டிசைனர் சேலையில் இரட்டிப்பு லாபம் உண்டு!

சில மாதங்களுக்கு முன்பாக தினமணி மகளிர்மணியில் சணல்பை தயாரிப்பு பற்றி கட்டுரையைப் படித்துவிட்டு சுஜா என்ற வாசகி தஞ்சாவூரில் இருந்து பேசினார். "மேடம் எனக்கு சணல் பை தைக்க கற்றுக்கொள்ள வேண்டும்
டிசைனர் சேலையில் இரட்டிப்பு லாபம் உண்டு!

இல்லத்தரசிகளும் தொழில் முனைவோர் ஆகலாம்! 44
 சில மாதங்களுக்கு முன்பாக தினமணி மகளிர்மணியில் சணல்பை தயாரிப்பு பற்றி கட்டுரையைப் படித்துவிட்டு சுஜா என்ற வாசகி தஞ்சாவூரில் இருந்து பேசினார். "மேடம் எனக்கு சணல் பை தைக்க கற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார். "நானும் கற்றுத் தருகிறேன்' என்றேன். ஒரு நாள் அவர் சென்னையில் வசிக்கும் சகோதரியுடன் வந்தார். அவரைப் பார்த்த எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. ஏனெனில், அவரது இரண்டு கால்களும் செயலிழந்து விட்டது. அவரால் நடக்க முடியாது. தரையில் நகர்ந்து நகர்ந்துதான் வந்தார். "எப்படியம்மா நீங்கள் இதை தைப்பீர்கள்'' என்றதற்கு, " நான் தைப்பதற்காக பிரத்யேகமான தையல் இயந்திரம் வீட்டில் உள்ளது. எனக்கு சணல் பைகள் தைக்கும்முறை, டிசைன் ஆகியவற்றை சொல்லிக் கொடுங்கள், நீங்களே - தைத்து காட்டுங்கள்'' என்றார். அவரின் தன்னம்பிக்கை என்னை பிரமிக்க வைத்துவிட்டது. அவருக்கு சணல்பை தயாரிக்க பயிற்சி அளித்தேன்.
 "சரி தஞ்சாவூரில் எப்படி விற்பனை செய்வீர்கள்'' என்றதற்கு, "எனக்கு நிறையபேரைத் தெரியும் அவர்கள் மூலம் விற்பனை செய்யலாம்'' என்றார்.
 நான் ஒருமுறை தஞ்சாவூரில் "சலங்கை நாதம்' என்று ஆண்டுக்கு ஒருமுறை விற்பனை கண்காட்சி நடப்பது வழக்கம். அது ஞாபகம் வந்தது. அதில் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. எங்களிடம் உள்ள சணல் பைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு போய் அதில் கலந்து கொண்டோம். அது 10 நாள் நிகழ்ச்சி. பொதுவாக மாலை வேளைகளில் நிறைய கலை நிகழ்ச்சிகள் நடக்கும். அங்கு நிறைய கடைகள் வந்து இருந்தன. எனக்கு அந்த இடத்தைப் பார்த்ததும் நம்பிக்கையே வரவில்லை. சரி 10 நாளும் தஞ்சாவூரில் இருந்துவிட்டு போகலாம் என்று நினைத்தேன். ஆனால் மாலையில் அங்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து அசந்துவிட்டேன். இரண்டே நாளில் என்னுடையப் பொருட்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. இதை அந்த பெண்மணியிடம் கூறி அவர்களையும் அந்த பொருட்காட்சியில் கலந்து கொள்ள ஆலோசனை கூறினேன்.
 சமீபத்தில் ஒரு நாள் அவர் பேசியபோது கூறினார், ""மேடம், நான் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை பார்த்து என்னுடைய தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்ய அலுவலக வளாகத்தில் இடம் கேட்டேன். அவர்களும் எனக்கு இடம் தந்துள்ளார்கள் எனது தயாரிப்புகளை விற்பது இப்போது சுலபமாக உள்ளது'' என்றார். இதைக் கேட்ட எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஊக்கமது கைவிடேல் என்ற ஆத்திச்சூடி தான் ஞாபகத்திற்கு வந்தது.
 சரி, இந்த வாரம் என்ன தொழில் செய்யலாம் என்று பார்க்கலாம். இரண்டு வாரங்களுக்கு முன்பு தினமணி மகளிர்மணியில் சேலத்தை அடுத்த இளம்பிள்ளை என்னும் ஊரில் சேலைகள் விற்கும் மொத்த விலைக் கடைகள் உள்ளன என்றும் அந்தப் சேலைகள் அங்கு நெசவு செய்து விற்கப்படுவதால் தரமானதாகவும், விலை குறைவாகவும் உள்ளன என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபோன்ற இடங்களில் இருந்து சேலைகளை மொத்த விலை கடைகளில் வாங்கி விற்பனை செய்யலாம். அதுபோன்று டிசைனர் சேலைகள், எம்ப்ராய்டரி சேலைகள் மீது பெண்களுக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு உண்டு. எனவே, டிசைனர் சேலைகளையும், எம்ப்ராய்டரி சேலைகளையும் நாமே சிம்பிளாக உருவாக்கி விற்பனை செய்யலாம். எதை எப்படி செய்வது என பார்ப்போம்:
 தற்போது பலவகையான வண்ணங்களிலும், வடிவங்களிலும் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட டிசைன்கள், லேஸ் ஆகியவை சில்லறை விலைகளில் தனித்தனியாக கிடைக்கின்றன. உங்களிடம் தையல் இயந்திரம் இருந்தால் போதும். இந்த விற்பனையில் அதிக லாபம் பார்க்கலாம்.
 மொத்த விலை கடைகளில் பல வண்ணங்களில் பிளைன் சேலைகளை வாங்கிக் கொள்ளுங்கள். பின்னர், அதன் பார்டரில் சிறியதாக, பெரியதாக உங்கள் விருப்பத்திற்கேற்ப, எம்ப்ராய்டரி டிசைன்களையோ அல்லது லேûஸயோ வைத்து தைக்க வேண்டும். பிறகு முந்தானை பக்கம் எம்ப்ராய்டரி டிசைன்களை எப்படி தைத்தால் எடுப்பாக அழகாக இருக்கும் என்று முதலில் புடவையில் டிசைனை வெறுமனே வைத்துப் பார்க்க வேண்டும். மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் செய்து கொள்ள வேண்டும் பிறகு தைக்க வேண்டிய இடங்களை புடவையில் மார்க் செய்து அந்த இடங்களில் தைக்க வேண்டும். இதில் உங்கள் கற்பனைக்கேற்றவாறு புடவை முழுவதும் கூட ஆங்காங்கே டிசைன்களை வைத்து தைக்கலாம். இதன்மூலம் ஒரு சாதாரண சேலை டிசைனர் சேலையாக மாறிவிடும். இதுபோன்று பலதரப்பட்ட டிசைன்களை மாற்றி மாற்றி போட்டு உயர்தர புடவைகளை உருவாக்கி விற்பனை செய்யலாம். இதில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
 - ஸ்ரீ
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com