இந்தியாவின் முதல் கார் பந்தய பெண்கள் குழு!

விண்வெளியில் பல மாதங்கள் வாழ்வது... விமானத்தை ஓட்டுவது .. பெண்களை பொருத்த மட்டில் பெரிய விஷயமில்லை என்றாகிவிட்டது
இந்தியாவின் முதல் கார் பந்தய பெண்கள் குழு!

விண்வெளியில் பல மாதங்கள் வாழ்வது... விமானத்தை ஓட்டுவது .. பெண்களை பொருத்த மட்டில் பெரிய விஷயமில்லை என்றாகிவிட்டது. இந்திய வம்சாவளி பெண்கள் அமெரிக்காவில் விண்வெளிப் பயணத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் பெண் விமானிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. விளையாட்டுத் துறையில் பெண் வீராங்கனைகள் பங்களிப்பு உலக சாதனைகளாக மாறிக் கொண்டுள்ளன.
 ஆனாலும் சாகச விளையாட்டான கார் ரேசில் பெண் வீராங்கனைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். பெண்கள் கார் பந்தய அணி என்று சொல்ல ஒரு அணி இதுவரை அமையவில்லை என்ற குறை இப்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஆறு வீராங்கனைகள் அடங்கிய குழு ஒன்று உருவாகியுள்ளது.
 குழுவின் பெயர் அஹுரா ரேஸிங் டீம். கோவையில் எல்ஜிபி ஃபார்முலா கார் பந்தயத்தில் முதன் முதலாகக் கலந்து கொண்டுள்ளது. இந்த குழுவை உருவாகியிருப்பவர் சரோஷ் கட்டாரியா. கார் பந்தயத்தில் முன்னாள் தேசிய சாம்பியன். 190 வீராங்கனைகளிலிருந்து பல கட்டத் தேர்வுகளுக்குப் பின் பன்னிரண்டு வீராங்கனைகளை சரோஷ் தெரிவு செய்துள்ளார். ஆறு வீராங்கனைகள் போட்டியில் பங்கு பெறும்போது அவர்களுக்கு மாற்றாக ஆறு வீராங்கனைகள் இருப்பார்கள்.
 ஹிந்தி பட திரைக்கதை எழுத்தாளரான ராம் கெல்கரின் மகளான மணிஷா கெல்கர் ஆஹுரா குழுவின் ஒரு கார் வீராங்கனையாவார். இவருக்கு முப்பத்திரண்டு வயதாகிறது. "எனக்கு வேகமும் சாகசமும் பிடிக்கும். ஃபார்முலா பந்தயக் காரில் அமர ஆசையோ ஆசை. ஆனால் பந்தயக் காரை ஓட்ட வேண்டும் என்று கனவு கண்டதில்லை. காணாத கனவு நனவாகியுள்ளது. இந்த துறைக்கு பெண்கள் வர முதல் தடையாக இருப்பது, கார் ரேசிங்கில் ஆகும் செலவுகள்தான். இருந்தாலும், எனது லட்ச்சியம் .. அதிகம் பெண்களை இந்த சாகச பயணத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான்" என்கிறார் மனிஷா.
 கணினி துறையிலிருக்கும் மிருணாளினி சிங், பொறியியல் மாணவி மேகா, மருத்துவம் படிக்கும் ஷிவானி பிருத்வி, பல் மருத்துவரான ரித்திகா ஓபராய், வெளிநாட்டில் வாழும் லியா தரன் ஆகியோர் இதர ஐந்து முதன்மை வீராங்கனைகள்.


 "கார் பந்தயத்தில் பெண்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. ஸ்பான்சர்கள் பெண் கார் ரேஸ் நடத்த முன்வருகிறார்கள். குழந்தை பெற்றுக் கொண்டவர்களும் வீராங்கனைகளாக மாறியுள்ளனர். பல் மருத்துவர் ரித்திகா இரண்டு குழந்தைகளுக்குத் தாய். கார் பந்தயத்தில் உள்ள ஆர்வம்தான் அவரை இழுத்துக் கொண்டு வந்துள்ளது. பொதுவாக கார் பந்தயம் ஆண்களுக்கான வீர விளையாட்டாகவே இருந்து வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் பெண்கள் கார் பந்தயக் குழு ஒன்று அமைந்திருப்பது ஒரு சாதனைதான். எங்கள் அமைப்பாளர் சரோஷ் , " பெயருக்கு இந்த அணியை உருவாக்கவில்லை. ஆண் பந்தயக்காரர்களுடன் போட்டியிட்டு வெல்லவும் வேண்டும் என்பதுதான் குறிக்கோள்." எங்களது குறிக்கோளும் அதுதான்" என்கிறார் மனிஷா .
 - பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com