Enable Javscript for better performance
ரோல் மாடலாக எதையாவது சாதிக்க வேண்டும்!- Dinamani

சுடச்சுட

    
    KARENUHLENBECK

    கணிதத் துறையில் "நோபல் விருது'க்கு இணையான விருதுதான் "ஏபெல் விருது'. ஏபெல் பரிசு (Abel Prize) என்றும் இந்த விருது அழைக்கப்படுகிறது. நார்வே மன்னரால் ஆண்டுதோறும் உலகளாவிய தரக்கணிப்பில் சிறந்த கணிதவியலாளருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு விருதுதான் ஏபெல் பரிசு. 2003-ஆம் ஆண்டிலிருந்து நார்வே நாட்டின் 19- ஆவது நூற்றாண்டின் சிறந்த கணித இயலாளராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் திகழ்ந்த நீல்ஸ் ஹென்றிக் ஏபெல் என்பவரின் நினைவாக நார்வே அரசினரால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
    சுவீடனாலும் நார்வேயினாலும் வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசு கணிதத்தை உள்ளடக்கவில்லை என்பதால் சோஃபஸ் லை (Sophus Lie) என்பவர் கணிதத்திற்கு தனியே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். இரண்டாம் ஆஸ்கார் மன்னர் இதற்காக நிதியையும் ஒதுக்க திட்டங்கள் வகுத்தார். என்றாலும் 1905-இல் சுவீடனும் நார்வேயும் பிரிந்ததில் இந்தத் திட்டம் கைவிடப்பட்டிருந்தது.
    நார்வே நாட்டின் அறிவியல் கழகம் 2003 - இல் இருந்து இந்த விருதைப் பெறும் சிறந்த கணிதவியலாளரைத் தெரிவு செய்கிறது. இவ்விருது கிட்டத்தட்ட நோபல் பரிசின் மதிப்பினை ஒத்தது. ஏபல் பரிசின் தற்போதைய மதிப்பு 8,75,000 அமெரிக்க டாலர்கள். இது வரையில் இப்பரிசைப் பெற்றவர்கள் பதினான்கு பேர்கள். அனைவரும் ஆண்கள். அதில் அமெரிக்க வாழ் இந்தியரான சாத்தமங்கலம் ரங்க ஐயங்கார் ஸ்ரீனிவாச வரதன் என்பவரும் உண்டு. 
    ஆண்களின் பங்களிப்பிற்கு இணையாக கேரன் உலன்பெக் (Karen Uhlenbeck) "உலக கணித வாகையர்' பட்டத்தை (Abel Prize) இந்த ஆண்டு வென்றுள்ளார். இந்த விருதினைப் பெறும் முதல் பெண்மணி கேரன் ஆவார்.

    கணிதத்தில் புலியாகவும், கணித அறிவியல் துறைகளில் பாலியல் சமத்துவம் வேண்டும் என்றும் உரக்க குரல் எழுப்பியவரும் பெண்ணியலாளரான கேரன், அமெரிக்காவில் கணிதப் பேராசிரியராக பணி புரிந்து தற்போது கெüரவ பேராசிரியராக டெக்ஸ்சாஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். இவரது வயது எழுபத்தாறு. கணிதத் துறையில் இவரது நாற்பது ஆண்டுகால பங்களிப்பிற்கு ஏபெல் விருது வழங்கப்பட்டுள்ளது. "யாரும் இதைச் செய்ய வேண்டும் என்று நினைத்துப் பார்க்காததை கேரன் செய்து முடித்திருக்கிறார்'' என்று கணிதத் துறை வல்லுநர்கள் கேரனைப் புகழ்ந்துள்ளார்கள் .
    "நான் புரிந்து கொண்டவைகள் எனக்கு அயர்ச்சியைத் தந்து விட்டன. அதனால் புதிதாக கொள்கைகளை கணிதத்தில் வகுக்க வேண்டும் என்ற தேடல் என்னிடம் ஏற்பட்டது'' என்கிறார் கேரன். ஏபெல் விருது வரும் மே மாதம் 21-இல் ஆஸ்லோ நகரில் நடக்கும் விழாவில் கேரனுக்கு வழங்கப்படும்.
    கணிதத் துறையில் ஆர்வமுள்ள இளம் பெண்களுக்கு நான் ஒரு முன்மாதிரியாக ஒரு ரோல் மாடலாக இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். அதே சமயம் பிறருக்கு ஒரு ரோல் மாடலாக இருப்பதற்கு எதையாவது சாதிக்க வேண்டும். அதற்கு அதிக உழைப்பு தேவை. அதையும் புரிந்திருக்கிறேன்'' என்கிறார் கேரன்.
    - சுதந்திரன்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai