அது ஒரு பொற்காலம்! - நடிகை சச்சு

சக்தியில்லை என்றால் சிவன் இல்லை. அதனால் சக்தியைப் போற்றும் இந்த மகளிர்தின விழாவின் மூலம் அனைத்து மகளிருக்கும் என் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
அது ஒரு பொற்காலம்! - நடிகை சச்சு

சக்தியில்லை என்றால் சிவன் இல்லை. அதனால் சக்தியைப் போற்றும் இந்த மகளிர்தின விழாவின் மூலம் அனைத்து மகளிருக்கும் என் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
 இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. தினமணி மிகவும் பாரம்பரியமான பத்திரிகை . இந்த பத்திரிகை நடிகர், நடிகைகள், கலையுலகத்தைச் சேர்ந்த மற்ற அனைவரையும் பத்திரிகையில் பாராட்டியும், அவர்கள் குறித்த விமர்சனங்கள் இருந்தால் சின்னதாக ஒரு கோடு காட்டி எழுதியும் எங்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
 ஒரு விஷயம் சொல்ல வேண்டுமென்றால், இன்று இங்கு விருது வாங்க வந்திருக்கும் எங்களைப் பற்றியும், எங்களது படங்களையும் தொகுத்து கானொளி மூலம் காண்பித்தார்கள். இதையெல்லாம் பார்த்து பிரமித்து போய்விட்டேன். இத்தனை வருடங்கள் ஓடிவிட்டதா என்று. இதற்கு எல்லாம் காரணம் யாரு என்று பார்த்தால் இன்றைய வரைக்கும் எங்களை அழைத்து இதுபோன்ற ஒரு விருது வழங்கும் விழாவெல்லாம் நடத்துகிறார்கள் என்றால் அதற்கு காரணம் ரசிகர்கள். இன்றும் அவர்கள் எங்கள் மீது காட்டும் அன்புதான். இன்று, எங்கள் காலகட்டத்தினரும் இருக்கிறார்கள். எங்களுக்கு அடுத்த காலகட்டத்தினரும் இருக்கிறார்கள், அதைத்தான்டி இன்றைய இளம் தலைமுறைகள் பேரன் பேத்திகள் என அத்தனை வயதுகாரர்களும் எங்களுக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள் என்றால் அது தொலைக்காட்சியின் வரவினால்தான்.
 டிவி வந்த ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவுக்கு ஒரு சறுக்கல் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் எங்களுக்கு இருந்தது. நிறையபேர் டிவியின் வரவால் சினிமா அழிந்துவிடும் என்றெல்லாம் சொன்னார்கள்.
 ஆனால், கலைத்துறையில் நாடகங்களை தாய்வீடு என்று சொல்லலாம். அதிலிருந்துதான் ஒவ்வொன்றாக உருவானது. அதுபோன்று உருவாகும்போது சினிமாவை வைத்துதான் மீடியாவும், சேனல்ஸýம் வந்தது.
 இந்நிலையில் டிவியில் நடிக்கும்போது, வெளியுலகத்திற்கு அவ்வளவாக வராத பெண்களும், குழந்தைகளும் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பவர்களை புரிந்து கொள்கிறார்கள். அவர்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.
 இதை நான் எப்படி உணர்ந்தேன் என்றால், நீண்ட காலம் கழித்துதான் "நந்தினி' என்ற தொடரில் நடித்தேன். அதில் நடிக்கும்போது, ஒருமுறை வெளியே செல்லும்போது, அங்கிருந்த பெரியவர்கள் நான் நடித்த படங்களை பற்றி சொல்லி "சச்சு அம்மா வருகிறார்'' என்றார்கள். உடனே, அவர்கள் அருகில் இருந்த குழந்தை, "அதெல்லாம் கிடையாது இவங்க நந்தினியில் வந்த பாட்டி'' என்றது. இதைகேட்டதும், நான் மகிழ்ந்து போனேன். அந்தந்த காலகட்டத்திற்கு தகுந்தாற்போல் நாங்கள் எப்படி மாறிப்போனோம் என்று எங்களுக்கே புரியவில்லை.
 திரையுலக பயணத்தைப் பொருத்தவரை அவ்வப்போது கிடைக்கும் நல்ல நல்ல வாய்ப்புகளை சரியாக நடிகர், நடிகைகள் பயன்படுத்திக் கொண்டால், அவர்கள் எல்லா காலகட்டத்திலும் இருப்பார்கள். ஆனால், ஒருசிலரால் அது முடியவில்லை.
 இன்று இங்கு வந்து கூடியிருக்கும் இந்த நட்சத்திரங்கள். அதாவது நாங்கள் எல்லாம் ஒரே ஆலமரம். அந்த ஆலமரத்திற்கு கீழேதான் தற்போது நிறைய விழுதுகள் வந்து கொண்டே இருக்கின்றன.
 சமீபத்தில் ஒரு படத்தில் நடித்தேன். என் கூட நடிக்க வேண்டிய அந்த ஆர்டிஸ்ட் எப்போ செட்டுக்குள் வந்தார்கள் என்றே எனக்கு தெரியவில்லை. "உங்களுக்கு ஷாட் முடிந்துவிட்டது, நீங்கள் கேரவனில் போய் இருங்கள்'' என்கிறார்கள். அதன்பின் அவங்க போய் நடிக்கிறாங்க. ஆனால், படத்தில் பார்த்தால் ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்துலதான் நின்று பேசுகிறோம்.

 ஆனால் அன்றைய காலகட்டங்களில் ஸ்டூடியோ என்று ஒன்று இருந்தது. நாங்கள் எல்லாருமே ஷாட் முடிந்ததும் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்போம், ஒன்றாகத்தான் சாப்பிடுவோம். ஒன்னாதான் பழகுவோம்.
 அதுபோன்று அப்போதெல்லாம் ஒரே ஸ்டூடியோவில், ஒவ்வொரு தளத்தில் ஒரு படம் என பல படங்களின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும். அதில் வேற்று மொழி படங்களும் இருக்கும். ஆனால், பக்கத்து செட்டில் இருக்கும், தெலுங்கோ, மலையாளமோ, கன்னடமோ , ஒரியாவோ, பெங்காலியோ, இந்தியோ அத்தனை ஆர்ட்டிஸ்ட்களையும் நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லாருமே ஒன்றாக பேசி பழகுவார்கள். அதுபோன்ற ஒரு பொற்காலமான காலகட்டத்தில் நாங்கள் இருந்தோம். அது இனி யாருக்கும் கிடைக்காது.
 சௌகார் அம்மா மாதிரியோ, ஜமுனா அம்மா மாதிரியோ, வைஜயந்தி மாலா அம்மாவை போன்றோ இனி ஒருவர் கிடைக்க மாட்டார்கள். இன்று இவர்களோடு எல்லாம் சேர்ந்து நான் விருது வாங்குவது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்க காரணமாக இருந்த தினமணிக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 - ஸ்ரீதேவி குமரேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com