Enable Javscript for better performance
வெள்ளி மங்கை: வாழ்க்கை படமாகிறது- Dinamani

சுடச்சுட

  
  mm4

  தோஹா ஆசியப்போட்டியில் முதலாவதாக வந்து தங்கப் பதக்கங்களை கோமதி மாரியப்பனும், சித்ராவும் தட்டி வர, ஹெப்டதலான் வீரங்கனை ஸ்வப்னா பர்மனும், ஈட்டி எறிதலில் அன்னுராணியும் இரண்டாவதாக வந்து வெள்ளிப் பதக்கங்களை பெற்று வந்துள்ளனர்.
   இதில் விசேஷம் என்னவென்றால், கொல்கத்தாவை சேர்ந்த ஸ்வப்னா பர்மன் (23) வாழ்க்கையை இயக்குநர், ஸ்ரீஜித் முகர்ஜி, திரைப்படமாக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதில் ஸ்வப்னாவாக சோஷினி சர்கார் என்ற நடிகை நடிக்கவுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்து கொள்ள தீவிர பயிற்சியில் உள்ள ஸ்வப்னா, தன்னுடைய வாழ்க்கை படமாவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும், இது விளையாட்டு வீராங்கனையாக வர விரும்பும் இளம் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதோடு, ஊக்கமும் அளிக்கும் என்கிறார்.
   2017-ஆம் ஆண்டிலேயே முதல் ஆசிய ஹெப்டதலான் சாம்பியன்ஷிப் பெற்ற முதல் இந்திய வீராங்கனையான ஸ்வப்னாவின் அம்மா, தேயிலை தோட்டத்தில் கூலி வேலை செய்கிறார். இவரது தந்தை 2011-ஆம் ஆண்டு பாரிசவாயுவால் தாக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். சிறுவயது முதலே சர்வதேச அளவில் விளையாட்டு வீராங்கனையாக வேண்டுமென்ற லட்சியத்தில் பயிற்சியில் ஈடுபட்ட ஸ்வப்னாவின் கால் பாதங்கள் ஒவ்வொன்றிலும் ஆறு விரல்கள். இதற்காக அகலமான காலணிகள் வாங்க பணம் சேமிப்பதுண்டாம்.
   " விளையாட்டுத் துறையில் ஆண்-பெண் என்ற வித்தியாசம் இல்லை. அனைவரும் ஒன்றுதான். திறமைதான் முக்கியம். முன்பெல்லாம் விளையாட்டு வீரர்கள் விருது வாங்கி வந்தால் அதைபற்றி யாரும் பெரிதாக பேசமாட்டார்கள். இப்போது இந்தியா பெருமைபடும் வகையில் விருதுகளை நம் வீரர்கள் வாங்கி குவிக்கத் தொடங்கிய பிறகுதான், அதை பற்றி பேசுவதோடு, இளைய தலைமுறையினர் விளையாட்டுத் துறையில் ஆர்வம் காட்டும் வகையில் உற்காசமூட்டத் தொடங்கியுள்ளனர். இது ஒரு நல்ல மாற்றம்.
   அதே நேரத்தில் என்னைப் போன்று ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது, உதவி பெற பலரை அணுக வேண்டியுள்ளது. ஒரு சிலர் உதவ முன் வருகின்றனர். அரசு மட்டுமின்றி தனியார் கார்பரேட் நிறுவனங்களும் இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க முன்வர வேண்டும்.
   ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விருது பெற்று வந்தவர்களுக்கு பெரிய அளவில் பணம் கிடைப்பதால், இப்போது பலரும் விளையாட்டுத் துறையில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் ஏதாவது ஒரு வேலையும் கிடைக்கிறது. மேற்கு வங்க அரசு ஊக்கத் தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும்.
   விளையாட்டுத் துறையில் பயிற்சி பெறுவது சுலபமல்ல. பயிற்சியின்போது பலமுறை நான் காயமடைந்துள்ளேன். என் குடும்ப சூழ்நிலை கவலை தருவதாக இருந்தது. அதே சமயம் எனக்கேற்பட்ட காயத்தின் காரணமாக சிலர், "இனி இவள் அவ்வளவுதான். இந்த துறையைவிட்டே விலகிவிடுவாள்' என்று என் எதிரிலேயே கூறினார். என்னுடைய குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தனர். இடையூறுகளை மீறி என்னுடைய திறமையால் வெற்றி பெற்றேன். "எந்த விமர்சனமாக இருந்தாலும் அதற்கு உன் மனதில் இடம் கொடுக்காதே' என்று என்னுடைய பயிற்சியாளர் சுபாஷ் சர்க்கார் கூறுவார். வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று நினைத்தால் அதை நோக்கியே முன்னேற வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். அதனால் என்னுடைய வாழ்க்கை திரைப்படமாவது மகிழ்ச்சிதான்'' என்றார் ஸ்வப்னா பார்மன்.
   - பூர்ணிமா
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai