Enable Javscript for better performance
இந்தியாவின் தங்க மங்கைகள்!- Dinamani

சுடச்சுட

  

  இந்தியாவின் தங்க மங்கைகள்!

  Published on : 01st May 2019 10:53 AM  |   அ+அ அ-   |    |  

  mm5

  எல்லா தினங்களையும் போலத்தான் அந்த "திங்கள்' கிழமையும் (ஏப்ரல் 22 ) விடிந்தது. ராசாத்தி வயலுக்குப் போகத் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அக்கம் பக்கத்தவர்கள் ராசாத்தியின் குடிசைக்கு ஓடி வந்தார்கள். வந்த வேகத்தில் அவர்களுக்கு மூச்சு இரைத்தாலும், சந்தோஷ செய்தியை அறிவித்தார்கள். "ராசாத்தி உன் மகள் கோமதி வெளிநாட்டில் ஓடி முதலா வந்ததுக்கு தங்கப் பதக்கம் கிடைச்சிருக்காம்... நாங்க டிவியில் பாத்தோம்.. நீ பாக்கலையா..' என்றார்கள்.
   "அப்படியா... நான் பாக்கலையே... எனக்கு டிவி போடத் தெரியாதே.. மகன்ந்தேன் வரணும்..'' என்று வெள்ளந்தியாய் சொல்ல.. மகன் சுப்பிரமணியனும் தங்கை கோமதியின் வெற்றி தெரிந்து வீட்டிற்கு ஓடிவர... டிவியில் கோமதி ஓடுவதை அக்கம்பக்கத்தவர்களுடன் பார்த்து மகிழ்ந்தார் ராசாத்தி. அங்கே கத்தார் தோஹாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீ தூர ஓட்டத்தில் அம்பாகப் பாய்ந்து 2:02.70 நேரத்தில் கடந்து முதல் இடத்தைப் பிடித்திருந்தார் கோமதி மாரியப்பன். கோமதியின் வெற்றி வியர்வையுடன் ஆனந்த கண்ணீர் துளிகள் தோஹா மைதானத்தில் விழ .. ஒரு மணி நேர இடைவெளியில் "இந்தத் தங்க மகளைப் பெற்றேனே..' என்று உருகிய தாய் ராசாத்தியின் ஆனந்தக் கண்ணீரும், "இதை பார்க்க கோமதியின் அப்பா இல்லையே..' என்று மருகியதில் சோகக் கண்ணீரும் கலந்து குடிசையின் மண்தரையில் விழுந்தது.
   ஆசிய போட்டியில் தனது தேசிய சாதனையைவிட குறைந்த நேரத்தில் கோமதி 800 மீ தூரத்தைக் கடந்து காட்டியுள்ளார். முப்பது வயதிலும் கோமதிக்கு இந்த இமாலய சாதனையை சாதிக்க முடிந்திருக்கிறது. முன்பு 2013 மற்றும் 2015-இ ல் நடைபெற்ற ஆசிய தடகள போட்டிகளில் பங்கேற்ற கோமதியால் முறையே ஏழு மற்றும் நான்காவது இடத்தையே பெற முடிந்தது. "இந்த சாதனைக்கு அடிக்கல் போட்டது கோமதி அப்பா மாரிமுத்துதான்.'' என்று அந்த கிராமமே சொல்கிறது.
   திருச்சி அருகேயுள்ள முடி கண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோமதி. சொந்தமாக வயல் இருந்தாலும் வாய்க்கும் வயிறுக்கும் எப்போதும் போராடும் ஏழைக் குடும்பம். அப்பா மாரிமுத்து, அம்மா ராசாத்தி, ஒரு அண்ணண். இரண்டு தமக்கைகள். அவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. கோமதி கடைக் குட்டி. கிராமத்தில் ஓடிப் பழக மைதானம் ஏதும் இல்லை. எல்லாம் வயல்காடுகள்தான்.

  ராசாத்தி கோமதியின் ஓட்டப் பயணம் குறித்து சொல்கிறார்:
   "பள்ளியில் படிக்கும் போதே கோமதிக்கு ஓட்டத்தில் ஆர்வம் இருந்தது. ஓட்டத்தில் பரிசுகள் வாங்கியுள்ளாள். அந்த ஆர்வத்தில் பயிற்சிக்காக தினமும் திருச்சி மைதானத்தில் ஓடி பயிற்சி பெற வேண்டும் என்று சொன்னாள். எங்களுக்கோ கிராமத்திலிருந்து எப்படி போய் வருவாள்.. படிப்பிற்காக பள்ளிக்கும் செல்ல வேண்டுமே..'' என்று வேண்டாம் என்றோம். ஆனால் கோமதியின் அப்பா பயிற்சிக்குப் போய்வரச் சொன்னார். அவர் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து விடுவார். கோமதியை சைக்கிளில் அமரச் செய்து ஐந்து கி. மீ தூரத்தில் இருக்கும் பஸ் நிறுத்தத்திற்கு கொண்டு போவார். பஸ்ஸில் கோமதியை திருச்சிக்கு ஏற்றி விட்டு வீடு திரும்புவார். பிறகு எட்டு மணிவாக்கில் பஸ் நிறுத்தத்திற்குப் போய் பயிற்சி முடிந்து திரும்பும் கோமதியை வீட்டிற்கு கொண்டு வருவார். இது தினமும் நடக்கும். சலிக்காமல் அப்பா கோமதிக்கு இதைச் செய்து வந்தார்.
   பள்ளி படிப்பு முடிந்ததும் கோமதி திருச்சியில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பொருளாதாரம் பட்டப்படிப்பில் சேர... தோழி சுருதி தந்த உற்சாகத்தில் ஓட்டப் பயிற்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடந்தது. கல்லூரியில் படிக்கும் போதுதான் கோமதிக்கு முறையான பயிற்சியாளர் கிடைத்தார். தொடக்கத்தில் ராஜாமணி சார் பயிற்சி கொடுத்தார். பிறகு காந்தி அவர்கள். கல்லூரியில் பல்கலைக் கழக அளவில் ஓடி பதக்கங்களை கோமதி அள்ளினாள். திருச்சியில் பட்டப் படிப்பு முடிந்ததும் சென்னையில் வைஷ்ணவ கல்லூரியில் "ஊடக மேலாண்மை' யில் முதுகலை படிக்க கோமதி சென்றாள். விளையாட்டுக்கான ஒதுக்கீட்டில் கோமதிக்கு மத்திய வருமான வரித்துறையின் உதவியாளராக 2013 -இல் வேலை கிடைத்தது. ஆனால் வேலை பெங்களூரில். 2013 முதல் சர்வதேச போட்டிகளில் கோமதி பங்கு பெறத் தொடங்கினாள். 2016 வாக்கில் அப்பா காலமானார். தொடர்ந்து கோமதிக்குப் பயிற்சிகள் அளித்து வந்த பயிற்சியாளர் காந்தி அவர்களும் மாரடைப்பால் இறந்துபோனார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் கோமதிக்கு ஓடும் போது காயம் ஏற்பட.. கோமதி ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீண்டு வந்த கோமதி விடா முயற்சியால் இந்த விசுவரூபம் எடுத்திருக்கிறாள்.. ரொம்பவும் பெருமையாக இருக்கிறது..'' என்கிறார் ராசாத்தி.
   "சீனாவின் சுன்யு வாங், கஸகஸ்தானின் மார்கரிட்டா, இலங்கையின் காயந்திகா போன்ற திறமையாளர்களுடன் ஓடத் துவங்கிய கோமதி , "எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமால் வந்திருக்கிறேன்... முயன்று பார்ப்போம்..'' என்று ஓடி.. இறுதி ஐம்பது மீட்டர் தூரத்தைக் கடக்கும் போது அனைவரையும் பின்னுக்குத் தள்ளி முன்னேறினார். "நான் முதலாவதாக எல்லைக் கோட்டை கடந்து தங்கப்பதக்கம் வென்றுவிட்டேன் என்பதை என்னால் உணர முடியவில்லை' என்று கோமதி சொன்னார். பத்து ஆண்டுகள் ஓட்டப் பயணத்தில் கோமதியின் சர்வதேச அளவில் தங்கப் பதக்கம் கிடைத்த முதல் வெற்றி. "விளையாட்டில் திறமை காட்டினால் அது நமக்கு சோறு போடும் என்று நினைக்கவில்லை. ஓட்டத்தின் முக்கியத்துவம் கல்லூரிக்குப் போன பிறகுதான் தெரிந்தது.
   அப்போதும் கூட ஓட்டத் திறமையின் காரணமாக ஒரு வேளை கிடைத்தால் போதும்.. குடும்பத்திற்கு உதவியா இருக்கும் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். வேலைக்குப் போன பிறகுதான் சாதனை செய்யவேண்டும் என்ற உந்துதல் பிறந்தது'' என்கிறார் கோமதி.
   கேரளத்தில் வறுமைக்கு கோட்டின் எல்லையில் பல ஆண்டுகளாக உழன்று கொண்டிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த பி. உ. சித்ரா, தோஹா ஆசிய போட்டியில் இந்தியாவிற்குத் தங்கப் பதக்கம் பெற்றுக் கொடுத்திருக்கும் இன்னொரு தங்க மங்கை. இவர், 1500 மீ . தூர ஓட்டப் போட்டியில் நான்கு நிமிடம் பதினான்கரை நொடிகளில் கடந்து முதலாவதாக வந்து தங்கப் பதக்கம் பெற்றிருப்பவர். இந்த வெற்றி மூலம் செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கெடுக்கும் தகுதியை சித்ரா பெறுகிறார். சித்ராவின் தோஹா வெற்றியில் தனது முந்தைய தங்கப் பதக்க நேரமான 4 .17 .92 நேரத்தை விட குறைவான நேரத்தில் தோஹாவில் தங்கப் பதக்கத்தைக் கொய்துள்ளார்.
   "பந்தயம் முடியும் தருணத்தில் கொஞ்சம் தடுமாறிவிட்டேன். ஏனென்றால் எனக்கு அடுத்ததாக ஓடி வந்த பஹ்ரைனைச் சேர்ந்த காஸவ் டைஜஸ்ட் முந்தைய பந்தயங்களில் என்னை தோற்கடித்தவர். அதனால் மிகவும் சிரமப்பட்டு வேகத்தைக் கூட்டி முதலாவதாக வந்தேன்'' என்கிறார் சித்ரா.
   சென்ற ஆசிய போட்டிகளில் சித்ராவின் பங்குபெறல் பல பிரச்னைகளுக்கு உள்ளானது. கேரளா உயர் நீதி மன்றத்தின் அறிவுறுத்தலால் சித்ரா ஓட்டக் குழுவில் சேர்க்கப்பட்டார். சித்ராவை ஒதுக்கியது குறித்து அகில இந்திய அளவில் கண்டனங்கள் எழுந்தன. கேரளா அரசு தலையிட்டதால், சித்ராவை இந்திய ஓட்டக் குழுவில் சேர்த்துக் கொண்டார்கள். அப்படி சேர்த்துக் கொண்டது சரியான முடிவு என்பதை இருபத்துமூன்று வயதாகும் சித்ரா தங்கப் பதக்கம் வாங்கி நிரூபித்துள்ளார்.
   பல நாட்கள் பசியுடன் உறங்கியிருக்கும் சித்ரா பசியை மறந்தது மறக்க முடிந்தது ... தனது ஓட்டங்களில்தான். பசியை மறக்கடிக்கும் ஓட்டத்தை "சிக்'கென்று பிடித்துக் கொண்டு சிட்டாக முன்னேறினார் சித்ரா. இப்போது உயரங்களைத் தொட்டிருக்கிறார். கேரள அரசு நிதி உதவி செய்து வந்தாலும் மாநில அரசு வேலை எட்டாக் கனியாகவே சித்ராவுக்கு இருந்தது. கடைசியில், சென்ற ஆண்டு இறுதியில், இந்தியன் ரயில்வே, பாலக்காடில் சித்ராவிற்கு "முதுநிலை எழுத்தர்' பணி வழங்கி உதவியுள்ளது.
   - பிஸ்மி பரிணாமன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai