பெண்களின் சுதந்திரத்தை நோக்கி...!

கன்னியாகுமரி மாவட்டத்தில், கல்லூரி பேராசிரியருக்கும், ஹை ஸ்கூல் டீச்சருக்கும் மகளாக பிறந்து, சேலத்தில் வளர்ந்து, பள்ளி இறுதி படிப்பில் மாவட்டத்தில் முதல்மாணவியாக வந்து
பெண்களின் சுதந்திரத்தை நோக்கி...!

கன்னியாகுமரி மாவட்டத்தில், கல்லூரி பேராசிரியருக்கும், ஹை ஸ்கூல் டீச்சருக்கும் மகளாக பிறந்து, சேலத்தில் வளர்ந்து, பள்ளி இறுதி படிப்பில் மாவட்டத்தில் முதல்மாணவியாக வந்து, கல்லூரியில் கோல்ட் மெடலிஸ்ட்டாக பட்டம் பெற்று, வங்கித் தேர்வின் மூலம் கரூர் வைஸ்யா வங்கியில் பணியில் அமர்ந்தவர் ஆர்.எஸ். இசபெல்லா. இவரது உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் சில ஆண்டுகளில், ரெப்கோ வங்கியில் மேலாளராக வாய்ப்பு கிடைக்க... கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் திறமையாக கையாண்ட இவருக்கு, வங்கியில் உள்ள பல பிரிவுகளில் தலைமை பொறுப்புகளும்... அடுத்தடுத்த பதவிகளும் தேடி வர... கடந்த பிப்ரவரியில் இவரை, ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குநராக பணியில் அமர்த்திருக்கிறது இந்திய அரசு. அவர் கடந்து வந்த பாதை குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இந்த தன்னம்பிக்கை பெண்மணி:
"நான் கரூர் வைஸ்யா வங்கியில் இருந்தபோது கடன் துறை பிரிவில் பல நுணுக்கங்களை நன்கு கற்றறிந்திருந்ததால், ரெப்கோ வங்கியில் பணி கிடைத்ததும் அந்தப் பிரிவில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கினேன். இதன்மூலம், 2015-இல் ரெப்கோ வங்கியின் செயல் இயக்குநராக பதவி உயர்வு பெற்றேன். பின்னர், படிப்படியாக அடுத்தடுத்த பதவிகள் என்னை தேடி வரத் தொடங்கியது. தற்போது, கடந்த பிப்ரவரியில் வங்கியின் மேனேஜிங் டைரக்டராக, இந்திய அரசு பதவி உயர்வு கொடுத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. 
20 ஆண்டுகளுக்கு முன்பு பல வங்கிகளில் எனக்கு பணி வாய்ப்பு கிடைத்தது. ரெப்கோ வங்கியைப் பொருத்தவரை இது தாயகம் திரும்பிய இந்தியர்களுக்காக தொடங்கப்பட்ட வங்கி. பர்மா, இலங்கையில் இருந்து தமிழகம் வந்த தமிழர்களுக்கு சேவை செய்வதுதான் இந்த வங்கியின் அடிப்படை நோக்கம். இப்போதும், தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு ஆண்டுதோறும் 5 கோடி செலவில் பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உதாரணமாக குழந்தைகளுக்கான படிப்பு செலவு, மருத்துவ செலவு, அவர்களின் ஆயுள் காப்பீடு போன்றவையாகும். இதனால் மற்ற வங்கிகளில் இருந்து இந்த வங்கி எனக்கு ஸ்பெஷலாகத் தெரிந்தது. அதனால், ரெப்கோ வங்கியைத் தேர்ந்தெடுத்தேன்.
இத்தனை ஆண்டுகளில், உங்களது முயற்சியின் மூலம் ஏதேனும் குறிப்பிடும்படியான செயல்திட்டங்களை உருவாக்கியிருக்கிறீர்களா?
எங்களுக்கு 108 கிளைகள் இருக்கின்றன. முன்பெல்லாம் இந்த கிளைகளில் லோன் வேண்டி அப்ளை செய்பவர்களின் அப்ளிகேஷன்களை பேப்பராக கொண்டு வந்து, கொண்டு செல்ல நேரம் விரயமும், பொருள் விரயமும் ஆகிக் கொண்டிருந்தது. எனவே, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கடன் பிரிவில் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட கடன் பரிசீலனை செய்யும் திட்டத்தை (L.O.S) லோன் ஆரிஜினேஷன் சிஸ்டம். அதாவது, கணினி மூலம் அப்ளிகேஷன்களை சரிபார்த்து அந்தந்த கிளைக்கு மெயில் செய்யும் திட்டத்தை எங்கள் வங்கியின் மூலம் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது நான்தான். அதுபோன்று அக்கவுண்ட்ஸ் அண்ட் ஆடிட்டிங், பேரிடர் காலங்களில் வங்கி செயல்பாடுகள் முடங்காமல் எப்படி செயல்படுத்துவது போன்ற பல திட்டங்களை உருவாக்கினோம். மேலும், வங்கியில் இருக்கும் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு திட்ட கொள்கை இருக்க வேண்டும் என்று பலவிதமான பாலிசிகளை உருவாக்கியது எல்லாம் என்னுடைய பணி காலங்களில்தான். இப்போது இது எல்லா வங்கிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டமாக மாறிவிட்டது. 
அதுபோன்று சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தொழில் பயிற்சியும், நிதியுதவியும் அளித்துவரும் எம்.எஸ்.எம்.இ. உருவாகி இருந்த நேரம் அது. அதனை பின்பற்றி, ரெப்கோ நுண் கடன் (மைக்ரோ பைனான்ஸ்) நிறுவனம் என்று 2007-இல் சுய உதவிக் குழுக்களின் பெண்களுக்கு தொழில் அபிவிருத்திக்கும், தொழில் செய்வதற்கும் நாங்களே பயிற்சி கொடுத்து, கடனும் கொடுக்கும் ஒரு நிறுவனத்தையும் உருவாக்கினோம். அதில் தற்போது 4 லட்சம் பெண்கள் பயனாளியாக உள்ளனர். அதாவது இதன் மூலம் 4 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு பெண்ணின் குடும்ப பொருளாதாரத்தையும் உயர்த்துகிறோம். இந்தப் பிரிவில் பணி செய்யும் எங்களது வங்கி ஊழியர்களும் 60 சதவீதம் பெண்கள்தான். நான் ஒரு பெண்ணாக இருந்து , அந்த நிறுவனத்தை தலைமையேற்று நடத்தி வருவதில் மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன். 
ஏனென்றால் , நாம் தற்போது பெண்களின் சுதந்திரம் பற்றியெல்லாம் பேசுகிறோம். ஆனால் என்னைப் பொருத்தவரை, பெண்களின் உண்மையான சுதந்திரம் பொருளாதார சுதந்திரம்தான். நமக்கும் சம்பாதிக்கும் திறன் இருக்கிறது என்றாலே பெண்களுக்கு அது தன்னம்பிக்கையைக் கொடுக்கும். இப்படி பெண்களின் பொருளாதார உயர்வுக்கு நாங்கள் உதவியாக இருக்கிறோம் என்பதே எங்களுக்கு பெருமையான விஷயம்தான்.
இதற்காக அகில இந்திய அளவில் விருதுகள், தமிழ்நாடு அரசின் விருதுகள் பல பெற்றுள்ளோம். நாபார்டு எங்களை அங்கீகரித்துள்ளது. இன்று பெண்களுக்கு தொழில் கடன் வழங்க நிறைய வங்கிகள் உள்ளன. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வங்கிதான் இந்த திட்டத்தை முதன்முதலில் தொடங்கியது. 
இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களிடையே சேமிப்பு பழக்கம் எவ்வாறு உள்ளது?
சேமிப்பு பழக்கம் என்பது தற்போதைய சூழ்நிலையில் மக்களிடையே இல்லையென்றே சொல்லலாம். காரணம், இன்று செலவு செய்வதற்கான வழிகள் ஏராளமாக வந்துவிட்டன. எனவே, பொதுமக்களிடைய சேமிப்பு பழக்கம் குறைந்துவிட்டது. அதிலும் குழந்தைகளுக்கான சேமிக்கும் பழக்கம் என்பது சுத்தமாக இல்லை. காரணம், குழந்தைகளின் தேவைகள் அனைத்தையும் பெற்றோரே பூர்த்தி செய்து
விடுவதால், அவர்களுக்கு பொருளின் அருமையோ, சேமிப்பின் அருமையோ தெரிவதில்லை. எனவே, பெற்றோர்தான் குழந்தைகளிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். 
உங்களது இன்றைய வளர்ச்சி குறித்து? 
நான் படிப்படியாக வளர்ச்சி பெற்று இன்று இந்த நிலையை அடைந்துள்ளேன் என்பதை திரும்பி பார்க்கும்போது ஆச்சர்யமாகவும், பெருமையாகவும் உள்ளது. நான் இந்த வங்கியில் சேரும்போது எனக்கு பதவி உயர்வுகள் வரும், இன்று நான் இந்த வங்கியின் மேனேஜிங் டைரக்டராக இருப்பேன் என்றெல்லாம் நினைத்ததில்லை. பணியில் சேரும்போது இது ஓர் அரசு வங்கி, தனித்துவமான வங்கி என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. அதனால், எனக்கு எந்தப் பிரிவில் பணி கொடுத்தாலும் அதில் என்னுடைய பெஸ்ட் கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். அவ்வாறே செய்தேன். மேலும், பெற்றோரின் ஊக்குவிப்பு, என் கணவரின் சப்போர்ட் , என் மகனின் புரிதல் இவையெல்லாம் இருந்ததால்தான் என்னால் இந்த இலக்கை அடைய முடிந்தது. அதுபோன்று ஒருநாளும் நான் அலுவலக வேலையை வீட்டிற்கோ, வீட்டு சூழ்நிலைகளை அலுவலகத்திற்கோ கொண்டு வந்ததில்லை. இதுவும் நான் வெற்றியடைய ஒரு காரணம் என்று நினைக்கிறேன். 
இளம்தலைமுறையைச் சேர்ந்த பெண்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது?
நம் சமூகத்தைப் பொருத்தவரை என்னதான் பெண்ணுரிமையைப் பற்றி பேசினாலும், எந்தத்துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் பெண்கள் ஒரு படி மேலே எடுத்து வைத்துவிட்டால் அதை சகித்துக் கொள்ளும் தன்மை இந்த சமுதாயத்தில் கிடையாது. அப்படி நானும் பல சோதனைகள், எதிர்ப்புகள், சவால்கள் எல்லாவற்றையும் கடந்து மனம் தளர்ந்துவிடாமல், கடவுள் துணையிருக்கிறார் என்று துணிந்து நின்றதனால்தான் இன்று இந்த இடத்தில் என்னால் இருக்க முடிகிறது. அதைத்தான் இன்றைய பெண்களுக்கு நான் சொல்லவிரும்புவது. உங்களின் பாதை நேர்மையாகவும், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் கொண்டதாக இருந்தால் நிச்சயம் நீங்கள் நினைத்த இலக்கை அடையலாம் என்கிறார். 
- ஸ்ரீதேவி குமரேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com