சடை பின்னி சாதனை! 

24 மணி நேரம் தொடர்ந்து 167 பெண்களுக்கு சடைபின்னி சாதனை நிகழ்த்தியுள்ளார் சென்னை, அசோக் நகரை சேர்ந்த அழகு கலை நிபுணர் வாசுகி மணிவண்ணன்.
சடை பின்னி சாதனை! 

24 மணி நேரம் தொடர்ந்து 167 பெண்களுக்கு சடைபின்னி சாதனை நிகழ்த்தியுள்ளார் சென்னை, அசோக் நகரை சேர்ந்த அழகு கலை நிபுணர் வாசுகி மணிவண்ணன். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
"நமது கலாசார மாற்றத்தாலும், உணவு பழக்க வழக்கங்களாலும் ஆரோக்கியம் குறைந்து பெரும்பாலானோர் குறிப்பாக பெண்கள் தங்களது கூந்தலை இழந்து வருகின்றனர். நவீன காலத்திற்கு வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதால் கூந்தலின் மீது அக்கறை குறைந்துவிட்ட இன்றைய இளம் தலைமுறை பெண்கள் சடை பின்னுவதை நாகரிகமாற்றம் என்றும், மிக சிரமமாகவும் நினைப்பதால் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் நீளமான கூந்தலை வளர்க்க விரும்புவதில்லை. இதனால் நமது பாரம்பரியமான அழகு கலையில் ஒன்றான சடை பின்னுதல் அழிய தொடங்கி வருகிறது.
ஆங்காங்கே திருமண சடங்குகளிலும், சுப நிகழ்வுகளிலும் காட்சியளிக்கும் சடைகளும் கூட ரெடிமேட் சடைகள், அல்லது போலி (சவுரி) முடியினை வைத்து அழகு படுத்தப்பட்ட சடைகளாகவே இருக்கிறது. 
மேலும், மேலை நாட்டு கலாசாரம் இப்போது படிப்படியாக நம் தமிழ் பெண்கள் தலைகளிலும் கை வைக்க தொடங்கிவிட்டது என்பது நாம் வருந்த வேண்டிய விஷயம்.
சடை பின்னுதல் குறித்த விழிப்புணர்வை இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் விதமாக இந்த உலக சாதனை நிகழ்வு நடத்தப்பட்டது. 
இரவு 7.15 மணிக்கு தொடங்கி மறு நாள் இரவு 7.15 மணிக்கு முடிவடைந்தது. தொடர்ந்து 24 மணி நேரம் நடைபெற்ற இந்த சாதனை நிகழ்வின் இறுதியில் 167 பேருக்கு தலைமுடி பின்னப்பட்டது. இந்த உலக சாதனை நிகழ்வானது முறையாக கின்னஸ், மற்றும் யுனிக் வோர்ல்டு ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தில் பதிவுசெய்து நடத்தப்பட்டது, அதன் வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளை சரியாக பின்பற்றி சடைபின்னுதல் சரியான முறையில் பின்னப்பட்டதா என்பதை அனைத்து இந்திய சிகை அலங்காரம் மற்றும் அழகு கலை சங்கத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அழகு கலை நிபுணர்கள் நேரடியாக கண்காணித்தனர்'' என்றார். 
கூடுதலாக இந்த உலக சாதனை முயற்சியின் காட்சி ஆதாரத்திற்காக 6 வீடியோ கேமராக்கள், 4 சிசிடிவி கேமராக்கள் என 10-க்கும் மேற்பட்ட கேமராக்களைக் கொண்டு வெவ்வேறு கோணங்களில் 24மணி நேரமும் பதிவு செய்யப்பட்டது. சாதனை நிகழ்வின் இறுதியில் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின் இதனை புதிய உலக சாதனை "Most Head's Braided in 24 Hours" என பதிவு செய்தும், வாசுகி மணிவண்ணனை உலக சாதனையாளராக அங்கீகரித்தும், உலக சாதனை சான்றிதழினை Unique World Records Limited-இன் தலைமை தீர்ப்பாளர் மற்றும் "சாதனை சிகரம் கிரியேஷன்ஸ்' தலைவர் ரஹ்மான் வழங்கி கௌரவித்தார். 
- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com