என் பிருந்தாவனம்! - பாரததேவி

பட்டணத்தில் பிறந்து வளர்ந்த கௌசிகா, பட்டிக்காட்டு தங்கராசுவை மணம்முடித்துக் கொண்டு கிராமத்துக்கு வருகிறாள். வந்த மறுநாள் காலையில் தூங்கி எழுந்ததுமே, தனக்கு பெட் காபி வேண்டும் என்று
என் பிருந்தாவனம்! - பாரததேவி

இது வரை...
 பட்டணத்தில் பிறந்து வளர்ந்த கௌசிகா, பட்டிக்காட்டு தங்கராசுவை மணம்முடித்துக் கொண்டு கிராமத்துக்கு வருகிறாள். வந்த மறுநாள் காலையில் தூங்கி எழுந்ததுமே, தனக்கு பெட் காபி வேண்டும் என்று கணவனிடம் அடம்பிடிக்கிறாள். பிறகு கணவன் வீட்டில், பாத்ரூமும், கக்கூசும் இல்லாததை கேட்டு கோபம் கொண்டு, தனது பிறந்த வீட்டுக்கே சென்றுவிடுவதாக கூறி தனது துணிமணிகளை எல்லாம் பெட்டியில் வைத்துக் கொண்டு கிளம்புகிறாள். அவளின் சத்தத்தைக் கேட்டு வந்த தங்கராசுவின் தாய் சங்கரியும், தங்கை கமலாவும், கௌசியைக் கண்டு ஒன்றும் புரியாமல் நிற்க. காலையில் இருந்து நடந்தவற்றையெல்லாம் மகனிடம் கேட்டு அறிந்த சங்கரி, கௌசியை அவளது தாய்வீட்டில் விட்டுவிட்டு வரும்படி கூறுகிறாள். இதைக்கேட்டு அதிர்ந்து போகிறாள் கௌசி. தங்கராசுவும், கமலாவும் கூட தன் தாய் சொன்னதைக் கேட்டு திகைத்து நிற்க. கமலாவிடம், திரும்பி "வரவ திரிச்சிட்டியா இல்லியா' என்று அதட்டலாக கேட்டாள் சங்கரி. இனி...
 "திரிச்சிட்டேம்மா...'' என்று சொன்ன கமலா, "எம்மா நானு ஒன்னு சொல்லுவேன் நீ கோவிச்சுக்கக் கூடாது'' என்றாள் பயந்த குரலில்.
 "உன் மதினி சொன்னதைக் கேட்டு எனக்கு காது குளுந்து போச்சு.. நீ என்ன சொல்லப்போற சொல்லு, அதயும் கேப்போம்'' என்றாள்.
 " இல்லம்மா நேத்துதேன் மதினி மறுவீடு வந்திருக்காக. அதுக்குள்ள அவுக வீட்டுக்கு அனுப்புனமின்னா ஊர்க்காரக என்னமாவது பேசுவாக. அண்ணி வீட்டுலயும் நம்மளப்பத்தி என்ன நினைப்பாக, இப்ப அவுக ஊருக்குப் போறது நல்லாவாம்மா இருக்கும்?''
 "அதுக்காவ? தானா ஒரு காப்பி கூட போட்டு குடிக்க மாட்டேங்கா. அவ குளிக்க வெண்ணியும் நம்மதான் போட்டுதரணுமாம். குளிக்கதுனாலும் அவளா குளிப்பாளோ இல்ல நம்மதேன் குளிப்பாட்டிவிடணுமோ? சரி அதனாச்சிலும் விடு, இப்ப கக்கூசு கேக்காளே அதுக் கென்ன செய்யப்போற? இந்த மாதிரி விசயமெல்லாம் வேலைக்காவாது. தங்கராசு, நீ உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போ'' என்று ஆணையிட்ட குரலில் சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டாள் சங்கரி.
 கமலா, அண்ணனைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு இன்னும் கொஞ்சம் குறைகிடந்த வரகை திரிக்கச் சென்றாள்.
 கௌசிகாவின் முகம் வாடிய மாலையாய் துவண்டுகிடந்தது. அவள் விழிகளில் கண்ணீர் தளும்பி தத்தளித்துக் கொண்டிருந்தது. தங்கராசுவின் முகம் பார்க்கச் சகிக்கவில்லை. தன் அம்மா இப்படி பேசுவாள் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
 "கொஞ்ச நாளைக்கு சமாளிச்சிக்கோ தாயி, பெறவு பாப்போமென்று சமாதானப்படுத்துவாள்'' என்று தான் எதிர்ப்பார்த்தான். ஆனால், பட்டென்று இப்படி சொல்லிவிட்டாளே என்று நினைத்து, நினைத்து வேதனைப்பட்டான். ஆனால், அடுத்த நிமிஷமே அம்மாவைச் சொல்லியும் குத்தமில்லை. இப்ப கருதறுப்பு நேரம் காட்டில் கிடக்கும் கருது, காயையெல்லாம் வீடு கொண்டு வந்து சேர்த்தால்தான் இனி அடுத்த வெள்ளாமை வரும் வரை நிம்மதியாக இருக்கலாம் என்று அவன் மனம் நியாயம் பேசியது. அவன் மட்டுமல்ல அவன் தம்பியும் சரி, தங்கையும் சரி இது நாள் வரை தாய் சொல்லை தட்டி அறியாதவர்கள். அதிலும் இவன் வீட்டுக்கு மூத்தவனாகப் பிறந்ததால் அம்மாவின் சொற்களை மறுபேச்சு பேசாமல் அனுசரித்துதான் வந்திருக்கிறான்.
 சங்கரியும் சிறுவயதிலேயே தகப்பன் இல்லாத பிள்ளைகள் என்று அவர்களை முகம் சிணுங்கவிடமாட்டாள். அப்படி செல்லமாய் வளர்த்தவள்தான், "இப்போது எதுவும் செய்யமுடியாது' என்று சொல்லிவிட்டாள்.
 கௌசிகாவின் முகத்தைப் பார்க்கவே தங்கராசுவிற்கு கஷ்டமாயிருந்தது.
 "சரி கௌசி, நீ புறப்படு'' என்று அவன் சொல்லவும், கௌசிகா தன் கைகளை அவன் தோளில் மாலையாகப் போட்டவாறு நெஞ்சு வெடித்துவிடுகிறார் போல் விம்மி, விம்மி அழுதாள்.
 அவளின் மையிட்ட விழிகளிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகி கன்னத்தின் வழியே ஓடியதைப் பார்க்கையில் தங்கராசுவிற்கும் அழுகையாய் வந்தது. ஆனாலும், தன்னை திடப்படுத்திக் கொண்டவனாய்,
 "கௌசி, இப்ப அழுதுகிட்டு இருக்க நேரமில்லை . சீக்கிரம் புறப்படு. உன்னக் கொண்டுபோய் விட்டுட்டு நானு இன்னைக்கே வீடு திரும்பனும்'' என்றான் அழுகை கரைந்த குரலில்.
 "உன்னவிட்டு நானு போகமாட்டேன்'' என்றாள் கௌசிகா பிடிவாதமாக.
 "உன்ன யாரும் இங்கேயிருந்து போகச் சொல்லல. ஆனா கௌசி, இங்கயிருந்து நீ மட்டும் போகல என் உசுரயும் பறிச்சிகிட்டுப் போறே'' என்றான் தங்கராசு.
 அவன் அப்படி சொன்னதுதான் தாமதம். அதற்காகவே காத்திருந்தவள் போல் அவன் தோளில் சாய்ந்து கொண்டு, "என்னால உன்ன விட்டுட்டு இருக்க முடியாது தங்கராசு'' என்று சொல்லியவாறு விம்மினாள் கௌசிகா.
 தங்கராசு அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டான். "இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல, கௌசி நீ மட்டும் எங்க வீட்டு வாழ்க்கைக்கு பழகிக்கோ நம்ம பிரியவே தேவயில்ல.''
 " என்னால அப்படியிருக்க முடியாது. நானு வசதியா வாழ்ந்து பழகிட்டேன்'' என்றாள் கௌசி.
 "எங்க ஊரு கிராமம். நீ இங்க இருக்க வசதிக்கு தக்கமாதிரிதேன் வாழ பழகிக்கணும்'' என்று தங்கராசு சொன்னதும் அவன் தோளிலிருந்து விலகி அவனைப் பார்த்தாள் கௌசிகா. அவள் கண்கள் கோபத்தில் அனலாய் தகித்தது.
 "இப்படி சொல்ல உனக்கு வெக்கமா இல்ல. தன் பொண்டாட்டிக்கு வேணுங்கிற வசதிய செஞ்சிக் கொடுக்கிறவன்தான் ஒரு நல்ல கணவன். ஆனா நீ...'' என்றவள். ஓ..வென்று குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.
 இனி இவளை சமாதானப்படுத்த முடியாது. அம்மா சொன்னது போல் அவள் கொஞ்சநாள் பிறந்த வீட்டிலேயே இருக்கட்டும் என்று நினைத்த தங்கராசு அவளுடைய துணி, மணிகளையெல்லாம் அவள் கொண்டு வந்த பெட்டியில் திணித்தான்.
 "இதோபாரு கௌசி, இப்ப நீ புறப்பட்டேனா நானு கூட்டிட்டுப் போயி உன் அம்மா வீட்டுல விட்டுட்டு வருவேன். இப்படி நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டு இருந்தேனா நானு பிஞ்சைக்குப் போயிருவேன். பிறவு உன் இஷ்டம்'' என்றவன் வெளியே இரண்டெட்டு எடுத்து வைக்க.. அவன் பின்னாலேயே மெல்ல நடந்தாள் கௌசிகா.
 அவர்கள் பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தபோது வெயில் ஏறியிருந்தது. ஆட்கள் பரபரப்பாக அங்கங்கே வந்து நின்ற பஸ்களுக்காக ஓடிக் கொண்டிருந்தார்கள்.
 அவள் ஊர் பஸ் வந்து நிற்க. கௌசிகா அதை நோக்கி நடந்தாள்...
 தங்கராசுவுக்கு அப்போதுதான் தாங்கள் இருவருமே காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடவில்லை என்ற ஞாபகம் வந்தது. காட்டில் வேலை செய்கிற அவனுக்கு எப்போதும் நேரத்திற்கு சாப்பிட முடியாது அதனால் பசி அவனுக்குப் பழக்கமாயிருந்தது ஆனால் அவள் செல்லமாக வளர்ந்தவள் அதிலும் பட்டணத்துப் பொண்ணு கடிகாரத்தைப் பார்த்து சரியான நேரத்துக்கு சாப்பிட்டிருப்பாள் என்று நினைத்த தங்கராசு தன் மனைவிக்காகப் பரிதாபப்பட்டான். அவளை எப்படியும் சாப்பிட வைத்தப் பிறகுதான் ஊருக்குக் கூட்டி போக வேண்டுமென்று நினைத்தவன். அவள் பஸ்ஸில் காலை வைக்கப் போகையில்,
 "கௌசி பஸ்ல ஏறாத'' என்று தடுத்தவனை வியப்போடு பார்த்தாள் கௌசிகா.
 நான் நிச்சயமா பாத்ரூம் , கக்கூஸ் எல்லாத்தையுமே கட்டித் தாரேன் நீ ஊருக்குப் போக வேண்டாம் என்று சொல்லப் போகிறானோ? என்ற ஆசை அவள் கண்களில் மின்னலாய் தோன்றி மறைந்தது.
 - தொடரும்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com