சுடச்சுட

  
  mm1

  'சரி அப்படித்தான் மயங்கி விழுந்த என் பொண்ண ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கிட்டு போவ வழியில்லாம எங்க வீட்டுக்கே அனுப்பி வச்சிட்டீங்க'' என்றதும்.
   சங்கரி அவசரமாக, "இல்லங்க நாங்க ஆசுபத்திரிக்குப் போகத்தேன் நெனச்சோம். ஆனா, உங்க மவ என்ன உடனே எங்க வீட்டுல கொண்டு போயி விடறீங்களா, இல்லயான்னு ஒரே கூப்பாடு போட்டா நாங்க என்ன செய்ய முடியும். நீங்களே அவகிட்ட கேளுங்க'' என்றவள் ""தாயீ, தாயீ'' என்று கூப்பிட்டாள்.
   "வீட்டுக்கு வந்த மருமகள கௌசிகான்னு கூப்பிடக் கூட உங்களுக்கு கசக்குதோ'' என்றார் கனகராசு ஏளனமாக.
   "அய்யய்யோ அதெல்லாம் இல்லீங்க, அந்தப் பேரு என் வாய்க்குள்ள நுழையமாட்டேங்கு'' என்றாள் சங்கரி.
   "பட்டணத்து ஆளுங்க அவங்களுக்கு என்ன தெரியுமீன்னு ரொம்ப லேசா நினைச்சிராதீக, இந்த மாதிரியெல்லாம் கொடுமை பண்ணிக்கிட்டு இருந்தீங்கன்னா, வரதட்சணை கொடுமைன்னு உங்க எல்லாரையும் போலீசுல எழுதி வச்சிருவேன்'' என்றார் கனகராசு.
   அவர் சொன்னதைக் கேட்டதும் சங்கரி மட்டுமல்ல தங்கராசுவும் அரண்டு போனான்.
   அந்த கிராமத்து ஆட்கள் இதுவரை போலீஸ் என்று சும்மா தமாசுக்குக் கூட பேசியதில்லை. அதோடு போலீசும் இன்று வரை அந்த ஊருக்குள் வந்ததுமில்லை.
   சங்கரிக்கு வருத்தமென்றால் சொல்ல முடியாது. தங்கராசுவிற்கு பொண்டாட்டி மீதே வெறுப்பு வந்துவிட்டது.
   "என்ன தம்பி சின்ன விசயத்துக்கெல்லாம் போயி பெரிய, பெரிய வார்த்தயப் பேசிக்கிட்டு இருக்கீக. இது வரைக்கும் உங்க மகள வெடுக்கின்னு ஒரு வார்த்த சொல்லியிருப்போமா? தங்கமின்னு தாங்கி... ஏலமின்னு ஏந்தியில்ல வச்சிருக்கோம்'' என்றாள் சங்கரி. அவள் குரல் நொந்து, நூலாகிக் கிடந்தது.
   "நாங்க கொடுமைக்காரகன்னு நெனச்சா, நீங்க தாராளமா உங்க மகள கூட்டிட்டு போகலாம். இங்க யாரும் தடுக்கல'' என்று சொல்லிவிட்டு தங்கராசு அங்க நிற்கப் பிடிக்காமல் வெளியேறினான்.
   "பாத்தீங்களா, பாத்தீங்களா உங்க புள்ள எப்படி பேசிட்டு போறார்''ன்னு
   " ஆமா தம்பி, எனக்கும் அப்படித்தேன் தோணுது. உங்க மவளுக்கு இங்க ஒரு கொடுமையும் நடக்கல அப்படி நடக்கிறதா நெனச்சா, நீங்க உங்க மவள இங்க விட வேண்டாம். கூட்டிட்டுப் போங்க'' என்ற சங்கரி, ""நானு, ஆடுகளுக்கு தண்ணிவிடணும், கோழிகளுக்கு தவுடு பெணஞ்சி போடணும். எனக்கு நிறைய வேலை இருக்கு'' என்றவள் தொழு பக்கமாக நடந்தாள்.
   "இவளால மாடுகளுக்கு பாதுகாப்பு இல்லாம வெட்ட வெளி பொட்டல்ல கட்டியிருக்கோம். எவனும் அவுத்துட்டுப் போனாலும் ஏன்னு கேப்பாருல்ல, வந்துட்டான் நாயம் பேச' என்று தனக்குள்ளே எண்ணி மறுகினாள் சங்கரி.
   "அப்ப, நானு போய்ட்டு வாரேன்'' என்று கனகராசு வந்து சொல்லவும் முகத்தைச் சுளித்தாள் சங்கரி.
   " உங்க மவள அதேன் எம்மருமவளயும் கூட்டிட்டுப் போ தம்பி , எங்க மேல எப்ப நம்பிக்க வருதோ அப்பக் கொண்டாந்துவிடுங்க''.
   "அவளக் கெஞ்சி, கெஞ்சி கூப்புட்டாச்சி. அவ இந்த குப்பயிலயாச்சிலும் இருப்பேன்னு சொல்றாளே தவிர. அங்கே வரமாட்டங்கராளே என்ன செய்றது?''
   "அப்ப எங்கள இனிமே குத்தங், கொறச் சொல்லாம உங்க மவகிட்ட சொல்லிட்டுப் போங்க'' என்றவள் அங்கே நின்ற பாண்டியனிடம்.
   " ஏலேய் பாண்டி, நம்ம வீட்டுக்கு வந்த மாமா வெறுங்கையோட ஊருக்குப் போவக் கூடாது. அஞ்சாறு தேங்காயும், அரமூட நெலக்கடலையும் கொண்டு போயி பஸ் ஸ்டாண்டுல கொடுத்துட்டு வா'' என்றாள் கரிசனத்தோடு.
   அன்று தன் அறைக்குள் நுழைந்த தங்கராசுவிற்கு கௌசிகாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை "என்னென்ன தப்பை அவள் செய்கிறாளோ அதை அப்படியே போய் அழுகையும், கண்ணீருமாய் தன் மீது திருப்பிவிட்டு விடுகிறாள். இவள் அப்பனும், ஆத்தாளும் அவள் சொன்னதை அப்படியே நம்பிவிடுகிறார்கள். இப்படி நடந்தது உண்மைதானா? என்று தன்னிடம் ஒரு வார்த்த கேக்க மாட்டேங்காங்க' என்று கோபத்தோடு நினைத்தவன், கௌசிகா அறைக்குள் நுழையுமுன்பே சுவர் பக்கமாய் தூங்குவது போல் படுத்துக் கொண்டான்.
   கணவனின் கோபத்தை நன்றாகவே அறிந்திருந்தாள் கௌசிகா. அவள் எண்ணமெல்லாம் எப்படியாவது இவனை நம்ம கூடப் பட்டணத்திற்கு கூட்டிப்போய் விட வேண்டுமென்ற, ஒரே எண்ணத்தில்தான் இருந்தாள்.
   அன்று அவள் ரோசாப்பூ நிறத்தில் மெல்லிய நைட்டி அணிந்திருந்தாள். அதே நிறத்தில் உதட்டில் லைட்டாக லிப்ஸ்டிக். கூந்தலை வாரி தளரப் பின்னி முன்னால்விட்டு அதற்கு ஒரு மணிச் சலங்கையை கொத்தாக கோர்த்திருந்தாள். புருவங்களிலும், கண் இமைகளிலும் மஸ்காராவும், மையும் தனி அழகு கூட்டித் தெரிந்தது. முகத்தில் ரோஸ் வண்ணப்பவுடர். சடையின் கீழ்பக்கமாக வளைத்து மேலே கொண்டு வந்த மல்லிகை மொட்டு மெல்ல மலரத் துடித்துக் கொண்டிருந்தது. தான் கொண்டு வந்த பாதாமை அரைத்து, ஏலக்காயோடு சேர்த்து ஒரு டம்ளர் நிறைய பாலோடு வந்து நின்றாள்.
   தங்கராசுவிற்கு எல்லா வாசனையும் கூடியதில் இமைகள் பொருந்த மறுத்தன எப்போது கண்ணை திறந்து பொண்டாட்டியைப் பார்ப்போமென்று அவன் மனம் தவித்தது. ஆனாலும் அவனைவிட்டு மெல்ல, மெல்ல அவிழும் வைராக்கியத்தோடு கண்ணை மூடிக் கொண்டிருந்தான்.
   கௌசிகா மெல்ல அவன் அருகில் வந்து அவனின் சுருண்ட ரோமம் படர்ந்த நெற்றியில் தன் பூ இதழால் முத்தமிட்டாள். பிறகு, ""தூங்குங்க நான் இங்கேயிருந்தால் உங்களை தூங்க விட மாட்டேன்'' என்று சொல்லிவிட்டு கால் கொலுசு சத்தம் கேட்க வெளியே போவது போல் பாவனை செய்தாள்.
   இத்தனை நேரமும் அவனோடு போராடிக் கொண்டிருந்த இமைகள் சட்டென திறந்து கொண்டன. அவளின் அழகைப் பார்த்தபோது அவனிடமிருந்த கோபமெல்லாம் சூறாவளிக் காற்றாய் சுழன்று அவள் மீதிருந்த குற்ற உணர்வையெல்லாம் அடித்துக் கொண்டு போயே போனது.
   கட்டிலிலிருந்து இறங்கியவன் தாவி அவளை அணைத்தான். அவள் அழகும், அவளுக்குள்ளிருந்த வாசனையும் அவனை உணர்ச்சி வசப்படச் செய்தது.
   தங்கராசு மீது படுத்துக் கொண்ட கௌசிகா, அவனிடம் குறும்புகள் செய்து கொண்டே "உக்கும் இம்புட்டு ஆசை இருக்குறவர்தான் என்னை வந்து கூட்டிட்டு வந்துட்டீங்களாக்கும்'' என்றாள் பொய் கோபத்தோடு.
   "அதேன் நீயே வந்திட்டயே...''
   "அய்யோ அதுக்கு நானு என்ன பாடுபட்டேன்னு தெரியுமா? உங்களப் பாக்கணுமின்னு நான் ராத்திரியெல்லாம் தூக்கமில்லாம தவிச்சுட்டேன். இனியும் பொறுக்க முடியாதுன்னுட்டு அப்பாவ கூட்டிக்கிட்டு வந்துட்டேன்'' என்று அவள் சொன்னபோது தங்கராசுக்கு அவள்மீதிருந்த ஆசை இன்னும் கூடிப்போனது.
   அன்று கருதறுப்பு நெல் கருதறுப்பு என்றால் நெல் மூட்டைகள் வீடு வந்து சேரும் வரை விவசாயிகளுக்கு பயம் அடி வயிற்றில் தேளாய் கொடுக்கைத்தூக்கிக் கொண்டு அலையும். ஆள் கிடைக்க மாட்டார்கள். ஆள் கிடைத்தால் களம் கிடைக்காது.
   கருது அடிக்க களம் கிடைத்தால் பிணையலுக்கு மாடுகள் கிடைக்காது. இது போக வானத்தில் அவ்வப்போது வெண்மேகங்கள் கருமேகங்களாகி இவர்களை குலை நடுங்கச் செய்யும். சட, சடவென்று ஒரு ஐந்து நிமிஷத்திற்கு தூத்தல் விழுந்தாலும் போதும். ஆறுமாதமாக இரவென்றும், பகலென்றும் பார்க்காமல் உழைத்த அத்தனை உழைப்பும் பாழாகிவிடும். களத்தில் சிந்திய நெல் எல்லாம் மழை நீரில் முளைத்துவிடும்.
   அதனால் சங்கரியிலிருந்து கமலா வரை வயலிலும், களத்திலும் தான் கிடந்தார்கள். இவர்கள் காட்டிலேயே வேலை செய்யும் வீரணணுக்கு வயலே தஞ்சமென்று ஆகிவிட்டது. காலை நான்கு மணிக்கு எழுந்து அடுப்பு வேலையை முடித்துவிட்டு தூக்குச் சட்டியோடு வேலைக்குப் போகிறவர்கள்தான். இரவிலும் அங்கேயே கிடந்தார்கள்.
   கௌசிகாவிற்கு வீட்டிற்குள்ளிருந்து, இருந்து போரடித்துவிட்டது. அன்றுதான் தங்கராசு வீட்டுக்கு வந்தான். ஒருவழியாக நெல் கருதை அடித்து முடித்தாகிவிட்டது. நாளைக் காலையில் வியாபாரியை கூட்டி வந்து வீட்டுக்குப் போக மீத நெல்லை அளந்துவிட்டால் போதும். பட்ட பாட்டுக்கு பழுது இல்லாமல் பணமும் வந்து சேர்ந்துவிடும். நிம்மதியாகவுமிருக்கும். ஆனால் இன்றைக்கென்று வானத்தில் கருமேகங்கள் திட்டுத் திட்டாக கூடி, கூடி குலாவின. சங்கரியிலிருந்து கமலா வரைப் பதட்டத்திலிருந்தார்கள்.
   "ஆத்தா மாரி, நாங்க நெல்ல அள்ளி வீடு சேர்க்கும் வரைக்கும் ஒரு தூத்தலு பொட்டுன்னு தரையில விழுவக் கூடாது.
   அப்படி நீ செஞ்சிட்டேன்னா உனக்கு வெண் பொங்க வச்சி, வெள்ளச் சாவல களுப் போடுதேன்' என்று கோயிலுக்கு நேந்திருந்தாள் சங்கரி.
   கருதறுப்பு ஆரம்பமாகும் போதே தங்கராசு கௌசிகாவிடம், "கருதறுப்பு வேல நடக்கப் போவுது கௌசி, உன்னக் கூட்டிட்டுப் போயி உங்க வீட்டுல விட்டுட்டு வாரேன். ஒரு அஞ்சாறு நாளைக்கு இரு. பெறவு நானே வந்து உன்ன கூட்டிட்டு வந்துரேன்'' என்று கெஞ்சினான்.
   அவளோ, "இப்பத்தான் நான் ஊருல இருந்து வந்திருக்கேன். மறுபடியும் இப்பவே நானு திரும்பிப் போனா என் பிரண்ட்ஸ்கள்லாம் கேலி பண்ணுவாக'' என்று மறுத்துவிட்டாள்.
   - தொடரும்..

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai