தீர விசாரித்து மணமகனை தேர்வு செய்யுங்கள்!

எப்போதுமே குடும்பத்தில் ஏற்படும் சிறு சண்டைகளுக்கு காவல் நிலையம் தீர்வை அளிக்காது
தீர விசாரித்து மணமகனை தேர்வு செய்யுங்கள்!

வாசகர்களின் மனநலம் சார்ந்த கேள்விகளுக்கு மனோ தத்துவ நிபுணர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் அளித்த பதில்கள்:
குடும்ப உறவுகளில் ஏற்படும் சிறு சண்டைகளுக்காக காவல் நிலையம் செல்வது தீர்வை தருமா?
ஆர். புவனேஸ்வரி, திண்டிவனம்.
எப்போதுமே குடும்பத்தில் ஏற்படும் சிறு சண்டைகளுக்கு காவல் நிலையம் தீர்வை அளிக்காது. பிரச்னைகளை சமாளிப்பது நம்மிடம்தான் இருக்கிறது. சிறு சண்டைக்காக காவல் நிலையம் சென்றால், பின்னாளில் அது பெரிய சண்டையாக மாற வாய்ப்பிருக்கிறது. அதனால், பெரும்பாலும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகும் மனப்பான்மை வேண்டும். அப்போதுதான் சிறு சண்டைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளும் மனோபாவம் ஏற்படாது. அலுவலகம் செல்பவராக இருந்தால்- அங்கேயும் சில கருத்து வேறுபாடுகள் இருக்கும். ஆனால், அதையெல்லாம் நாம் பொறுத்துக் கொள்கிறோம் .
அதேபோன்று வீட்டில் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தாலும், அதனை பொருத்து அனுசரித்துப் போக வேண்டும். ஒருவர் கோபப்படும்போது, நீங்களும் திரும்ப கோபப் படாமல் அமைதியாக இருந்துவிட்டு, அவர் கோபம் தணிந்தவுடன் இப்படி கோபப்படுவது சரிதானா என்று யோசித்துப் பாருங்கள் என்று அமைதியாக சொல்லுங்கள் அப்போது நிச்சயம் அவர் யோசித்துப் பார்ப்பார். எனவே, வீட்டுக்குள் வரும் சண்டைகளுக்கு தீர்வு நம்மிடம்தான் இருக்கிறது. அதே சமயம் கணவர், அடித்து துண்புறுத்தி, உடல் ரீதியாக வேதனை கொடுத்தார் என்றால், அப்போது, நிச்சயமாக காவல் துறை பாதுக்காப்பை நீங்கள் நாடலாம்.
வெளிநாட்டில் வேலை செய்வதாக கூறி என்னை திருமணம் செய்தார்கள். திருமணத்திற்கு பின் என் கணவர் எந்த வேலைக்கும் செல்வதில்லை? நான் என்ன செய்வது எனக்கு நல்ல ஆலோசனை கூறுங்கள்?
ஏ.ராதிகா, திருச்சி.
இது போன்ற ஏமாற்று வேலை ஆங்காங்கு நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. சிலர் கல்யாணத்துக்கு பிறகு விசா கிடைக்கவில்லை அதனால் இனி வெளிநாடு போகமுடியாது என்பார்கள். இதற்கு காரணம், சில பெற்றோர் உதாரியாக இருக்கும். தன் பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால், அவன் மாறிவிடுவான் என்ற எண்ணத்தில் இதுபோன்று ஏமாற்றி திருமணம் செய்து விடுகிறார்கள்.
இதனால் பாதிக்கப்படுவது பெண்களின் வாழ்க்கைதான். அதனால் இந்த விஷயத்தைப் பொருத்தவரை என்னுடைய ஆலோசனை, பெற்றோருக்குத்தான், உங்கள் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்கிறீர்கள் என்றால், மாப்பிள்ளையைப் பற்றி முதலில் தீர விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். பின்னர், மகளை மணம் முடித்துக் கொடுங்கள். உங்க, விஷயத்தைப் பொருத்தவரை, திருமணம் முடிந்துவிட்டது. அதனால், உங்கள் கணவர் வெளிநாடு போகவில்லை என்பதையே சுட்டிக் காட்டாமல், வெளிநாட்டு வேலை கிடைக்கும் வரை, இங்கேயே வேறு ஏதாவது வேலை பார்க்கும்படி ஊக்குவியுங்கள். ஆணுக்கு வேலைக்குச் செல்வதுதான் அழகு என்பதை பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள்.
சந்திப்பு: ஸ்ரீதேவி

உங்களது சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் பிரபல மனோ தத்துவ நிபுணர் டாக்டர் லட்சுமி விஜயகுமார்
கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:
தினமணி - மகளிர்மணி, எக்ஸ்பிரஸ் கார்டன்,
29, இரண்டாவது முதன்மை சாலை,
அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை - 600058.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com