திரும்பி பார்க்காமல் போய்கிட்டே இரு... கீர்த்தி சுரேஷ்

திரையுலகில் அறிமுகமான வேகத்தில் ஐந்தாண்டுகளில் 19 படங்களில் நடித்து சாதனை புரிந்த கீர்த்தி சுரேஷ், அண்மை காலமாக திரைப்படங்களைத் தேர்வு செய்து
திரும்பி பார்க்காமல் போய்கிட்டே இரு... கீர்த்தி சுரேஷ்

திரையுலகில் அறிமுகமான வேகத்தில் ஐந்தாண்டுகளில் 19 படங்களில் நடித்து சாதனை புரிந்த கீர்த்தி சுரேஷ், அண்மை காலமாக திரைப்படங்களைத் தேர்வு செய்து நடிப்பதில் மிகவும் கவனம் செலுத்துவதால் புதிய படங்கள் வெளியாவதில் தாமதமேற்படுவதாக கூறப்படுகிறது. இது உண்மையா என்று கேட்டபோது, திரைக்கு வந்தது முதல் இதுவரையிலான தன் அனுபங்களையும், கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார் கீர்த்தி சுரேஷ்:
 திரைப்படங்களில் கதாநாயகிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறித்து..
 கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. இது அனைத்துமே கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களாகும். ஒரு கமர்ஷியல் படத்தில் கதாநாயகிக்கு எவ்வளவு முக்கியத்துவம் இல்லையென்றாலும், சில காட்சிகளுக்காக ஒப்பந்தம் செய்வதும் உண்டு. ஆனால் அனைத்து கமர்ஷியல் படங்களுக்கும் இது பொருந்தாது. சில படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுவதுண்டு. அப்படி எடுக்கப்பட்ட படம் தான் "நடிகையர் திலகம்'. இது நடிகை சாவித்திரியின் வரலாற்றுப் படம் என்பதால் வெற்றிப் பெற்றது. சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களை தென்னிந்திய ரசிகர்கள் ஏற்றுக் கொண்டிருப்பது ஒரு மாறுதலான விஷயமாகும்.
 உங்களைப் பற்றிய விமர்சனங்களால் பாதிக்கப்பட்டதுண்டா?
 என்னைப் பற்றிய விமர்சனங்கள் என்னை பாதித்ததில்லை. ஆரம்பத்தில் இந்த விமர்சனங்களால் என்னை கட்டுப்படுத்திக் கொள்ளவும், எங்கே தவறு செய்தேன் என்று கண்டுபிடிக்கவும் முயற்சித்ததுண்டு. இப்போது இந்த விமர்சனங்களை நான் கண்டு கொள்வதும் இல்லை. என்னை பாதிப்பதும் இல்லை.
 "நடிகையர் திலகம்' படம் உங்களுக்கு ஒரு திருப்புமுனையா?
 நிச்சயமாக. வெற்றி எனக்கு அதிக பொறுப்புகளைத் தந்துள்ளது. அடுத்து எந்த படத்தில் நடிக்கிறீர்கள் என்று கேட்கும்போது, திரைப்படத்தை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் தேவை என்பதை உணர வைத்தது. இதனால் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த எனக்கு சற்று இடைவெளி தேவைப்படுவதாக நினைத்தேன். தமிழ்ப் படங்களில் நடிக்கும்போதுதான் இந்த எண்ணம் தோன்றியது. விரைவில் புதிய வாய்ப்புகள் கிடைக்குமென்ற நம்பிக்கையும் இருக்கிறது.
 மீண்டும் மலையாளப் படங்களில் நடிப்பது பற்றி?
 ஆமாம். பிரியதர்ஷன், மோகன்லால் ஆகியோருடன் நான் முதன் முதலில் அறிமுகமானதே மலையாள படங்களில் தான். தற்போது மீண்டும் அவர்களுடன் "குஞ்சாலி மரைக்கார்' என்ற படத்தில் நடித்தாலும், எனக்கு இதில் அதிக முக்கியத்துவம் இல்லை. "ராமாயணம்' போன்று பல கிளைகள் கொண்ட இக்கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.
 2015-ஆம் ஆண்டில் தமிழில் அறிமுகமான பின் ஏற்பட்ட அனுபவங்கள்?
 "திரும்பி பார்க்காமல் போய்க்கிட்டே இரு...' என்று தான் சொல்ல வேண்டும். நான் நடிகையாவேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் சினிமாவில் ஓர் அங்கமாக இருக்க வேண்டுமென்ற கனவு சிறுவயது முதலே இருந்தது. பேஷன் டிசைனிங் படித்து காஸ்ட்யூம் டிசைனராக வேண்டுமென்று நினைத்தேனே தவிர நடிகையாக வேண்டுமென்று விருப்பப்பட்டதில்லை. மலையாள சினிமாவில் நடிக்கத் தொடங்கியபோது, தமிழில் நடிப்பேன் என்று நினைக்கவில்லை. தமிழில் நடிக்கும்போது, தெலுங்கில் வாய்ப்பு வந்தது. மூன்று தென்னிந்திய மொழிகளில் நடித்த நான் தற்போது இந்தியில் அஜய்தேவ்கனுடன் நடித்து வருகிறேன். இந்தப்படம் முடிந்த பிறகு மீண்டும் அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்டு வருவேன் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. பொதுவாகவே நான் எதையும் எதிர்பார்ப்பதில்லை. தானாக வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.
 கதைகளைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்துவதால் பல படங்களை இழந்ததுண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை வேண்டாமென்று சொல்வதை விட, எல்லா படங்களிலும் நடிக்கலாம் அல்லவா என்று சிலர் கேட்பதுண்டு. எனக் கென்று சில உரிமைகள் உள்ளன. அதன்படி முடிவெடுப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய தந்தை சுரேஷ்குமார் ஒரு மலையாள திரைப்படத் தயாரிப்பாளர். என்னுடைய அம்மா மேனகா ஒரு நடிகை. இந்த பின்னணி காரணமாக நான் திரையுலகில் நுழைவது எனக்கு சுலபமாக இருந்தது.
 இருந்தாலும் எந்த ஒரு விஷயமானாலும் நான் சுதந்திரமாக செயல்பட விரும்புகிறேன். படப்பிடிப்பு சம்பந்தபட்ட தேதிகளைக் கூட நானே கவனிக்கிறேன். இதற்கென்று தனியாக யாரையும் நியமித்துக் கொள்ளவில்லை. சினிமா பின்னணி இருப்பதால் இதை நிர்வகிப்பது சுலபமாக இருக்கிறது. எனக்கென்று ஓர் அடையாளம் தேவைப்படுகிறது. திரையுலகில் இதுவரை நான் படிக்கட்டுகள் மூலமாக ஏறி வெற்றிப் பெற்றேனே தவிர, சுலபமாக முன்னேற நகரும் படிக்கட்டுகளை ( எஸ்கலேட்டர்) பயன்படுத்தவில்லை என்றார் .
 - பூர்ணிமா
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com