தன்னம்பிக்கை நிச்சயம் வெற்றி பெறும்!

மனநலம் சார்ந்த வாசகர்களின் கேள்விகளுக்கு மனோ தத்துவ நிபுணர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் அளித்த பதில்கள்
தன்னம்பிக்கை நிச்சயம் வெற்றி பெறும்!

மனநலம் சார்ந்த வாசகர்களின் கேள்விகளுக்கு மனோ தத்துவ நிபுணர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் அளித்த பதில்கள்:
 நான் பி.எஸ்.சி முடித்து உள்ளேன். என்னுடைய வயது 24. நான் 6 முறை டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதியுள்ளேன். இதுவரை வெற்றி கிடைக்கவில்லை. காவல்துறை நடத்திய தேர்வில் ஒருமுறை வெற்றி பெற்றேன். ஆனால், எனது உயரம் அதற்கு போதவில்லை. எனவே, அந்த வாய்ப்பும் தட்டிப் போய்விட்டது.
 இதனால், நான் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய போகிறேன் என்ற பயம் வந்துவிட்டது. மேலும், நான் பலமுறை தேர்வில் தோல்வியடைந்துவிட்டதால், என் வீட்டிலும் பணம், உழைப்பு எல்லாம் வீணாகிறது என்று குறைகூற ஆரம்பித்துவிட்டார்கள். நான் தேர்வுக்கு தயார் செய்வதால் வீட்டு வேலைகளில் அம்மாவிற்கு உதவியாக இருக்க முடியவில்லை. இதனால் அம்மாவும், "நீ என்னதான் படித்தாலும் தேர்வில் வெற்றி பெற போவதில்லை. அதனால் நேரத்தை வீணடிக்காதே'' என்று கூறுகிறார்.
 இதனால் நான் சரியாக தூங்குவதில்லை, சாப்பிடுவதில்லை, குளிப்பது இல்லை, தலைவாருவது இல்லை. இதையெல்லாம் செய்து என்னவாகப் போகிறது என்று என் மீது எனக்கே கோபம் வருகிறது.
 பல இரவுகளில் நான் தூக்கம் வராமல் வாசலில் நடந்து கொண்டிருப்பேன். இதனால் அந்தப்பக்கம் யாராவது வந்தால், அவர்கள் ""தூங்காமல் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்'' என கேட்பார்கள். மேலும், நான் பெரும்பகுதி தனிமையிலேயே இருக்கிறேன். அதோடு மட்டுமல்லாமஸ் என்னுடைய தேவைகள் அனைத்திற்கும் நான் மற்றவர்களையே எதிர்பார்க்க வேண்டி இருக்கிறது. இதனால் என் அம்மா, அப்பா, உறவினர்கள் அனைவரும் என்னை நகைப்பு பார்வையுடன் பார்க்கிறார்கள். இதனால், அடுத்து பரீட்சை எழுதினாலும் தேல்வி அடைந்துவிடுவேனோ என்ற பயம் என்னை வாட்டி எடுக்கிறது. எனவே, நான் தன்னம்பிக்கையுடன் இருக்கவும், மற்றவர்கள் மதிக்கும் வகையில் உயர்ந்த பதவியில் அமரவும், தோல்வி பற்றிய பயம் இல்லாமல் இருக்கவும் என்ன செய்ய வேண்டும். உங்கள் ஆலோசனைக்காக காத்திருக்கிறேன்.
 - எச்.ராதிகா, காஞ்சிபுரம்.
 நீங்க சொன்னதை வைத்து பார்க்கும்போது நீங்கள் பலமுறை தேர்வில் தோல்வி அடைந்திருப்பதால், உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. தூக்கமின்மை, சாப்பாடு பிடிக்காதது, பயம் எல்லாம் இருக்கிறது. நீங்க அரசு அதிகாரியானால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று நினைத்திருக்கிறீர்கள். முதலில் நீங்கள் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் எப்படியும் முன்னுக்கு வரலாம். நீங்கள் முதலில் செய்ய வேண்டியது - அருகில் உள்ள மனோதத்துவ மருத்துவரை அணுக வேண்டும், அவரின் ஆலோசனையால், இந்த மன அழுத்தங்களை எல்லாம் போக்கிக் கொண்டால், தைரியமும், தன்னம்பிக்கையும் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுவிடும். அதன்பிறகு நீங்கள் செய்வது எல்லாமே நிச்சயம் வெற்றி பெறும். வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம்.
 என் பெயரில் உள்ள வங்கி கணக்கில், ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி என் கணவர் பணத்தை எடுத்து ஊதாரிதனமாக செலவிடுகிறார் என்ன செய்யலாம்?
 - அ.கல்பனா, அடையாறு.
 உங்கள் பணத்தை எடுத்து அவர் ஊதாரித்தனமாக செயல் பட்டால் நிச்சயமாக, நீங்கள் அவரிடம் பேசலாம். "வங்கியில் உள்ள பணம் நான் உழைத்து, குழந்தைகளுக்காகவும், குடும்பத்துக்காகவும் வைத்திருக்கிறேன். இதிலிருந்து ஒரு மாதத்திற்கு இவ்வளவு பணம் வரை எடுத்துக் கொள்ளுங்கள், அதற்குமேல் எடுத்தால் நான் ஏ.டி.எம்மை செயல்படாமல் செய்துவிடுவேன்'' என்று கூறுங்கள்.
 அதை அவர் கண்டு கொள்ளவில்லை என்றால் வங்கியில் சென்று ஏ.டி.எம். வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டு, வேண்டும்போது வங்கியில் சென்று நேரடியாக பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.
 சந்திப்பு: ஸ்ரீதேவி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com