Enable Javscript for better performance
வீட்டுத் தோட்டத்தில் கட்டாயம் கீரை வேண்டும்- Dinamani

சுடச்சுட

  

   வீட்டுத் தோட்டத்தில் கட்டாயம் கீரை வேண்டும்

  By  நா.நாச்சாள்  |   Published on : 31st July 2019 10:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  KEERAI

  தோட்டம் அமைக்கலாம் வாங்க...
  இந்த வாரம் கீரை விதைப்பைப் பற்றி பார்ப்போம். அதற்கு முன்பு கீரையில் உள்ள சத்தையும், இன்றைய காலகட்டத்தில் சந்தைகளில் கிடைக்கும் கீரையின் நிலையும் தெரிந்து கொள்வது அவசியம்.
   ரத்தசோகை, சத்துக்குறைபாடு, ஹார்மோன் சமநிலையின்மை, கெட்ட கொழுப்பு, மாரடைப்பு, மலச்சிக்கல், எலும்பு தேய்மானம், நீரிழிவு, மாதவிடாய் தொந்தரவுகள் என பல வியாதிகளுக்கு கீரைகள் மருந்தாகும். உலகளவில் சத்துக்குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகளையும் விரட்டக்கூடிய வல்லமை நமது கீரைகளுக்கு உண்டு. நாளொன்றிற்கு ஒரு கீரை என உண்பதால் பலப்பல நோய்களில் இருந்து நம்மைக் காக்கலாம்.
   அதில், அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை, வெந்தயக்கீரை, தண்டுக்கீரை, பாலக்கீரை, பசலைக்கீரை, மணத்தக்காளி, புளிச்சகீரை, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை மட்டுமல்ல கீரைகளின் பட்டியல் சுக்கான் கீரை, சக்கரவர்திக்கீரை, துத்திக்கீரை, வல்லாரைக்கீரை, சண்டிக்கீரை, குப்பை கீரை, துளசி, கலவைக்கீரை, அகத்திக்கீரை, கல்யாண முருங்கை, கற்பூரவள்ளி, முசுமுசுக்கை கீரை, முடக்கறுத்தான் கீரை, திருநீற்றுப்பச்சிலை, முள்முருங்கை கீரை, கீழாநெல்லிக்கீரை, பொடுதலை கீரை, கரிசலாங்கண்ணி கீரை, தூதுவளை கீரை, மணலிக்கீரை, வெற்றிலை, காசினிக்கீரை, தும்பை, தவசிக்கீரை, சாணக்கீரை இப்படி கீரைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
   இவற்றில் முதலில் குறிப்பிட்ட சிலவகை கீரைகளை பொதுவாக அனைவருமே அறிந்திருப்போம். பல சந்தைகளிலும், கடைவீதிகளில் கிடைக்கக்கூடியதுதான். அதுவே மற்ற கீரைகள் எண்ணும்பொழுது பலர் இந்த பெயர்களைக்கூட கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இந்த வகைக் கீரைகள் புற்றுநோயையும் எளிதாக விரட்டும் வல்லமை பெற்ற கீரைகள். இந்த கீரைகளில் குறிப்பிட்ட சில கீரைகளை கட்டாயம் ஒவ்வொருவரும் வீட்டில் வளர்ப்பது அவசியமாகும்.
   ஆனால், நம் அருகிலிருக்கும் சந்தைகளில் கிடைக்கும் கீரைகளின் இன்றைய நிலை முகம் சுளிக்க வைக்கிறது. காரணம், சாக்கடை நீரில் கீரைகள் விளைவிப்பதாக கூறப்படுவதுதான். இன்னும் சிலர் இவ்வாறு வளர்க்கப்படும் கீரைகளில் சாக்கடைகளில் இருக்கும் நச்சு இரசாயனங்கள் கீரைகளுக்குள் ஊடுருவ அதனால் பலவகை நோய்கள் ஏற்படுவதாகவும் கூறுகிறார்கள். அதுபோன்று, சந்தைகளில் கிடைக்கும் கீரைகளின் பாதிப்புகள்.. குறைந்த காலத்தில் சராசரியாக ஒருமாத காலத்தில் விளையும் கீரைகளின் இலைகள் பூச்சி தாக்குதல் இல்லாமலும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம்.
   அதனால், கீரைகள் வளர்க்கப்படும் 30 நாட்களுக்குள் பலமுறை ரசாயனங்கள் அடிக்கப்படுகிறது. பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மட்டுமல்லாமல் வாடாமலும் வதங்காமலும் பச்சை பசேலென்று கீரைகள் இருக்க வேண்டும் என்பதற்காக கீரைகளில் பறிப்பதற்கு முன்பு வரை ரசாயனங்கள் அடிக்கப்படுகின்றது. அந்த ரசாயனங்களின் தாக்கம் குறைவதற்கு முன்பே நாமும் சந்தைகளில் கீரைகளை வாங்குகிறோம். இவ்வாறு வாங்கப்பட்ட கீரைகளை சமைக்கும் பொழுது மருந்துகளின் துர்நாற்றம் வீசுவதும், கீரைகள் சுவையற்ற சக்கைகளாக இருப்பதையும் காணலாம்.
   கீரைகளில் புற்றுநோயைக் கூட தீர்க்கவல்ல மருத்துவத் தன்மைகள் உள்ளது, ஆனால் அவை எதுவுமே இல்லாத அளவிற்கு தான் இன்று கீரைகள் விற்கப்படுகின்றன. சரி இது கீரைகளில் மட்டும்தானா என்றால் இல்லை, கறிவேப்பிலையில் கூட அதிக அளவில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய பலவகையான ரசாயன நச்சுக்கள் அடிக்கப்படுகின்றது. இவ்வாறான மருத்துவ குணங்கள் அதிகம் இருக்கக்கூடிய அதேசமயம் ரசாயன நச்சு கலந்த கீரைகளையும் கறிவேப்பிலையையும் உண்பதால் எந்தவித நோயும் உண்மையில் சீராக போவதில்லை. இதற்கெல்லாம் ஒரே மாற்று வழி அவரவர் வீடுகளில் மாமருந்தான கீரைகளை வளர்ப்பது மட்டுமே. அதுவும் கீரைகளை இயற்கை முறையில் வளர்ப்பது மட்டுமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
   இனி கீரைகளை எவ்வாறு வளர்ப்பது என்று பார்ப்போம்:
   மற்ற விதைகளைப் போல கீரை விதைகளை விதைக்க முடியாது. காரணம் முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை போன்ற கீரைகளின் விதைகள் கடுகளவிலும் சிறியது. அதனால் இந்தக் கீரை விதைகளை மணலோடு கலந்து தெளிப்பது தான் நமது வழக்கம்.
   சற்றுப் பெரிய விதைகளாக இருக்கக்கூடிய புளிச்சைக் கீரை, பாலக்கீரை, பசலைக்கீரை, வெந்தயக் கீரை போன்ற கீரைகளை வரிசையாக விதைக்கலாம். சென்ற இதழ்களில் செடிகளை வளர்க்க தேவையான தொட்டிகளை எவ்வாறு தயார் செய்வது என்று பார்த்தோம். ஆழம் குறைவாகவும் அகலம் அதிகமாகவும் இருக்கும் தொட்டிகளை கீரைகளுக்கு தேர்வு செய்யவேண்டும். காரணம் கீரைகளின் வேர்கள் சிறியது. இவற்றிற்கு ஆழமான தொட்டிகள் அவசியமில்லை. ஆனால் கீரைகளை விதைக்க அதிக பரப்பளவு தேவை.
   அதிக பரப்பளவு கொண்ட தொட்டிகளை தயார் செய்து, தொட்டிகளுக்கு அடியில் துளையிட்டு மண் கலவையை (சென்ற இதழ்களில் பார்த்தவாறு) நிரப்பி கொள்ள வேண்டும். பின் அரை தேக்கரண்டி அளவிற்கான விதைகளை எடுத்து அவற்றை ஒரு கையளவு மணலோடு சேர்த்து கொள்ள வேண்டும். இரண்டையும் நன்கு கலந்துகொள்ளவேண்டும். அவற்றை தயார் செய்து வைத்திருக்கும் தொட்டிகளில் பரவலாக தெளிக்க வேண்டும். பின் அந்த தொட்டிகளில் நீர் தெளித்து வைக்க வேண்டியதுதான். ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இரண்டு வேளையும் பூவாளி கொண்டு நீரை தெளிக்க வேண்டும். மூன்று நாட்களில் இந்த கீரை விதைகள் முளைத்திருப்பதை பார்க்க முடியும்.
   பலருக்கும் ஏற்படும் ஒரு சவாலான விஷயம்.. விதைத்தவுடன் கீரை விதைகளை எறும்புகள் தூக்கிச் சென்றுவிடும். இவற்றை தடுக்க பாதுகாப்பான இடங்களில் இந்தக் கீரை தொட்டிகளை வைப்பது அவசியம்.
   சிறுகீரை விதைகளை இவ்வாறு விதைக்கலாம். சற்று பெரிய கீரை விதைகளை அகலமான தொட்டிகளில் மண்கலவையை நிரப்பி ஒரு அங்குலம் இடைவெளிக்கு கோடுகளைப் போடவேண்டும். அந்த கோடுகளில் ஒரு அங்குலம் இடைவெளிக்கு நாலைந்து விதைகளை விதைக்க வேண்டும். வெந்தயக் கீரை, கொத்துமல்லி, பாலக்கீரை, பசலைக்கீரை போன்ற கீரைகளை இவ்வாறு விதைப்பதால் சீரான வளர்ச்சி இருக்கும்.
   கீரைகளை குறுகிய கால கீரைகள், நடுத்தர கால கீரைகள். நீண்ட கால கீரைகள் என பிரித்துக்கொள்ளலாம். முளைக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை போன்றவை ஒரு மாதத்திற்குள் பலனளிக்கும் குறுகிய கால கீரைகள். புதினா, தண்டுக்கீரை, அரைக்கீரை போன்றவை மூன்று மாதங்கள் முதல் ஆறுமாதங்கள் வரை பலனளிக்கும் கீரைகள். அகத்தி, முருங்கை, கறிவேப்பிலை போன்றவைகள் நீண்டகாலத்திற்கு பலனளிக்கும் கீரைகள். மூன்று வகைகளிலும் கீரைகளை பிரித்து வீட்டில் வளர்க்க தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்..
   - தொடரும்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai