பிரபலங்களைப் பற்றி பிரபலங்கள்

விழாவில் நட்சத்திர சாதனையாளர்களைப் பற்றி பிரபலங்கள் கூறியவை, காணொளி காட்சிகளாக ஒளிபரப்பப்பட்டது.

விழாவில் நட்சத்திர சாதனையாளர்களைப் பற்றி பிரபலங்கள் கூறியவை, காணொளி காட்சிகளாக ஒளிபரப்பப்பட்டது. இவற்றின் தொகுப்பு:
 செளகார் ஜானகி / ஏ.வி.எம்.சரவணன்

மிக சிறந்த நடிகை மட்டும் அல்ல சிறந்த மனுஷி. வேலையை சரியாக செய்பவர். அவருக்கு discipline மிக முக்கியம். அதே போன்று அவரை ஒப்பந்தம் செய்துவிட்டால் நேரம் தவறாமையை சரியாக கடைப்பிடிப்பார். அவர் வீட்டில் இருந்தே சாப்பாடு அவருக்கு வரும். அவரது காரிலேயே அவர் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்ட நாட்கள் பல. இப்படி சில கொள்கைகளை சரியாக கடைபிடித்து இன்று வரை வாழ்பவர். எங்கள் நிறுவனத்தின் "லக்கி ஸ்டார்' என்ற பெயரும் அவருக்கு உண்டு. காரணம் அவர் நடித்தால், அந்தப் படம் எங்களுக்கு சில்வர் ஜூப்ளிதான். இப்படி செளகார் அம்மாவை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

வைஜயந்திமாலா / நடிகர் சிவகுமார்

வைஜயந்திமாலா அழகானவர் மட்டும் அல்ல, திறமையானவரும் கூட. படைக்கும் பிரம்மன் உலகிலேயே ஒரு அழகான பெண்ணைப் படைக்க வேண்டும் என்று நினைத்து சந்தோஷமான ஒரு தருணத்தில் படைத்த படைப்பு தான் வைஜயந்திமாலா. தமிழ் நாட்டில் இருந்து இந்திக்கு சென்ற முதல் லேடி சூப்பர் ஸ்டார் இவர்தான். அதன் பின்னரே பலர் தொடர்ந்தனர். "அமர்பாலி'" என்ற ஒரு படத்தில் ஒரு காட்சி வரும். அதில் இருபக்கமும் பெண் சிலைகள் இருக்க, நடுவில் இவர் நடனமாடுவது போல் இருக்கும். எனக்கு தோன்றியது என்ன தெரியுமா? வைஜயந்திமாலா அவர்களை படுக்க வைத்து அவரது உருவத்தையே சிலைகளாக செய்து பின்னர், நிற்க வைத்து விட்டார்களோ என்று எனக்கு தோன்றியது. அந்த அளவிற்கு சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவர்.

ஜமுனா / இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்

நான் ஜமுனா நடித்த சில படங்களை இயக்கியவன். அது மட்டுமல்லாமல் ஏவிஎம் தயாரித்த சில படங்களிலும் அவர் நடித்துள்ளார். ஜமுனாவின் சிறந்த நடிப்பால் பல படங்கள் வெற்றிப் படங்களாகி உள்ளன. "களத்தூர் கண்ணம்மா'" தமிழில் வெற்றி பெற்ற போது, அதை தெலுங்கில் "டப்' செய்து "மாவூரி அம்மாயி' என்ற பெயரில் ஏ.வி.எம் நிறுவனம் வெளியிட்டது. பின்னர் ஏ.வி.எம்முக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. இந்தப் படத்தை திரும்பவும் தெலுங்கில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டால் என்ன என்று எண்ணம் ஏற்பட, அது மீண்டும் "மோக நோமு" என்ற பெயரில் ஜெமினி நடித்த ரோலில் நாகேஸ்வர ராவ் நடிக்க, சாவித்திரி நடித்த வேடத்தில் ஜமுனா நடிக்க வெளிவந்தது. சாவித்திரி அம்மா "நடிகையர் திலகம்' என்று பெயர் வாங்கியவர். அதே வேடத்தை சளைக்காமல் அவர் அளவிற்கு ஜமுனா செய்தது பாராட்டிற்குரியது.

கே.ஆர்.விஜயா / ஒய்.ஜி.மஹேந்திரன்

சிறந்த நடிகை மட்டும் அல்ல சிறந்த பண்பாளர். கவர்ச்சியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் நடிக்க தகுதி உடைய ஒரே நடிகை . "பட்டணத்தில் பூதம்'" என்ற ஒரு படத்தில் "கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா...' என்ற பாடலில் நீச்சல் உடையில் வந்து மயக்குவார். "அந்த சிவகாமி மகனிடம்...' என்ற பாடல் காட்சியில் ஒரு வீணையுடன் இவர் கண்கலங்கி நடித்தது, நம்மை கண்கலங்க செய்து விடும். இப்படி ஒரே படத்தில் இரு வேறு நடிப்பை காட்டக் கூடியவர் இவர் ஒருவராகத்தான் இருக்கும். இன்றும் இவர், "கோடீஸ்வரி'" என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை காட்டக் கூடியவர் எங்கள் கே.ஆர்.விஜயா.

வெண்ணிற ஆடை நிர்மலா / கலா மாஸ்டர்

என் குருவை பற்றி நான் பேசக் கிடைத்த வாய்ப்பு எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது என்று கூறவேண்டும். இவரது குழுவில் தான் நான் முதலில் சேர்ந்து ஊரெங்கும் நடனம் ஆட ஆரம்பித்தேன். சாஸ்த்ரீய நடனத்தில் நான் பயிற்சி பெற்றேன் என்றால் அதற்கு காரணம் நிர்மலா அம்மா அவர்கள்தான். அதேபோன்று எப்போது எனக்கு நடனத்தில் சந்தேகம் வந்தாலும், உடனே அவர்
 களைத் தான் நாடுவேன். அவர் அளித்த பயிற்சியினால் நான் ஒரு படத்தில் சாஸ்த்ரீய நடனம் அமைத்து, அந்த படம் மலையாளத்தில் வந்தது. எனக்கு அந்தப் படத்தின் மூலம் சிறந்த நடன அமைப்பாளர் என்ற தேசிய விருதும் கிடைத்தது. சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் வெளியான படம். விருது பெற்ற இரவு வீட்டிற்கு வந்த போது பல்வேறு இயக்குநர்களின் வாழ்த்து மடல்கள் அறை எங்கும் நிரம்பி இருந்தது. அதற்கு காரணம் நிர்மலா அம்மா என்று கூறினால் அது மிகை இல்லை.

சாரதா / நடிகை சீதா

விருதின் பெயரையே தன் பெயருடன் இணைத்து கொண்டவர். மூன்று முறை தேசிய விருதை தனது நடிப்பிற்காக பெற்றவர். இரண்டு முறை பிலிம் ஃபேர் விருதை பெற்றவர், கேரள அரசின் திரைப்பட விருதையும், ஆந்திர அரசின் என்.டி.ஆர். தேசிய விருதையும் பெற்றுள்ளார். இவருக்கு தேசிய விருது பெற்று தந்த திரைப்படம் ""துலாபாரம்'", இந்தப் படம் அப்போது நான்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டது. அதில் அனைத்து மொழிகளிலும் நடித்த ஒரே நடிகை அவர்தான். அரசியலிலும் கால்பதித்து வென்றவர். "தெனாலி' தொகுதியில் நின்று, வென்று பாராளுமன்றம் நுழைந்தவர். சாக்லேட் நிறுவனமும் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தியவர். என் மீது அதிக பாசம் கொண்டவர். நான் கர்ப்பமாக இருந்தபோது பல்வேறு உணவு வகைகளை சமைத்து என் வீட்டிற்கே எடுத்து கொண்டு வந்தவர். நடிப்பைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

 ராஜஸ்ரீ / புஷ்பா கந்தசாமி

எனது தந்தையார் கே. பாலசந்தர் இயக்கிய மூன்று படங்களில் ராஜஸ்ரீ நடித்துள்ளார் என்று நான் நினைக்கிறேன். அவை "பாமா விஜயம்'", "அனுபவி ராஜா அனுபவி', ""பூவா தலையா'. குறிப்பாக பாமா விஜயத்தில் இவர் ஒரு நடிகையாகவே நடித்திருந்தார். அதில் அவரது நடிப்பும், வசனத்தை கொஞ்சு தமிழில் பேசுவதும் மிகவும் ரசிக்க வைத்தது. ஒரு முறை குற்றாலத்தில் அவரது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. நான் அப்போது சிறிய பெண். சூட்டிங் பார்க்க சென்றேன். நான் நடிகை ராஜஸ்ரீ மடியில் உட்கார்ந்து சூட்டிங் பார்த்தது இன்றும் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. ராஜஸ்ரீ, அவருக்கு பக்கத்தில் ஜெமினி கணேசன், பிறகு என் தந்தை. (என் தந்தை ராஜஸ்ரீ தோளில் கை போட்ட படி இருப்பதாக நான் நினைத்து கொண்டு, "அப்பா உங்கள் கை எவ்வளவு நீண்டு இருக்கிறது'' என்று கூறினேன். இதைக்கேட்டு எல்லோரும் சிரித்தனர்.) சிறந்த, அழகான நடிகை. "அவர் நல்ல நடிகை மட்டுமல்ல நல்ல மனுஷி'' என்று அப்பா கூறியுள்ளார். நானும் அவரது நடிப்பை ரசித்திருக்கிறேன்.
 - சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com