ஆஸ்திரேலிய இசைக்குயில்...

தங்களது சொந்த மண்ணைவிட்டுப் புலம்பெயர்ந்து எங்கு சென்று வாழ்ந்த போதிலும் கலை உணர்வு கொண்ட மக்களது கலை ஆர்வம் விட்டுப் போவதில்லை.
ஆஸ்திரேலிய இசைக்குயில்...

தங்களது சொந்த மண்ணைவிட்டுப் புலம்பெயர்ந்து எங்கு சென்று வாழ்ந்த போதிலும் கலை உணர்வு கொண்ட மக்களது கலை ஆர்வம் விட்டுப் போவதில்லை. அதுபோலவே திறமையுள்ளவர்களின் கலை ஆர்வமும் ஞானமும் மறைக்க முடியாதது - அது எப்படியும் வெளிப்பட்டே தீரும். இதற்கு எத்தனையோ உதாரணங்களை காட்ட முடியும். அந்தவகையில், சமீபத்து, உதாரணமாய் ஒருவரைச் சொல்ல வேண்டும் என்றால் ஜெயஸ்ரீ ராமசந்திரனைச் சொல்லலாம். இவர், தனது இசைச் சேவைக்காக ஆஸ்திரேலிய அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான THE ORDER OF AUSTRALIA MEDAL விருது பெற்றுள்ளவர்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் இயங்கிவரும் "சப்தஸ்வரா' என்ற தனது இசைப்பள்ளி மூலம் கலைச்சேவையில் கால்நூற்றாண்டுக்கும் மேலாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருப்பதற்காக இந்த விருதும் கெளரவமும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கலை, அறிவியல் எனப் பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுக்கு அவர்களது சேவையைப் பாராட்டி ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ராணியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது கெளரவிக்கப்படுகிறார்கள். அத்தகையதொரு அங்கீகாரத்தைப் பெற்றவர்தான் ஜெயஸ்ரீ ராமசந்திரன்.
இந்தியாவில் திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெயஸ்ரீ மும்பையில் பிறந்து வளர்ந்தவர். தனது தந்தையாரின் அரசுப் பணி காரணமாக இந்தியாவின் பல பகுதிகளிலும் வாழ்ந்தவர். மும்பையில் இவரது குடும்பமே இசைக் குடும்பமாக திகழ்ந்திருக்கிறது. பெற்றோர், பாட்டி என்று இசை வேள்வி நடத்தி இருக்கிறார்கள். இவரது தாயார் மங்களம் முத்துசாமி வீணை இசைக் கலைஞராக அந்நாட்களில் வலம் வந்தவர். அதுமட்டுமல்ல, ஜெயஸ்ரீக்கு இசையை ஊட்டி வளர்த்தும் இருக்கிறார். 
ஜெயஸ்ரீக்கு இவ்வாறாக இசை ஞானம் இயல்பாகவே அமைந்திருக்கிறது. அந்த வகையில் இவரின் முதல் குரு அவரது தாயார் தான். தாய் தந்த இசையை மேலும் பல குருமார்கள் நெறிப்படுத்தி சிறந்த இசைக் கலைஞராக இவரை உருவாக்கியிருக்கிறார்கள். 
கர்நாடக இசையில் மிகப் பிரபலமான ஜாம்பவான்களான ந.ராமச்சந்திரன், டி.ஆர்.பாலாமணியிடம் முறையாக இசை பயின்றுள்ளார். சங்கீத கலாநிதி கே. வி. நாராயணசாமியிடம் இசையின் நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்கு கிடைத்த வாய்ப்பு தன் வாழ்நாள் பெரும்பேறு என்று பெருமிதத்தோடு கூறுகிறார். நல்ல வளமான ஆழமான இந்த அடித்தளம் தான் இவரை இன்று மிகச்சிறந்த இசைக் கலைஞராக மட்டுமல்லாது தேர்ந்த இசை ஆசிரியராகவும் வளர்த்தெடுத்திருக்கிறது. 
இன்றும் தான் ஓர் இசை மாணவி தான். கற்றுக்கொள்வதும் பயிற்சி செய்வதும் தன் அன்றாடக் கடமை என்று பணிவோடும் அடக்கத்தோடும் குறிப்பிடும் ஜெயஸ்ரீ, தான் இசை பயின்ற காலத்தைப் பற்றி சிலாகித்துப் பேசுகிறார்:
"ஐந்து வயதில் முறைப்படி கர்நாடக இசையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். அந்த நாளில் என் குருமார்களிடம் கற்றுக்கொண்டதை வீட்டில் பல மணி நேரம் பாட்டி முன்னிலையில் சாதகம் செய்தே ஆகவேண்டும். 
பதினொறாம் வயதில் என் முதல் கச்சேரியை மும்பையில் தொடங்கினேன். முதன்முதலாக மேடை ஏறி "கீரவாணி' பாடிய இசைப்பயணம் ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாக இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 
மும்பையில், என்னுடைய இளம் வயதில் எங்கெல்லாம் கச்சேரி செய்ய வாய்ப்பு கிடைத்ததோ அங்கெல்லாம் கச்சேரி செய்திருக்கிறேன். பெரும்பாலான விழா கொண்டாட்டங்களில் இசையால் பங்கு கொண்டிருக்கிறேன். திருமணமாகி 1989-இல் ஆஸ்திரேலியாவுக்கு சென்றதும், அலுவலகம், குடும்பம் இவை தாண்டி இசையையும் தொடர்ந்தேன். 
ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் இசைச் கச்சேரியைப் பற்றிய புரிதல் அவ்வளவாக இல்லாத போதிலும் ஓர் இசைப் பள்ளியைத் தொடங்கி, இசையை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் மிகச்சிறிய அளவிலேயே மாணவர்கள் இருந்தார்கள். கால் நூற்றாண்டுக்கும் மேலான உழைப்பில், இன்று பெரிய நிறுவனமாக வளர்த்திருக்கிறது எங்களது அமைப்பு. தங்கள் பணி நிமித்தமாக அல்லது கல்வி காரணமாக ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் இந்தியர்கள் தங்கள் கலாசாரத்தை, கலை அம்சங்களை மிகுந்த கவனமுடன் காப்பாற்றிக் கொள்ள முயல்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் சப்தஸ்வரா இசைப்பள்ளியின் இன்றைய வளர்ச்சி.
கர்நாடக இசையை கற்றுக் கொள்வது ஒரு தவம் போன்றது. எளிதானதல்ல; மிகுந்த மெனக்கெடலும் ஆர்வமும் தேவைப்படுகிறது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் இசை பயில வருகிறார்கள். அனைவருமே இசையைத் தொழிலாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வருவதில்லை. ஆஸ்திரேலியாவைப் பொருத்தவரை கர்நாடக இசையை ரசிப்பதற்குத் தேவையான அடிப்படை அறிவைப் பெற்றுக் கொள்வதே பலரது நோக்கமாக இருக்கிறது. சிலர் முனைப்புடன் கச்சேரி செய்ய வேண்டும் என்றும் உழைக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் அளவுக்கு இங்கே வாய்ப்புகள் இல்லை என்றாலும் வாய்ப்புகளை இந்தியர்களாகிய நாங்கள் உருவாக்கிக் கொள்ள முயல்கிறோம். எங்களுக்குள் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தி இந்தியாவில் இருப்பதைப் போலவே எல்லாக் கொண்டாட்டங்களையும் கலாசார நிகழ்வுகளையும் சற்றும் தொய்வில்லாமல் நடத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கிறோம்.
அதுபோன்று , சென்னையில் இசைபருவம் என்று சொல்லும் "டிசம்பர் சீசனில்' தவறாமல் சென்னை வந்துவிடுவேன். பெரும் இசை ஜாம்பவான்கள் தொடங்கி இன்றைய இளம் தலைமுறை இசைக் கலைஞர்கள் வரை அனைவரது இசை நுட்பங்களையும் கேட்டு ரசிப்பேன். 
இதில் எனக்கு ஒரு வருத்தமும் இருக்கிறது. அதாவது சமீப காலங்களில் கர்நாடக இசைக் கச்சேரிகளுக்கு மிகக் குறைந்த அளவிலேயே இளம் தலைமுறையினர் வருவதைக் காணமுடிகிறது. இதைப்பார்க்கும்போது, ஒருவேளை கர்நாடக இசை இளைஞர்களிடம் தேவையான அளவுக்குச் சென்று சேரவில்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில், இசையைக் கற்றுக் கொள்வதற்காக முன்வரும் குழந்தைகளைக் காணும் போது இந்த எண்ணம் மாறிவிடுகிறது.
முதலில் பெற்றோர் விருப்பத்தின் பேரில் தான் குழந்தைகள் இசை பயில வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இசையில் இயல்பாகவே அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டு விடுகிறது. அப்படி ஆர்வம் கொள்ளும் குழந்தைகளே தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். இந்தக் குழந்தைகளே நமக்கு நம்பிக்கை தருகிறார்கள். இதனால், எந்நாளும் கர்நாடக இசை அதன் பொலிவு மாறாமல் நிலைத்திருக்கும் என்பதற்கான நம்பிக்கை'' என்கிறார். 
மெல்பர்ன் நகரில் ஜெயஸ்ரீயை தெரியாதவர்களே இருக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் இவரிடம் கர்நாடக இசையைப் பயின்று வருகிறார்கள். ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளிலும் லண்டன் அமெரிக்கா ஆகிய இடங்களிலும் தொடர்ந்து 29 ஆண்டுகளாகக் கச்சேரிகள் செய்து வருகிறார்.
இசைக் கலைஞராக தனிக் கச்சேரிகள் என்று மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியாவில் நடன நிகழ்ச்சிகளுக்குத் தன் பங்களிப்பை இசை வழியாக அதிக அளவில் தந்திருக்கிறார். தன் பாட்டி, பெற்றோர் என்று கற்று வந்த இசை ஞானத்தைத் தவறாமல் தன் இரு மகன்களுக்கும் ஊட்டியிருக்கிறார். இருவரும் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த போதிலும் மிருதங்க இசையில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். பரம்பரை பரம்பரையாக இன்னும் இசை தன் சந்ததிகளுக்குச் சரியாகப் போய்ச் சேர வேண்டும் என்பதிலும் கவனத்தோடு இருக்கிறார்.
இசையால் இவர் பெற்ற விருதுகளும் புகழும் ஏராளம். பணி ஓய்வுக்குப் பிறகு முழு நேர இசை ஆசிரியராகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் இவர் இசையை சேவையாகக் கருதுகிறார். மெல்பர்னில் வக்ரதுண்ட விநாயகர் ஆலயம் மற்றும் சிவா விஷ்ணு ஆலயம் அமைப்பதற்காகப் பல கச்சேரிகளை நடத்தித் தந்திருக்கிறார். 
சங்கீத மும்மூர்த்திகள் தாண்டி பாபநாசம் சிவனின் சாகித்தியங்களில் தன் மனதைப் பறிகொடுக்கும் இவருக்கு ஆசை ஒன்றுதான். தன் வாழ்க்கையின் அங்கமாக அமைந்துவிட்ட கர்நாடக இசையை சற்றும் சிதைவின்றி அடுத்த தலைமுறையிடம் தந்துவிட வேண்டும் என்பதே!

 - ஜோதிலட்சுமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com