தோட்டம் அமைக்கலாம் வாங்க...ஆடிப்பட்டம் தேடி விதை!

சென்ற இதழில் விதைகளை விதைப்பதற்கு முன் விதைநேர்த்தி செய்வது அவசியம் என்பதனையும் விதை நேர்த்தி செய்வதால் ஏற்படும் நன்மைகளையும் பார்த்தோம்
தோட்டம் அமைக்கலாம் வாங்க...ஆடிப்பட்டம் தேடி விதை!

சென்ற இதழில் விதைகளை விதைப்பதற்கு முன் விதைநேர்த்தி செய்வது அவசியம் என்பதனையும் விதை நேர்த்தி செய்வதால் ஏற்படும் நன்மைகளையும் பார்த்தோம். அவ்வாறு விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளை விதைக்கும் முறையையும் பராமரிக்கும் முறையையும் இனி பார்ப்போம்:
 செடிகளுக்கும் பஞ்சபூத சக்திகள் அவசியமானது. மண், காற்று, நீர், இடைவெளி மற்றும் சூரியஒளி அவசியமானது. இவை சீராகவும் தேவைக்கேற்றவாறும் அமைய செடிகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
 விதைகளை இரண்டு விதங்களில் விதைக்கும் பழக்கமுள்ளவர்கள் நம்மவர்கள். காய்களில் கத்திரி, தக்காளி, மிளகாய் போன்ற விதைகளை நாத்துவிட்டு நடுவதும் மற்ற விதைகளை நேரடியாக விதைப்பதும் நமது நடைமுறை பழக்கங்கள். இவ்வாறு செய்வதால் செடிவளர்ச்சி செழிப்பாக இருப்பதோடு நல்லவிளைச்சலும் கிடைக்கும். ஆக விதைப்பதில் இரண்டு முறைகள் உள்ளது. ஒன்று நேரடி விதைப்பு, மற்றொன்று நாற்றுவிட்டு நடுவது.
 நேரடி விதைப்பு என்பது விதைகளை விதைநேர்த்தி செய்து சற்று உலர வைத்த பின் விதைப்பது. சென்ற இதழ்களில் மண்கலவையை எவ்வாறு தயார் செய்வது என்பதையும் அவற்றை துளையிட்ட தொட்டிகளில் நிரப்புவதையும் பார்த்தோம். நிரப்பிவைத்திருக்கும் மண்ணில் குச்சியைக்கொண்டு ஓர் அங்குல ஆழத்திற்கு துளையிட அதனில் உலர்த்தப்பட்டிருக்கும் விதைகளை இட்டு அதன் மேல் லேசாக மண்ணைக்கொண்டு மூடிவிடவேண்டியதுதான்.. இதுதான் விதைப்பது. வெண்டை, கொத்தவரை, பாகல், அவரை, சுரை, புடலை என செடிவகை, கொடிவகை காய்களை இவ்வாறு விதைக்க வேண்டியதுதான். ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். அந்த வகையில், வரக்கூடிய ஆடிப்பட்டத்தில் இவ்வகை விதைகளை விதைக்க செடிகள் செழிப்பாக வளரும்.
 ஒரு தொட்டியில் மூன்று இடங்களை தேர்வுசெய்து அந்த மூன்று இடங்களிலும் ஒரு குழியில் இரண்டு விதைகள் என்ற கணக்கில் ஆறு வெண்டை விதைகளை விதைக்கலாம். அதேபோல் வளர்ந்த செடியின் சுற்றளவு, அகலம், உயரத்தை கணக்கிலிட்டு ஒரு தொட்டியில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் விதைகளை நடலாம். கொத்தவரை போன்ற விதைகளை இரண்டு இடங்களில் நடலாம். மற்ற அடர்ந்த செடிகளாக இருந்தால் தொட்டியின் நடுவில் துளையிட்டு அதனில் இரண்டு விதைகளை விதைக்கவேண்டும். கொடிவகை காய்களுக்கும் தொட்டிக்கும் நடுவிலிருக்கும் இடத்தில் துளையிட்டு இரண்டு விதைகளை நடலாம்.
 ஒவ்வொரு துளையிலும் இரண்டு விதைகளை நடுவதால் ஒன்றில் ஏதேனும் ஒரு விதையாவதும் முளைத்துவிடும் என்பதற்காகத்தான். இரண்டுமே முளைத்தால் எந்த முளை ஆரோக்கியமானதாக உள்ளதோ அவற்றை வைத்துக்கொண்டு மற்றொன்றை அந்த தொட்டியைவிட்டு அகற்றிவிடலாம். இரண்டுமே முளைக்கவில்லை என்றால் ஒருவாரத்திற்குப்பின் புது விதையை அந்த தொட்டியில் விதைக்கவேண்டும்.
 நேரடி விதைப்பில் விதைகளை விதைத்தபின் மண்ணைமூடிவிட்டு அதன் மேல் காய்ந்த இலை தழைகளை இடவேண்டும். இதனை மூடாக்கிடுவது என்பார்கள்.
 அடுத்த இதழில் மூடாக்கின் அவசியத்தைப்பற்றி தெரிந்து கொள்வோம். பின் மூடாக்கிட்ட தொட்டியில் நீரை தெளிக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் ஈரப்பதம் காக்கப்படும். விதைகளின் முளைப்பிற்கும் அவசியமானதாக இருக்கும். மேலும் ஒவ்வொரு நாளும் விதைத்த இந்த தொட்டிகளுக்கு நீர் தெளிப்பது அவசியமானது. சிறு விதைகள் மூன்று நாட்களில் முளைத்துவிடும், சற்று பெரிய விதைகள் நான்கைந்து நாட்களில் முளைக்கும். இந்த செடிகளுக்கு சூரிய ஒளி அவசியமானது. குறைந்தது ஐந்தாறு மணி நேரமாவதும் சூரியஒளி படுமிடத்தில் செடிகளை வைப்பது அவசியம்.
 இனி நாற்று விட்டு நடும் முறையைப் பார்ப்போம்: கத்திரி, மிளகாய், தக்காளி போன்ற செடிகளின் விதைகளை அரைமணி நேரம் முதல் ஒருமணி நேரம்வரை விதைநேர்த்தி செய்து பின் உலரவைத்து எடுத்துக்கொள்ளவும். இந்த விதைகளை நேரடியாக தொட்டிகளில் விதைக்காமல் ஒரு சின்ன கொட்டாங்குச்சி அல்லது அந்த அளவுள்ள ஏதேனும் ஒரு குழித்தட்டுகளை எடுத்துக்கொண்டு அதனில் சிறிது மண்ணோடு கலந்த மண்புழு உரத்தை நிரப்பி அதனில் இந்த விதைகளை இட்டு மீண்டும் அதன் மேல் மண்புழுஉரத்தைக் கொண்டு மூடிவிடவேண்டும். இவற்றை நிழல்பாங்கான இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். ஒருவாரத்தில் முளைத்து வளரத்தொடங்கும் இந்த விதைகளை மூன்று வாரங்களுக்குப்பின் வேரோடு சேர்ந்த மண்கலவையோடு எடுத்து வேறொரு பெரிய தொட்டியில் நடவேண்டும்.
 அதாவது நேரடி விதைப்பிற்கு எவ்வாறு தொட்டியை தயார் செய்தோமோ அதேபோல் தொட்டியை தயார் செய்து அதனில் இந்த இளம்செடிகளை குழிதோண்டி நடவேண்டும். நட்டபின் மீண்டும் மண்ணைக்கொண்டு ஒருசேர வேர்கள் மூட மூடி விட வேண்டும்.
 இவ்வாறு இளம் நாற்றுகளை வேறொரு தொட்டியில் மாற்ற அதாவது நாற்றுகளை நடுவதால் இவ்வகை செடிகள் சிறப்பாக வளர்வதைக் காணலாம்.
 பொதுவாக சில காய்கள் விதைத்து ஒன்றரை மாதங்களில் பூவிட்டு காய்களைக் கொடுக்க தொடங்கிவிடும். சிலவகைகள் இரண்டு மாதங்களில் காய்க்கத் தொடங்கும்.
 ஒவ்வொரு வாரமும் ஒரு கையளவு மண்புழு உரத்தை ஒவ்வொரு தொட்டிக்கும் அளிப்பது அவசியம். இவ்வாறு செய்வதால் செடிகள் செழிப்பாக வளரும். செடிகளுக்கு தேவையான நுண்ணூட்ட மற்றும் பேரூட்ட சத்துக்களும் கிடைக்கும்.
 அடுத்த இதழில் கீரை விதைப்பு, கீரை வளர்ப்பு மற்றும் செழிப்பான கீரை விளைச்சலைப் பெற கையாள வேண்டிய வழிமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
 - தொடரும்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com