Enable Javscript for better performance
என் வாழ்க்கையே எனக்கு அனுபவம்!- Dinamani

சுடச்சுட

  
  mm4

  உலக மகளிர் தினத்தையொட்டி அரசு பள்ளிகள், அரசு சார்ந்த பள்ளிகளுக்கு 10 லட்சம் சானிட்டரி நாப்கின்களை ஜியோ இந்தியா பவுண்டேஷன் எனும்தொண்டு நிறுவனத்தின் சார்பில் இலவசமாக வழங்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த ப்ரியா ஜமீமா. மேலும் வறுமைக்கோட்டிலுள்ள பெண்களுக்காக "சானிட்டரி வங்கி' ஒன்றையும் ஏற்படுத்தியுள்ள இவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
   "எனது கல்லூரி படிப்பு முடிந்ததும், சில ஐ.டி நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் வேலை செய்தேன். நான் வேலைக்குச் சென்று சம்பாதிக்க தொடங்கியதும், எனது ஒவ்வொரு பிறந்தநாளின்போதும், ஏதாவது ஒரு மருத்துவமனைக்குச் சென்று அங்கு மிகவும் வறுமையில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ உதவி செய்வது அல்லது ஏதாவது பள்ளிக்குச் சென்று அங்குள்ள ஏழைக் குழந்தைக்கு கல்வி உதவி செய்வதை வழக்கமாக வைத்திருந்தேன்.
   திருமணத்திற்கு பின்னர், என் கணவரின் உதவியுடன் சொந்தமாக ஒரு சிறிய ஐ.டி சம்பந்தப்பட்ட நிறுவனமொன்றை தொடங்கினேன். இதன்மூலம் எங்களுக்கு கிடைக்கும் ஆண்டு லாபத்தில் 20 சதவீதம் ஆதரவற்ற மற்றும் மிகவும் வறுமையில் உள்ள குழந்தைகளுக்காக செலவு செய்ய தொடங்கினேன்.
   இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வர்தா புயலின்போது சென்னை ஜெமினி பகுதியில் உள்ள "லிட்டில் ப்ளவர்' காதுகேளாதோர் பள்ளியில் 200 ஆண்டுகள் பழைமையான சுமார் 700 மரங்கள் விழுந்து முற்றிலும் சேதமடைந்திருந்தது. இதனால், அங்கிருந்த மரங்களை அகற்றுவதற்காக அந்தப் பள்ளியில் இருந்து எங்களது உதவியை கோரினார்கள். எனவே, நாங்கள் அங்குச் சென்று அவர்கள் பள்ளியில் சேதமடைந்திருந்த மரங்களையெல்லாம் அப்புறப்படுத்தினோம். சுமார் 10 டன் மரங்கள் அந்தப் பள்ளியில் அகற்றப்பட்டது. , பின்னர், நாங்களாகவே அந்த பள்ளியில் 1000 மரங்களை நட்டு, 6 மாதங்கள் வரை அந்த மரங்கள் வளர்வதற்கான உரம் இடுவது, தண்ணீர் விடுவது என பராமரிப்பு பணிகளை மேற்கொண்டோம். தற்போது அந்த மரங்கள் எல்லாம் நன்கு தழைத்து வளரத் தொடங்கிவிட்டது.
   இதையறிந்து, கொட்டூர்புரம் பள்ளியில் இருந்து எங்களை அழைத்து உதவும்படி கேட்டார்கள். இதனால் அங்குள்ள ஒரு பூங்காவை எங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பராமிப்பு பணிகளை மேற்கொண்டோம்.
   அதன்பிறகு, ஒரு விவசாயிக்கு உதவும் வகையில், திருக்கழுக்குன்றம் பகுதியில் 200 ஏக்கர் பார்ம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து அதில் தோட்டம் அமைத்துக் கொடுத்தோம். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், குழந்தைகளுக்கு விவசாயம் கற்றுத் தரவேண்டும் என்ற நோக்கில் "ஒரு நாள் விவசாயி' என்ற கான்சப்டை உருவாக்கி, பள்ளிக் குழந்தைகளை ஒருநாள் டூர் அழைத்துச் சென்று இயற்கை முறையில் காய்கறிகளை எப்படி பயிர் செய்வது, தோட்டம் அமைப்பது என நாற்று நடுவது முதல் களை பறிப்பது, பம்ப் செட்டில் குளிப்பது வரை முற்றிலும் அந்தக் குழந்தைகள் ஒருநாள் விவசாயியாக வாழும் வகையில் செய்து வருகிறோம்.

  இந்நிலையில், நாளுக்குநாள் எங்களிடம் உதவி கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. எனவே, ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கி அதன்மூலம் நிறைய பேருக்கு உதவலாமே என்று தோன்றியது. இதனால் உருவானதுதான் "ஜியோ இந்தியா பவுண்டேஷன்' .
   இதன்மூலம், இதுவரை 10 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்துள்ளோம். தற்போது எங்களை நம்பி 20 குழந்தைகள் படித்து வருகிறார்கள். பள்ளி, கல்லூரியில் படிக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் அணிந்து கொள்ளும் ஆடையில் இருந்து புத்தகம், பள்ளிக் கட்டணம் என அனைத்தையும் நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், கிட்னி பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருத்துவ உதவிகளை வழங்குகிறோம்.
   இதையடுத்து, சுமார் 35 அரசு பள்ளிகளில் சுத்தம், சுகாதாரம், சுற்றுசூழல் குறித்து குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுவர் ஓவியங்கள் வரைந்து கொடுப்பதையும், மரம் நடுவதையும் தலையாய பணியாக செய்து வருகிறோம். எங்களுடைய இந்தப் பணிகளுக்காக இதுவரை யாரிடமும் உதவியும் கேட்டதில்லை. எல்லாம் எங்களது சொந்த பணத்திலிருந்துதான் செய்கிறோம். நிதி பற்றாகுறையை சமாளிக்க, அவ்வபோது நடனம், விருது வழங்கும் நிகழ்ச்சி என பலவகையான நிகழ்ச்சிகளை நடத்தி அதன்மூலம் கிடைக்கும் வருவாயை தொண்டு நிறுவனத்திற்கு பயன்படுத்தி வருகிறோம்.
   இந்த சுழலில்தான் ஒரு பெண்ணாக இருக்கும் நான், மகளிருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். கடந்த மூன்றாண்டுகளாக மகளிருக்கு உதவுவதற்காக பல திட்டங்களை உருவாக்க முயற்சி செய்தேன். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதனால், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்ததில் உருவானதுதான், "சானிட்டரி வங்கி'. இந்த வங்கி மூலம் அரசு பள்ளிகள், அரசு சார்ந்த பள்ளிகள் மற்றும் கிராமப்புறத்தில் உள்ள பெண்களுக்கு ஆண்டு முழுவதும், சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்க முடிவு செய்து கடந்த மகளிர்தினத்தன்று அதற்கான முயற்சியையும் தொடங்கியுள்ளோம்.
   அதாவது, பள்ளிகளில் சானிட்டரி நாப்கின்களை வைத்துள்ளோம். அதனருகில் ஒரு பதிவேட்டையும் வைத்துள்ளோம். காரணம், இன்னும் எவ்வளவு சானிட்டரி நாப்கின்கள் தேவைப்படுகிறது என்பதை அறிய. மேலும், நாப்கின்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் உபயோகப்படுத்திய நாப்கின்களை அழிக்கும் இயந்திரத்தையும் வைத்துள்ளோம்.
   இந்த இயந்திரத்தில் உபயோகப்படுத்திய நாப்கின்களை போட்டால் , சில நிமிடங்களில் அவற்றை சாம்பலாக்கிவிடும். ஆனால், இந்த நாப்கின்களை அழிக்கும் இயந்திரங்கள் சற்று விலை கூடுதலாக உள்ளதால், தற்போது எங்களிடம் நிதி பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.
   எனவே, தற்போது எங்களது நண்பர்களின் உதவியை நாடியுள்ளோம். எனது தற்போதைய பெரிய ஆசை இந்த சானிட்டரி நாப்கின்கள் இந்தியா முழுக்க வறுமையில் உள்ள பெண்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதுதான்.
   இவை அனைத்திற்கும் எனக்கு பக்கபலமாக என் கணவர் ஜார்ஜும், எங்களது ஆலோசகர், ஆடிட்டர், வழிகாட்டியாக இருக்கும் டி.என். சந்தோஷ்குமாரும்தான்.
   இதற்கெல்லாம் அடிப்படை காரணம், நான் மூன்று வயதாக இருக்கும்போது, எனது பெற்றோரை ஒரு விபத்தில் இழந்துவிட்டேன். அதன்பிறகு, எனது பாட்டி என்னை ஒரு ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்தார். முகம் தெரியாத எத்தனையோ பேரின் உதவியால்தான் நான் பனிரெண்டாம் வகுப்புவரை படித்தேன்.
   பனிரெண்டாம் வகுப்புவரை எனக்கு நல்ல படிப்பு, நல்ல சப்பாடு, நல்ல துணிமணிகள் என அனைத்துமே கிடைத்தது. ஆனால், பனிரெண்டாம் வகுப்பு முடித்து, ஹாஸ்டலை விட்டு வெளியே வந்ததும், மேல் படிப்பதற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
   அந்த சமயத்தில்தான் நான் படித்து வளர்ந்த ஹாஸ்டல் நிர்வாகத்தினர் ஒரு நிறுவனத்தில் எனக்கு ஒரு வேலையை வாங்கித் தந்தனர்.
   அந்த வேலையில் சேர்ந்து கொண்டு, காலையில் வேலைக்குச் செல்வதும், மாலையில் கல்லூரி சென்று படித்தும் வந்தேன். என் வாழ்க்கையே எனக்கு பெரிய அனுபவமாக மாறியது. இதனால் நான்பட்ட கஷ்டங்களை வேறு யாரும் படக்கூடாது என்று நினைத்ததில் உருவானதுதான் தொண்டு நிறுவனம்'' என்றார்.
   - ஸ்ரீதேவி குமரேசன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai