்ப கூட்டியும், தேவையற்ற உணவுகளைக் குறைத்தும், தவிர்த்தும் எடுத்துக் கொண்டாலே போதுமானது. 
மாதவிடாய் நாட்களில், உடல் சோர்வு நீங்கவும், ரத்த இழப்பை ஈடுசெய்யவும், பெண்களின் இடுப்பெலும்புகளுக்கு உறுதியளிக்கவும் புரதச்சத்தும், கால்சியம் சத்தும் மிக இன்றியமையாததாகிறது. இச்சத்துகள் குறைபாடாக இருக்கும் வேளையில், மாதவிடாய் வயிற்றுவலி அதிகரித்தாற்போல் காணப்படும். எனவே, மாதவிடாய் துவங்கும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே, முட்டை, பால், கேழ்வரகு, உளுந்து ஆகிய உணவுப் பொருட்களை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொருட்களில் தயாரிக்கப்பட்ட களி, புட்டு, வடை, கூழ், அடை, கஞ்சி போன்ற உணவுகள் வயிற்றுவலியைத் தடுப்பதுடன், அந்நாட்களில் அன்றாட வேலைகளைச் செய்வதற்கான கூடுதல் ஆற்றலையும் அளிக்கிறது. 
வயிற்றுவலியை ஏற்படுத்தும் புரோஸ்டாகிளான்டின்ஸ்களை (Prostagladins) கட்டுப்படுத்துவதில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களுக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது. இப்பொருட்கள் பழங்கள், காய்கள், கீரைகள், கொட்டைகள் ஆகியவற்றில் முழுமையாகக் கிடைக்கின்றன. 
மாதவிடாய்க்கு முன் வாரத்திலிருந்தே, பழச்சாறுகள், காய்கறி சாலட், சூப், போன்றவற்றை தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு நாளும் தலா 100 கிராம் பழங்கள், காய்கள், கீரைகள் சேர்த்துக் கொள்ளலாம். 
மாதவிடாய் தொடங்கிய முதல் நாளிலிருந்து 14 நாட்கள் வரையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும், அடுத்த 14 நாட்களுக்கு புரோஜெஸ்டிரான் ஹார்மோனும் தங்களது வேலைகளைச் சரியாகச் செய்வதற்கு Essential fatty acid என்னும் அத்தியாவசியக் கொழுப்பு அமிலம் தேவைப்படுகிறது. இது, சோளம், சோயாபீன்ஸ், வால்நட், மீன், முட்டை போன்ற உணவுப் பொருட்களில் போதுமான அளவில் கிடைக்கிறது. 
பொதுவாகவே, மாதவிடாய் காலங்களில், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துகள் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட குறைவாக எடுத்துக் கொள்ளப்படும் வேளையில், சோடியம் மட்டும் அதிகமான அளவில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதும் ஆய்வுத் தகவல். 
இதற்குக் காரணம், முன் மாதவிடாய் மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் குறிப்பிட்ட உணவு விருப்பமே. இதனால், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், உப்பு அதிகமுள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகள், மாமிசம், சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனிகள் ஆகியவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்கிறார்கள்.
இதன் விளைவே, உப்பு நீர்க் கோர்வை என்று கூறப்படும் Edema. இப்பொருட்களைத் தவிர்ப்பதால், நீர்க்கோர்வை மற்றும் உடல் எடை அதிகரித்தல் தவிர்க்கப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 400 முதல் 600 யூனிட் வரையிலான வைட்டமின் ஈ எடுத்துக் கொள்வதால், புரோஸ்டாகிளான்டின்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம். முன் மாதவிடாய் சிக்கலையும், மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்று வலியையும், மார்பகங்கள் சற்றே வீக்கமடைந்தது போன்று காணப்படும் நிலையையும் தவிர்க்கலாம்.
எண்ணெய் வித்துக்களில், கடுகு, மணிலா, எள் ஆகியவை வைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுப் பொருட்கள். அது மட்டுமல்லாமல், கம்பு, பீன்ஸ், பாதாம் போன்றவையும் இந்த வைட்டமினைக் கொடுக்கின்றன. 
மாதவிடாய் வலியின்போது, சுமார் 500 மில்லி கிராம் மக்னீசியம் மற்றும் 1000 மில்லி கிராம் கால்சியம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதுவும் கால்சியம் கார்பனேட்டை விட, உடலால் எளிதில் உட்கிரகிக்கக் கூடிய கால்சியம் சிட்ரேட் தாதுவாக இருப்பது நல்லது என்றும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், இதிலிருக்கக் கூடிய சிக்கல் என்னவென்றால், கால்சியம் சிட்ரேட் செயற்கை மருந்துகளாகக் கிடைக்கின்றன. மேலும் இவற்றை அடிக்கடி உபயோகப்படுத்தும்போது, உடலில் உள்ள தைராக்ஸின் ஹார்மோனின் அளவு குறைந்து, தைராய்டு குறைபாடு நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைகிறது என்ற கவனமும் தேவை. அதனால், பால் மற்றும் பால் பொருட்கள், கொட்டையுணவுகள், அடர் பச்சை நிற முள்ள கீரைகள் ஆகியவற்றையே அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
ரத்த சிவப்பணுக்களை உருவாக்கத் தேவையான இரும்புச்சத்தும், வைட்டமின்பி12- ம் மிக அத்தியாவசியமானவை. இந்த இரு வைட்டமின்களும் முட்டை, இறைச்சி, மீன், தவிட்டுடன்கூடிய தானியங்கள், சோயாபீன்ஸ், பாதாம், கீரைகள் போன்ற உணவுப் பொருட்களில் காணப்படுகின்றன. மாதவிடாய் நாட்களில், இந்த பொருட்களைத் தேவையான அளவில் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால், ரத்தப்போக்கினால் இழக்கப்படும் இரும்புச்சத்தின் அளவையும் ஹிமோகுளோபின் அளவையும் சமன் செய்வதுடன், சோர்வையும் தவிர்க்கலாம். 
மாதவிடாய் காலங்களில் வேதிப் பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவுகள், மாமிச உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை கேன்டீன் மற்றும் வெளியிலுள்ள உணவகங்களில் வாங்கி உண்பதைத் தவிர்த்து, திரவ நிலையில் உள்ள உணவுகளையும், வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளையும் உண்ணுவதால் செரிமானக் கோளாறுகள், வாந்தி, வயிற்றுவலி ஆகியவற்றையும் தவிர்க்கலாம். இதற்காக, பழச்சாறு, சூப் உணவுகள், காய்கறி சாலட், ஆகியவற்றை தங்களுடனேயே மதிய உணவு வேளைக்கும் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கும் எடுத்துச் செல்லலாம். 
பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட், உலர்திராட்சை, தேன் மற்றும் பாகு சேர்த்த நெல்லிக்காய், பேரீட்சை போன்றவற்றை ஒரு சிறு டப்பாவில் போட்டு பைகளில் வைத்துக் கொள்வதால், சோர்வாக இருக்கும் நேரங்களிலும், நேரமில்லையென்று காலையுணவை தவிர்க்கும் நேரங்களிலும் எந்த இடத்திலும் எடுத்து உண்பதற்கு உதவியாக இருக்கும். 
மாதவிடாய் நாட்களில், பெண்களின் உடல் மிகவும் மென்மையாகவும், எளிதில் நோய்த் தொற்றுக்களுக்கு உள்ளாகிவிடும் நிலையிலும், உதிரப்போக்கினால், உடலில் கிருமிகள் சேரும் நிலையும், உடலுறுப்புகளில் நச்சுக்கள் சேரும் நிலையும் இருப்பதால், வெங்காயம், பூண்டு போன்ற சல்பர் சத்து நிறைந்த உணவுப் பொருட்களையும், மஞ்சள், மிளகு, சுக்கு போன்ற உணவுப் பொருட்களையும் மாதவிடாய் முழுவதும் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை, நொதிகளின் மூலமாக நடைபெறும் வினைகளை கல்லீரலில் ஊக்குவிப்பதால், நச்சுக்கள் நீக்கப்பட்டு, உடலுறுப்புகள் மற்றும் ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. இதனால், சோர்வு நீங்கப்பெற்று உடலும் மனமும் புத்துணர்வு அடைகிறது. 
மாதவிடாய்க்கும், வெந்தயத்திற்கும் தொன்றுதொட்டே நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. இன்றளவும், பள்ளி அல்லது கல்லூரி மாணவிகளாகட்டும், திருமணமான பெண்களாகட்டும், மாதவிடாய் வயிற்றுவலி என்றால், சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்கிவிடுவதும், ஊறவைத்து நீருடன் குடித்துவிடுவதும் இன்றளவும் பழக்கத்திலிருக்கிறது. இதற்குக் காரணம், வெந்தயத்திலிருக்கும் டயோஸ்ஜெனின் (ஈண்ர்ள்ஞ்ங்ய்ண்ய்) மற்றும் ஐசோபிளோவோன்ஸ் (ஐள்ர்ச்ப்ஹஸ்ர்ய்ங்ள்) என்ற நுண்பொருட்கள்தான். இவை, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனையும் புரோஸ்டாகிளான்டின்ஸ்களையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்து, வயிற்றுவலியைக் குறைக்க உதவுகிறது. 

ப. வண்டார்குழலி இராஜசேகர், 
உதவி பேராசிரியர், மனையியல் துறை, 
அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால்.
- அடுத்த இதழில்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com