Enable Javscript for better performance
சமையல்! சமையல்!- Dinamani

சுடச்சுட

    

    நெல்லிக்காய் துவையல்

    தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 6,
    தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி, மிளகாய் வற்றல் - 4, உப்பு - தேவையான அளவு.
    தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை - ஒரு ஈர்க்கு, பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி, எண்ணெய் - சிறிதளவு.
    செய்முறை: பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து அரைக்கவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய்யில் தாளித்து துவையலில் சேர்த்துப் பயன்படுத்தவும். ஆரோக்கியமான நெல்லிக்காய் துவையல் ரெடி.

    புளியந்தளிர் பருப்புக் கூட்டு

    தேவையானவை: புளியந்தளிர் - அரை கிண்ணம், துவரம்
    பருப்பு - அரை கிண்ணம், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 2, பூண்டு - 2 பல், மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    தாளிக்க: குழம்பு வடகம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை - ஒரு ஈர்க்கு.
    செய்முறை: துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து மலர வேகவிடவும். வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். பின்னர், வெந்த துவரம்பருப்புடன் புளியந்தளிர், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, தக்காளி, உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து வேகவிட்டு நன்கு மசிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் குழம்பு வடகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மசித்து வைத்த கலவையில் சேர்த்துக் கலந்து பரிமாறவும். சுவையான புளியந்தளிர் பருப்புக் கூட்டு தயார்.

    இஞ்சி துவையல்

    தேவையானவை: இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் நீக்கி, நறுக்கிக் கொள்ளவும்), மிளகாய் வற்றல் - 3, தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம், புளி - சிறிதளவு, உளுத்தம் பருப்பு (வறுக்க) - ஒரு தேக்கரண்டி, கடுகு - கால் தேக்கரண்டி, உளுந்தம்பருப்பு (தாளிக்க) - கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை - ஒரு ஈர்க்கு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
    செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், தேங்காய்த் துருவல், உளுந்தம்பருப்பு, இஞ்சி ஆகியவற்றை வதக்கவும். இதனுடன் புளி, உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து அரைக்கவும். இறுதியாக கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். துவையலை அம்மியில் அரைத்தால், மிகவும் சுவையாக இருக்கும். இந்த துவையல் ஜீரண சக்தியை அதிகரிக்கும். குடலையும் சுத்தமாக்கும்.

    கலவை தானிய உருண்டை

    தேவையானவை: கம்பு, கொள்ளு, பச்சைப் பயறு, காராமணி, கோதுமை, பொட்டுக்கடலை, எள் - தலா கால் கிண்ணம், சர்க்கரை - இரண்டரை கிண்ணம் (பொடித்துக் கொள்ளவும்), தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம், நெய் - அரை கிண்ணம்.
    செய்முறை: தானிய வகைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து, சற்று ஆறியதும் ஒன்றுசேர்த்து, மிஷினில் கொடுத்து நைஸான மாவாக அரைத்துக் கொள்ளவும். பின்னர், தானிய மாவுடன் பொட்டுக்கடலை, பொடித்த சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலந்து, உருக்கிய நெய் ஊற்றி பிசறி, உருண்டைப் பிடிக்கவும் (சரியாக பிடிக்க வரவில்லை என்றால், சிறிது பால் தெளித்து உருண்டைப் பிடிக்கலாம். புரோட்டீன் சத்து நிறைந்த பலகாரம் இது.

    புழுங்கலரிசி உருண்டை

    தேவையானவை: புழுங்கலரிசி - ஒரு கிண்ணம், தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம், நல்லெண்ணெய், உப்பு - தேவை யான அளவு.
    தாளிக்க: கடுகு - கால் தேக்கரண்டி, மிளகாய் வற்றல் - 4, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை - 2 ஈர்க்கு, பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி.
    செய்முறை: புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய்வற்றல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து... அதனுடன் அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து கை விடாமல் நன்கு கிளறவும். மாவு வாணலியில் ஒட்டாமல் பந்து போல வரும் சமயம் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். மாவு சற்று ஆறியதும் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைக்கலாம். மாவை உருட்டி உள்ளங்கையில் வைத்து வடை போல தட்டி, இட்லித் தட்டில் வேகவிட்டும் எடுக்கலாம்.

    மரவள்ளிக்கிழங்கு பாயசம்

    தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோ, பால் - 3 கிண்ணம், சர்க்கரை - ஒரு கிண்ணம், நெய்யில் வறுத்த முந்திரி - 8, ஏலக்காய்த் தூள், குங்குமப் பூ - தலா ஒரு சிட்டிகை, தேங்காய்ப் பால் - ஒரு கிண்ணம்.
    செய்முறை: மரவள்ளிக் கிழங்கை நன்கு கழுவி, வேகவைத்து தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும். பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். அதில் மசித்த மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, முந்திரி, ஏலக்காய்த்தூள், குங்குமப் பூ சேர்த்து இறக்கி... தேங்காய்ப் பால் சேர்த்துப் பரிமாறவும்.
    - கே.அஞ்சம்மாள், ராமநாதபுரம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai