சுடச்சுட

  
  NAGANATHI1

  முன்பெல்லாம் தண்ணீர் வறட்சி வட இந்திய மாநிலங்களை வாட்டிக் கொண்டிருந்தது. பல்வேறு நதி திட்டங்களால் தண்ணீர் வறட்சிக்கு அங்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாதி பாலைவனமாக இருக்கும் ராஜஸ்தானில் கூட இப்போது தண்ணீர் பற்றாக்குறையில்லை. ஆனால் தென்னிந்திய மாநிலங்கள் படிப்படியாக வறட்சியின் பிடியில் வந்துவிட்டன. மஹாராஷ்டிராவில் தண்ணீர் பிரச்னை அதிகம் உள்ளது. நகரங்களில் குறிப்பாக மெகா நகரமான மும்பையில் நீர் மேலாண்மை சரிவர நடப்பதால் தண்ணீருக்குப் பஞ்சமில்லை.
   இந்நிலையில், சுமார் இருபதாயிரம் பெண்கள் சேர்ந்து இறந்து போன ஆற்றிற்கு உயிர் தந்திருக்கிறார்கள் என்கிற செய்திதான் அது.
   "நூறு நாள் வேலை' திட்டம் உழவுத் தொழிலுக்கு ஆட்கள் கிடைக்காமல் செய்து கெடுத்துவிட்டது. "தினமும் சும்மா ரெண்டு மணி நேரம் வேலை செய்யற மாதிரி போக்கு காட்டிட்டு பொம்பளைங்க போயிறாங்க..' என்று விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில், இப்படி ஒரு அதிரடி திருப்பம் ஏற்படும் என்று யாருமே நினைத்துப் பார்க்கவில்லை.
   நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் இறந்து போன நதியை மீட்க முடியுமா?
   "முடியும்' என்று செய்து கட்டியிருக்கிறார்கள் வேலூர் மாவட்டம் கணியம்பாடி வட்டத்தைச் சேர்ந்த 20,000 பெண்கள். நான்கு ஆண்டுகள் இவர்கள் செய்த அயராத உழைப்பு ஒரு வெற்றிக் கதையாகியுள்ளது.
   ஜிபிஎஸ் உதவியோட நாகநதியின் வழித் தடங்களை புதுப்பித்து, நதி பாதைகளில் மீள் ஊற்று கிணறுகள் உருவாக்கியதுடன், ஆங்காங்கே தடுப்பு அணைகள் கட்டி நதியில் வரும் நீரின் வேகத்தை மட்டுப்படுத்தி பூமி நீரை ஆற அமர குடிக்கச் செய்திருக்கிறார்கள்.
   தமிழ் நாட்டில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு அபாயம் ஏற்பட்டிருக்கும்போது வேலூர் மாவட்டத்தின் பல வட்டங்கள் செழித்து நிற்கிறது.
   தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பசுமையாகாத்தான் இருந்தது. ஆனால் இன்றைய நிலை தலைகீழ். தண்ணீர் வறட்சி காரணமாக விளைந்து கொண்டிருந்த நிலம் நீர் வளமற்ற தரிசு நிலங்களாக மாறிவிட்டன. காரணம்..? ஜவ்வாது மலைகளில் உற்பத்தியாகி திருவண்ணாமலை சுற்று வட்டாரத்தின் ஜீவ நாடியாக இருந்த நாகநதி ஆற்றினை அறிவியல் பூர்வமாகக் கையாளாததும், கால்வாய்கள் சரியாகப் பராமரிக்கப்படாததும் தான். விளைவு ? திருவண்ணாமலை, வேலூர், சுற்றுவட்டாரங்களில் தண்ணீர் வறட்சி ஏற்பட்டது. முன்பு நாகநதி திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களை நனைத்துவிட்டு காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் இணையும்.
   நாகநதியில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தண்ணீர் வருவதில்லை. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்றால் நதியின் பாதையில் தடுப்பணைகள், மீள் நிரப்பு கிணறுகள் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவானது. தன்னார்வத் தொண்டர்கள் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். 2014 -ஆம் ஆண்டு 5 கோடி பட்ஜெட்டில் மத்திய அரசு ஒப்புதலுடன் "நாகநதி மறுவுருவாக்கத் திட்டம்' துவங்கப்பட்டது. 69 கிராமங்களில் இந்தத் பணித்திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டது.

  "வாழும் கலை' இயக்கத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களுடன், "மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு' திட்டத்தில் பதிவு செய்திருந்த பெண்கள், சுய உதவி மகளிர் குழுக்கள் என 20,000 பெண்கள் ஒன்றிணைந்து வேலூர் மாவட்டத்தின் பத்து வட்டங்களில் சுமார் 3500 கிணறுகளை 250 தடுப்பு அணைகளையும் கட்டி முடித்துள்ளனர்.
   ஒவ்வொரு கிணற்றின் அளவு இருபதடி ஆழம் ஆறு அடி அகலம். நதியோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
   இரண்டு ஆண்டுகளாக பெய்த மழையில் நதியின் பாதையில் பெருக்கெடுத்து வந்த தண்ணீர், தோண்டப்பட்ட கிணறுகளையும் தடுப்பு அணைகளையும் நிரப்பிச் சென்றதால் தண்ணீர் பூமிக்குள் இறங்கி நிலத்தடி நீரின் அளவு உயர்ந்துள்ளது. வறண்டு கிடந்த சுற்று வட்டார கிணறுகளில் தண்ணீர் அளவும் கூடியுள்ளது. தண்ணீர் இல்லாததால் உழவுத் தொழிலை விட்டு விட்டு வேறு வேலைகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் நெல், தக்காளி, சோளம், நிலக்கடலை பயிரிடுதலை உற்சாகமாகத் தொடங்கி விட்டனர்.
   இந்த திட்டத்தின் வெற்றியில் பெரும் பங்கு சுமார் இருபதாயிரம் பெண்களுக்குச் சொந்தம். தமிழகத்திற்கு முன்மாதிரியாக மாறியிருக்கும் இவர்கள், கிணறு தோண்டுவது, கான்கிரீட் வளையங்களை உண்டாக்குவது, அவற்றை தோண்டப்பட்ட பள்ளத்தில் இறக்குவது , கல்களைச் சுமந்து வந்து தடுப்பு அணைகள் கட்டுவது என்று எல்லா நிலை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்துள்ளனர்.
   வியர்வை சிந்தி நீர் மேலாண்மைக்கு அடித்தளம் இட்டுள்ளனர். "முன்பெல்லாம் வீட்டுச் செலவுக்கு கணவரிடம் காசு கேட்பேன். இந்த திட்டத்தில் தினமும் ரூ.224 கிடைத்தது. அதனால் பயிரிட முடியாத கஷ்ட காலத்திலும் வீட்டு செலவுகளை நானே பார்த்துக் கொள்ள முடிந்தது' என்று சொல்லும் பெண்கள் ஏராளம். இறந்த நதிக்கு மீண்டும் உயிர் கொடுத்து, வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கிய பெண்களிடமிருந்து நாமும் பாடம் கற்போம்.
   - பிஸ்மி பரிணாமன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai