Enable Javscript for better performance
என்னுடைய முயற்சிகளை நான் சுமையாக கருதுவதில்லை!- Dinamani

சுடச்சுட

  
  Sindhu

  ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்து தன் 23-ஆவது வயதில் பேட்மின்ட்டன் விளையாட்டில், இன்று உலகின் நெ.3. என்ற இடத்தில் உள்ள பி.வி.சிந்து, இந்தியாவின் சிறந்த வெற்றிகரமான விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக விளங்குகிறார். அதுமட்டுமல்ல. 2013-ஆம் ஆண்டு உலக பேட்மின்ட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை, ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி, மகளிர் ஒற்றையர் பிரிவில் 2016-ஆம் ஆண்டு கோடை ஒலிம்பிக்ஸில் பதக்கம் பெற்றவர் என்ற பல சிறப்புகளை பெற்றதோடு, 2018-ஆம் ஆண்டு வோர்ல்ட் டூர் பைனலில் ஜப்பானிய பேட்மின்ட்டன் வீராங்கனை நோசோயி ஒகுஹராவை வீழ்த்தி தங்கப்பதக்கம் பெற்றது இவரது தளராத முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
   "என் தாய்நாட்டில் வந்து இறங்கியவுடன், இங்கு எனக்கு கிடைக்கும் வரவேற்பும், ஆதரவும் மேலும் என்னை உற்சாகப்படுத்துகிறது. இவை அனைத்தும் என் பெற்றோர் மற்றும் என்மீது அன்பு காட்டும் மக்களுக்கும், என் தாய் நாட்டிற்கும் உரித்தாகும். கிடைக்கும் விருதுகள் மேலும் என்னை ஊக்குவிக்கின்றது'' என்கிறார் சிந்து.
   2013- ஆம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் நடந்த பேட்மின்ட்டன் போட்டிகளில் பங்கேற்று வரும் சிந்து, அரையிறுதி வரை முன்னேறி வெற்றியை நழுவவிட்ட போதெல்லாம். இவரது பெற்றோர் அளித்த ஊக்கம்தான் இவரை சோர்வடைய செய்யாமல் திறமையை வளர்க்க வைத்ததாம்.
   "ஒவ்வொரு முறையும் வெற்றியாகட்டும், தோல்வியாகட்டும். அவற்றை என் பயிற்சி காலமாக கருதுவேன். தோல்விகள் மேலும் எனக்கு இந்த விளையாட்டில் சாதிக்க வேண்டிய பொறுப்புணர்வை அதிகரிக்கிறது. அப்போதெல்லாம் என் பெற்றோரை நினைத்துக் கொள்வேன், எப்போதும் எனக்கு பக்கபலமாய் இருந்து வருகிறார்கள். என் பயிற்சி காலங்களில் துணையாக நிற்பதோடு, நான் சாப்பிடும் உணவிலும் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வார்கள். என்னுடைய முயற்சிகளை எப்போதும் நான் சுமையாக கருதுவதில்லை'' என்று கூறும் சிந்து, கடந்த வருடம் நடந்த வோர்ல்ட் டூர் பைனலில் வெற்றிப் பெற்ற பின்னர் அவரது ஆட்டத்தில் நல்ல முன்னேற்றம் காணத் தொடங்கியது.
   ஏற்கெனவே ஒலிம்பிக்ஸ் மற்றும் வோர்ல்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இறுதி சுற்றில் ஸ்பெயின் உலக சாம்பியன் கரோலினா மாரினிடம் இருமுறை தோல்வியடைந்த சிந்து, பிரீமியர் பேட்மின்ட்டன் லீக் போட்டியில் அவரை தோற்கடித்தது ஒரு இனிமையான வெற்றியாகும்.
   "நல்ல திறமையும், சக்தியும் கொண்ட கரோலினாவை தோற்கடிப்பது எளிதான விஷயமல்ல. எங்களிருவருக்கும் இடையே நடந்த போட்டி நல்ல தரமான கடுமையான போட்டியாகும். இதில் கிடைத்த வெற்றி என்னுடைய உழைப்புக்காக கிடைத்ததாக கருதுகிறேன்.
   பத்து வயதிலிருந்தே புல்லேலா கோபிசந்திடம் பயிற்சிப் பெறத் தொடங்கினேன். மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எனக்கு கிடைக்கும் பாராட்டுகள் அவருக்கே உரித்தாகும். தனிப்பட்ட முறையிலும், தொழில் முறையிலும் என்னை நன்கு அறிந்துள்ள அவர் கொடுத்த தைரியமும் வேகமும்தான் இன்றுவரை தொடர்கிறது'' என்று கூறுகிறார் சிந்து.
   சிந்து இன்று பல இளம் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். விளையாட்டில் மட்டுமல்ல, மற்ற துறைகளிலும் ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. பெண்கள் தங்கள் பெற்றோரை மட்டுமல்ல இந்த நாட்டையும் பெருமைபடுத்துகின்றனர். எல்லா பெண்களும், குறிப்பாக இந்தியப் பெண்கள் இந்த நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும், அவரவர் விருப்பத்திற்கேற்ற விளையாட்டில் ஈடுபடும்படி நான் கேட்டுக் கொள்கிறேன். அரசு ஆதரவுடன் நடத்தப்படும் "கேலோ இந்தியா' போன்ற நிகழ்ச்சிகளில் இன்றைய இளைய சமூகத்தினர் பங்கேற்பதால் அவர்களுடைய கனவுகள் நிறைவேறுவதோடு, விளையாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்படும் வேலை வாய்ப்புகளையும் பெறமுடியும்'' என்கிறார் பி.வி.சிந்து.
   - பூர்ணிமா

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai