குருவின் ஆசிர்வாதம்தான்! வெண்ணிற ஆடை நிர்மலா

தினமணி பத்திரிகை நான் சின்ன வயதிலிருந்து பெருமையாக நினைக்கக் கூடிய பத்திரிகை. பாரம்பரியம் மிக்க பத்திரிகை.
குருவின் ஆசிர்வாதம்தான்! வெண்ணிற ஆடை நிர்மலா

தினமணி பத்திரிகை நான் சின்ன வயதிலிருந்து பெருமையாக நினைக்கக் கூடிய பத்திரிகை. பாரம்பரியம் மிக்க பத்திரிகை. அதில் பெயர் வருவதை, செய்தி வருவதைப் பெருமையாக நினைத்த காலம். அந்தப் பத்திரிகை கொண்டாடும் இந்த மகளிர் தினத்தில் எனக்கு நட்சத்திர சாதனையாளர் விருது கொடுத்திருப்பது எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. அந்த விழாவைச் சிறப்பிக்க வந்திருக்கும் உங்கள் எல்லாருக்கும் நன்றி.
 என்னைப் பற்றி சொல்லும்போது சொன்னார்கள், கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு நடனம் கற்றுக் கொள்ள வந்தேன் என்று. அதற்கு மூலகாரணமே எனது குரு வைஜயந்தி மாலா பாலிதான். எங்கேயோ கும்பகோணத்தில் டான்ஸ் பண்ணிக் கொண்டிருந்த என்னை சென்னைக்கு வரவழைத்து, டான்ஸ் கற்றுக் கொடுத்தார்கள். அப்போது அவர்கள் ரொம்ப பிஸியாக ஷூட்டிங் போகிற நேரம்.
 என்னுடைய ஒரிஜினல் பெயர் சாந்தி. "சாந்து...சாந்து'ன்னு கூப்பிட்டு எனக்கு எப்படி ஆடணும் என்று கற்றுக் கொடுத்தார்கள். பரதநாட்டியத்தை எப்படி நன்றாக ஆட வேண்டும் என்று நான் கற்றிருந்தேன். ஆனால் வைஜயந்தி மாலா அக்காவுடன் மேடை நிகழ்ச்சிகளில் குறத்தி டான்ஸ் எல்லாம் ஆட வேண்டும். அதற்கு இடுப்பையெல்லாம் ஆட்டி ஆட்டி ஆட வேண்டும். அது எனக்கு வராது. அதையெல்லாம் சொல்லிக் கொடுத்து என்னை உருவாக்கினதே என்னுடைய குரு வைஜயந்தி மாலா அக்காதான். அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுடைய ஆசியும், கற்றுக் கொடுத்தலும்தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. அவர்களுக்குச் சாதனையாளர் விருது கொடுக்கப்படுகிற இதே மேடையில் எனக்கும் விருது கிடைத்திருக்கிறது என்றால் அது அவர்களுடைய ஆசீர்வாதம்தான்.
 இன்னும் வரக் கூடிய ஆண்டுகளில் இம்மாதிரி சாதனையாளர்களுக்கு விருது வழங்கக் கூடிய இந்த தொண்டு தொடர்ந்து நடக்க வேண்டும். அதற்கு என் வாழ்த்துகள்.
 என்னுடைய மாணவி கலா மாஸ்டர் சொன்னார், நான் வந்து ரொம்ப நல்ல டீச்சர், மிகவும் நன்றாகப் பழகுவேன் என்று. அது கூட வைஜயந்தி அக்காவிடம் இருந்து கற்றுக் கொண்டதுதான். கற்றுக் கொடுக்கிறபோது ரொம்ப ஸ்ட்ரிக்டாக கற்றுக் கொடுப்பார்கள். ஆனால் இன்னொரு புறத்தில் ரொம்பவும் அன்பாக கொஞ்சிப் பேசுவார்கள். "அக்கா உங்களிடம் இருந்து அதை நான் கற்றுக் கொண்டேன். ரொம்ப தேங்க்ஸ்.''
 ஒவ்வொரு நடிகைகளையும், கலைஞர்களையும் ஒரு குடும்பமாகத்தான் நான் பார்க்கிறேன். செளகார் அம்மா என் முதல் அம்மாவாக நடித்தார்கள். "லக்ஷ்மி கல்யாணம்' படத்தில். என் அம்மாவாக நடித்த செளகார் அம்மா என் ஒரிஜினல் அம்மாவை மாதிரி அழகு. எனக்கு அம்மாவாக நடித்த ஒவ்வொருவருமே அழகாக இருந்தார்கள். செளகார் அம்மா அந்தப் படத்தில் என்னை அடிப்பதற்கு என்றே வருவார்கள். ஆனால் அடிக்கமாட்டார்கள். அடிக்கிறமாதிரி நடிப்பார்கள். அது எனக்கு எப்படித் தெரிந்தது என்றால் என் இரண்டாவது படமான "காட்டுத்துளசி' என்ற மலையாளப் படத்தில் நடித்தபோது அதில் எனக்கு அப்பாவாக நடித்தவர் ஒரு நாடக நடிகர். அந்தப் படத்தில் நான் ஹீரோவை காதலிப்பது தெரிந்ததும் சவுக்கு மாதிரி ஒரு குச்சியை எடுத்து அடிக்க வேண்டும். அவர் அடித்த அடியில் மூன்று நாட்கள் நான் எழுந்திருக்கவில்லை. அப்படியே படுத்திருந்தேன். அவர் நடிக்கவில்லை. நிஜமாகவே என்னை அடித்தார். அப்போதுதான் செளகார் அம்மாவின் நடிப்பின் சிறப்பு எனக்குத் தெரிந்தது.
 அதேமாதிரி எப்போதுமே எனக்கு ஒரு மூத்த அக்காவாக இருந்து எல்லாவிதத்திலும் அறிவுரை சொல்வதாக இருக்கட்டும், எல்லாவிதத்திலும் ரொம்ப ஃப்ரண்டாக இருப்பதாகட்டும் அது சச்சு அக்காதான். அவர்கள்தான் எல்லா விஷயங்களையும் என்னிடம் பேசுவார்கள்.
 "லக்ஷ்மி கல்யாணம்' ஷூட்டிங்கில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து செட்டில் நடந்த ஷூட்டிங்கில் கே.ஆர்.விஜயா நடித்துக் கொண்டிருப்பார்கள். அப்போது கேட்பார்கள்: "உனக்கு எப்பதான் கல்யாணம் ஆகும். எப்பப் பார்த்தாலுல் கல்யாணப் பெண் மாதிரி பூச்சடை வைச்சுக்கிட்டு இருக்கே'' என்பார்கள். இந்த மாதிரி கூட நடித்த ஒவ்வொருத்தருமே என்னிடம் ஒரு குடும்பம் போலதான் பழகியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாரையும் இங்கு பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்.
 என்னுடைய வளர்ப்பு அம்மாவாக நடித்தவர்கள் ராஜ்யஸ்ரீ"பத்துமாத பந்தம்' படத்தில். எனக்கு அம்மாவாக நடித்த எல்லாரும் அழகாகத்தான் இருந்தார்கள். அதைத்தான் முதலில் நான் குறிப்பிட்டேன்.

இந்த விழாவில் கலந்து கொண்டிருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்னுடன் குடும்பமாக பழகியவர்கள் அத்தனை பேரையும் பார்த்து பழகுவதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த தினமணி நிறுவனத்தாருக்கும் பத்திரிகையாளருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.
 -ந.ஜீவா
 படங்கள்: ப.ராதாகிருஷ்ணன், ஏ.எஸ்.கணேஷ்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com