மாற்றும் திறன் கொண்டவர்கள் நாங்கள்... 

ஆயிரம் அதட்டல்களைக் காட்டிலும், ஓர் அன்பான வார்த்தை எப்பேர்ப்பட்ட மனிதரையும் மயங்கச் செய்யும் ஆயுதமாகும்.
மாற்றும் திறன் கொண்டவர்கள் நாங்கள்... 

ஆயிரம் அதட்டல்களைக் காட்டிலும், ஓர் அன்பான வார்த்தை எப்பேர்ப்பட்ட மனிதரையும் மயங்கச் செய்யும் ஆயுதமாகும். அழகு, அறிவு, ஆபத்து என எதையும் அறியாமல் உதட்டுப் புன்னகையை மட்டும் வெளிக்காட்டிக் கொண்டு, தங்களுக்குள்ளாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் மாற்றுத் திறன் கொண்ட அனைவரும் இறைவனின் பிள்ளைகளே. அவ்வாறு உள்ளோரை அரவணைத்து எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள நியூ லைப் சிறப்புப் பள்ளி.
 2013 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில், ஆரம்பத்தில் எட்டு குழந்தைகள் மட்டுமே சேர்ந்தனர். நாளடைவில் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அரசு அங்கீகாரம் பெற்றுள்ள இப்பள்ளியில், மன வளர்ச்சி குறைபாடு, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், ஆட்டிசம் குறைபாடு, கவனச்சிதறல், கற்றல் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு வயது முதல் 18 வயது வரையிலான ஆண், பெண் குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
 இங்கு 12 வகையான திறன் பயிற்சி அளித்து, அக் குழந்தைகள் சிறப்புப் பள்ளியில் இருந்து கல்வி பயிலும் வகையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
 நிகழாண்டில் 32 குழந்தைகள் சேர்க்கை பெற்றுள்ளனர். காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை இப்பள்ளி இயங்குகிறது. அதிகாரிகளின் குழந்தைகள் முதல் ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் (பாதிப்புக்குள்ளான) வரை ஒன்றாக அமர்ந்து விளையாடுவதும், தங்களால் இயன்றதைச் செய்ய முயற்சிப்பதும் நாள்தோறும் இப்பள்ளியில் நடைபெறும் வேடிக்கை கலந்த மகிழ்ச்சியான தருணங்கள்.
 பணிக்குச் செல்லும் பெற்றோர் பாதிப்புக்குள்ளான குழந்தைகளை தனியாக விட்டுச் செல்கிறோமே? என்ற தவிப்பை ஈடுகட்டும் வகையில் சிறப்புப் பள்ளியில் அனைத்து வசதிகளும் அக்குழந்தைகளுக்கு செய்து கொடுக்கப்படுகிறது. அவர்களைக் கண்காணிக்கவும், கவனிக்கவும் 5 பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், வீடுகளில் இருந்து அழைத்து வருவதற்கான வாகன வசதியும் உள்ளது. அதுமட்டுமின்றி, தமிழக அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் சலுகைகளை இப்பள்ளியானது அங்குள்ள குழந்தைகளுக்கு பெற்றுத் தருகிறது. பேருந்து அட்டை, காதொலிக் கருவி, மாதாந்திர உதவித்தொகை, நடமாடும் நாற்காலி போன்றவை அவற்றுள் சில.
 இது குறித்து, நியூ லைப் சிறப்புப் பள்ளியின் நிர்வாகி எம்.பாக்கியலட்சுமி கூறியது:
 ""நாங்கள் தன்னார்வ அமைப்பாக இருந்தபோதும், அரசு அங்கீகாரம் பெற்று இப்பள்ளியை நடத்தி வருகிறோம். பி.எட். சிறப்பு கல்வி பயின்றுள்ளதால், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான கல்வி, பாதுகாப்புக்கு தேவையானவற்றைச் செய்ய முடிகிறது. இங்கு, தனிப்பட்ட முறையில் இவ்வளவு கட்டணம் என்ற கட்டாய வசூல் என்பது கிடையாது. மருத்துவர், பொறியாளர், அதிகாரிகள் போன்றவர்கள் தங்களால் இயன்ற உதவியை பள்ளியின் நலனுக்காக வழங்குவர். அதன் மூலம் பள்ளிக்குத் தேவையானவற்றைச் செய்கிறோம்'' என்றார் பாக்கியலட்சுமி.
 - எம்.மாரியப்பன், நாமக்கல்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com