என் பிருந்தாவனம்! 8 - பாரததேவி

பட்டிக்காட்டு மாப்பிள்ளை தங்கராசுவை , மணமுடித்துக் கொண்டு கிராமத்துக்கு வருகிறாள் பட்டணத்துப் பெண் கௌசிகா. அங்கே தன் மாமியார் வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த ஆடு,
என் பிருந்தாவனம்! 8 - பாரததேவி

இது வரை...
 பட்டிக்காட்டு மாப்பிள்ளை தங்கராசுவை , மணமுடித்துக் கொண்டு கிராமத்துக்கு வருகிறாள் பட்டணத்துப் பெண் கௌசிகா. அங்கே தன் மாமியார் வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடுகளின் வாசம், விடியற்காலையில் கூவிய சேவற் கூவல், இரைச்சலோடு சுழன்று கொண்டிருந்த ஃபேன் என கிராமத்து சூழல் எதுவும் அவளுக்கு பிடிக்கவில்லை. காலையில் தூக்கத்திலிருந்து விழித்ததுமே, தன் அம்மா வீட்டில் கொடுப்பது போன்று பெட் காபி வேண்டும் என்று தன் கணவனிடம் சண்டையிடுகிறாள். பின்னர், தான் வாழ வந்த வீட்டில் கக்கூசும், பாத்ரூமும் இல்லையென்று அறிந்து அதிர்ந்து, கணவனிடம் சத்தம் போடுகிறாள். இதனால், அவளை மறுவீடு வந்த மறுநாளே அவளது தாய்வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வரும்படி கூறுகிறாள், தங்கராசுவின் தாய் சங்கரி. தாயின் கட்டளையை மீறி செய்வதறியாமல், மனசில்லாமல், புது மனைவியை அவளது தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான் தங்கராசு. பஸ் ஸ்டாண்டில் அவளது ஊருக்குச் செல்வதற்கான பேருந்து வந்து நிற்க. பஸ்ஸில் ஏறப்போன கௌசியை தடுத்து நிறுத்துகிறான். இனி..

 தங்கராசு, "வெறும் வயித்தோட ஊருக்குப் போக வேண்டாம் வா ஏதாவது சாப்பிட்டுவிட்டு போகலாம்'' என்று சொன்னதைக் கேட்டதும் கோபத்தில் குமுறினாள் கௌசிகா.
 "சாப்பாடாம், சாப்பாடு' தன் மாமியார் மட்டும் தன்னை தன் பிறந்த வீட்டுக்கு அனுப்பாமலிருந்தால் பத்துநாள் கூட சாப்பிடாமல், இருந்து தன் காரியத்தை சாதித்து விட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தவளை தாயும், மகனுமாக சேர்ந்து மறுவீடு வந்த மறுநாளே ஊருக்கு அனுப்புகிறார்கள் இதில சாப்பாடு என்ன வேண்டிக் கெடக்கு' என்று நினைத்தவள் அவனை முறைத்துப் பார்த்தாள். பஸ்டாண்ட் என்று கூட பார்க்காமல் ஓ... வென்று கத்த வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
 அவளின் கனன்ற முகத்தைப் பார்த்த தங்கராசு, ""வேண்டாம் கௌசி அப்படி பார்க்காத. நானும் சாப்பிடல. எனக்கு ரொம்ப பசிக்குது'' என்றான் கெஞ்சலோடு.
 அவன் அப்படி சொன்னதுமே, கௌசிகாவின் கண்ணிற்கு தங்கராசு ஒரு குழந்தையைப் போல் தோன்றினான். அப்படியே அவனை அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது அவளுக்கு. அவளின் முகம் மாறிய விதத்தைக் கண்ட தங்கராசு தைரியமாக அவள் பக்கத்தில் வந்து அவள் கையைப் பிடித்தான்.
 " வா, கௌசி ஏதாவது சாப்பிட்டுவிட்டு போவோம்'' என்று சொல்லி முடிக்குமுன்னே தன் கையை கோபத்தோடு உதறி அவன் கரத்திலிருந்து விடுவித்துக் கொண்டவள்,
 "உங்க ஊருலயெல்லாம் பல் விளக்காமதான் சாப்பிடுவார்களோ?'' என்றாள். அவள் கேள்வி சாட்டையின் நுனியாயிருந்தது.
 "சில நேரம் அப்படியும் சாப்பிடலாம். வேண்டான்னு சொல்லாத.. ஏன்னா நம்ம பக்கத்து ஊருக்குப் போவப் போறதில்ல ஆறுமணி நேரத்துக்கு மேல போகணும் வா எனக்காக வந்து சாப்பிடு'' என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே..
 "போதும் உன் கையால ஆசை ஆசையாய் தாலி வாங்கிக்கிட்டு.. எத்தனை கனவுகளோட .. உன் கூட வாழ, உன் வீட்டுக்கு வந்தேன் பாரு, அதுவே என் ஏழேழு சென்மத்துக்கும் போதும்'' என்றாள்.
 "நீ ஒன்னும் என்னைக் கூட்டி வந்து என் வீட்டில் விட வேண்டாம் நானே போய்க்கிறேன்'' என்று சொல்லிக் கொண்டே அவள் ஊருக்குப் போகும் பஸ்சில் ஏறினாள்...
 கௌசிகாவை சமாதானப்படுத்த முடியாத ஏமாற்றத்தோடு பஸ்சில் ஏறிய தங்கராசு அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்தான். இவன் உட்கார்ந்ததுமே அவள் வெடுக்கென்று எழுந்து போய் வேறு இடத்தில் ஒரு பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.
 அவளின் ஊர் போய் சேரும் வரையில் அவளிடம் அன்பாக தன் ஊர் பற்றிய விவரங்களை மட்டுமல்ல, விவசாயம் செய்யும் தன்னைப் பற்றியும் எடுத்துச் சொல்லலாமென்று நினைத்து இருந்த தங்கராசுவிற்கு தான் உட்கார முற்பட்டதுமே அவள் தன் முகத்திலடித்தாற்போல் வேறு இடத்தில் உட்கார்ந்ததில் ரொம்பவும் வேதனைப்பட்டான்.
 டிக்கெட்டாவது எடுக்க விடுவாளா? விடமாட்டாளா? என்று நினைத்தவாறு கண்டக்டரிடம் இரண்டு டிக்கெட் கேட்டபோது அவள் மௌனமாகவே இருந்தாள். அப்போதுதான் அவனுக்கு உறைத்தது. அவளிடம் பணமே இல்லையென்று. உடனே ஓடிப்போய் அவளின் கை நிறைய பணம் கொடுத்துவிட்டு வர வேண்டும் போல் தோன்றியது. ஆனால் அவள் வாங்க மாட்டாள் அதோடு இத்தனை ஆட்கள் இருப்பதைப் பற்றி கூட கவலைப்படாமல் எதையாவது சொல்லி தன்னை எடுத்தெறிந்துப் பேசி விடுவாள், என்று தயங்கிய தங்கராசு தன் மனைவியை திரும்பிப்பார்த்தான்.
 அவள் ஈர விழிகளோடு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். ரகசியமாய் அழுதிருப்பாள் போலிருக்கிறது. முகம் பம்மி இருந்தது. அவளின் உடல் வாடி களைத்து துவண்டு போயிருந்தது.
 அவன் வயிறு பசியில் இறைந்தது. விடியற்காலையில் ஒரு சொம்பு மோர் குடித்த தனக்கே இப்படி பசிக்கிறதென்றால் இரண்டு மொடக்கு காப்பி குடித்த அவளுக்கு எப்படி பசிக்கும் என்று நினைத்தபோது மீண்டும் அவனுக்கு அம்மா மீதுதான் கோபமாக வந்தது.
 தன் வீட்டுக்கு வந்த மருமகளை அன்பாக பேசி, அனுசரித்துப் போயிருக்கலாம் என்று நினைத்தவனுக்கு மனமெல்லாம் வெதும்பிக் கிடந்தது.
 அவர்கள் இறங்குமிடம் வந்ததுமே இவனை முந்திக் கொண்டு நடக்கும் தூரத்திலிருக்கும் அவள் வீட்டை நோக்கி வேகமாய் நடந்தாள் கௌசி.
 அவள் நடையில் கோபமும், வேகமும் மிகுந்திருந்தது அவளுக்கானப் பெட்டிகளை தூக்கிக் கொண்டு தங்கராசுவும் அவள் பின்னாலேயே நடந்தான்.
 வெளிக்கேட்டைத் திறந்தவள்,
 "எம்மா , எம்மா'' என்று கூப்பிட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைய.. மகளின் குரல் கேட்டு அவள் அம்மா அபிராமி வர, பின்னாலேயே அவளின் தங்கை பானு வந்தாள்.
 கௌசிகா தன் அம்மாவைப் பார்த்தாளோ, இல்லையோ அவள் நெஞ்சில் சாய்ந்து கொண்டு "ஓ.. வென்று' கதறினாள். தன் மகளை தோளோடு சேர்த்து அணைத்த அபிராமி விக்கித்துப் போனாள். அவள் முகமே வெளிறிவிட்டது.
 புதிதாக கல்யாணம் முடித்த பெண். மறுவீடு அனுப்பி இன்னும் முழுதாக இரண்டுநாள் ஆகவில்லை. போன மறுநாளே திரும்பி வந்திருக்கிறாள். வரட்டும் ஆனால் மாப்பிள்ளையோடு ஜோடி சேர்ந்து சிரித்துக் கொண்டே வந்திருந்தால் இருவரையும் ஆசையோடு, சந்தோஷமாக ஆரத்திக் கரைத்து வரவேற்றிருப்பாள்.
 ஆனால், இப்படி அழுது கொண்டு ஓடி வருகிறாளே.
 அப்படியென்றால் அவளுக்கு அங்கே ஏதோ கொடுமை நடந்திருக்கிறது. அதைத் தட்டிக் கேட்க வேண்டிய மருமகன் அதைவிட்டு விட்டு கூட்டியாந்து விட்டுட்டுப் போக வந்திருக்கிறான். அப்படியென்றால் புதுப் பொண்டாட்டி மீது ஆசையும், அன்பும் இல்லையென்றுதான அர்த்தம் என்று நினைத்தவள் தங்கராசுவை எரித்து விடுகிறார் போல் பார்த்தாள்.
 கௌசிகா ஏங்கி, ஏங்கி அழுவதையும் அவள் அம்மாவும், என்னடா ராசாத்தி என்று கண்ணீரோடு கேட்பதையும் நினைக்கையில் அவனுக்கு பயமாயிருந்தது. கௌசிகா தன் தாயைப் பார்த்தவுடனே தன் மீதுள்ள குற்றங்களை எடுத்துச் சொல்வாள் அவர்கள் தன்னிடம் அது பற்றி கேட்பார்கள். தானும் தன் நியாயத்தை எடுத்து சொல்லிவிட்டு அப்போதே புறப்பட்டு விடலாமென்றுதான் வந்தான்.
 ஆனால் இங்கே கௌசிகா ஒருகுற்றபட்டியலையே இடைவெளியில்லாமல் வாசித்துக் கொண்டிருந்தாள். "அதில் இரவு சாப்பாட்டில் பொரியல், கூட்டு என்று எதுவுமில்லாமல் பூசணிக்காயோடு, வெறும் பருப்பு, ரசம் மட்டும் வைத்து சோறு போட்டது, கடகட வென்று சத்தத்தோடு ஓடிய ஃபேனினாலும், கூரையிலிருந்து கூவிய சேவல் சத்தத்தாலும் தூக்கமில்லாமலிருந்தது, காலையில் காப்பியோடு அவளை எழுப்பாதது...'' என்று இன்னமும் எதை, எதையோ சொல்லிவிட்டு, " என்னால அந்தப் பட்டிக்காட்டுல இருக்க முடியாதும்மா. என்ன வற்புறுத்தாதீங்க'' என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கௌசிகாவின் அப்பா கனகராசு சைக்கிளில் வந்து சேர்ந்தார். நல்ல வெயில் என்பதால் ரொம்பவும் வியர்த்துப் போயிருந்தார்.
 வெளி வராண்டாவில் மருமகன் நிற்பதையும், தன் ஆசை மகள் தன் மனைவியின் தோளைச் சேர்த்து விம்மி, விம்மி அழுவதையும் கண்டவருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. எப்படி ஆசையாய் நாள் முழுக்க மடியில் போட்டு வளர்த்தமகள். சொல்லப்போனால் அவர் அவளை, தன் மகளாக வளர்க்கவில்லை ஒரு மகனாகவே வளர்த்திருந்தார். இதுநாள் வரை அவளின் கண்களில் கண்ணீர் தேங்கியதைப் பார்த்ததே இல்லையே இப்போது இப்படி மகள் அடக்கமாட்டாமல் அழுகிறாள் என்றால் அவளை நிறைய கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள் என்று நினைத்தவருக்கு அங்கே நின்று கொண்டிருக்கும் தங்கராசு மீது கோபமாய் வந்தது. "நிக்கிறான் பாரு கல்லுளி மங்கன் மாதிரி' என்று நினைத்தவர் அவனை முறைத்துப்பார்த்தார்.
 பிறகு மகளின் தலையை ஆசையும், அன்புமாய் தடவியவாறு "என்னடா , ஏன் இப்படி அழுவுறே?'' என்று கேட்டதுதான் தாமதம், தாயின் தோளிலிருந்து தந்தை தோளுக்கு மாறிய கௌசிகா இன்னும் சத்தமாய் அழ ஆரம்பித்தாள்.
 
 
 - தொடரும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com