விரல்கள் பத்தும் மூலதனமே!

 "கடந்த 50 வாரங்களாக உங்களுடன் பயணித்த நான் இத்துடன் இப்பயணத்தை முடித்துக் கொள்கிறேன்.
விரல்கள் பத்தும் மூலதனமே!

இல்லத்தரசிகளும் தொழில் முனைவோர் ஆகலாம்! 50
 "கடந்த 50 வாரங்களாக உங்களுடன் பயணித்த நான் இத்துடன் இப்பயணத்தை முடித்துக் கொள்கிறேன். காரணம் இதுதான், தொடர்ந்து இந்த பிசினஸ் செய்யலாம் . அந்த பிசினஸ் செய்யலாம் என எழுதிக் கொண்டே இருந்தால், உங்களை யோசிக்க வைப்பது எப்போது, முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் வீட்டில் மிகப்பெரிய பொறுப்பாளராக, குடும்பமே உங்கள் தலைமையில் நடந்தாலும், நீங்கள் வீட்டில் உள்ளபடியே ஏதேனும் சிறு தொழிலாவது செய்தால் மட்டுமே உங்களை தனியாக அடையாளம் காட்ட இயலும். உங்களுக்கென ஓர் அங்கீகாரம், அடையாளம் ஏற்படுத்த உங்களால் என்ன செய்ய இயலும் என யோசித்து பாருங்கள்.
 நான் முதலில் கூறியது போன்றுதான் உங்களால் முடிந்தால் உங்கள் வீட்டின் அருகில் ஏதேனும் பயிற்சி நிறுவனம் இருந்தால் சிறு, சிறு பயிற்சிகளை நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். இவைகளை செய்யும் பொழுதே உங்களுக்கு தெரிந்துவிடும். இது நம் வாழ்க்கைக்கு ஒத்து வருமா வராதா என்று, பிறகு அதை செய்யுங்கள்.
 ஒரு சிலர் பிசினஸ் என்றாலே அதிக முதலீடு தேவைப்படும். என்னால் அவ்வளவு முதலீடு எல்லாம் செய்ய இயலாது என்பார்கள். ஆனால் குறைந்தபட்சம் ரூ.300முதல் ரூ.500 வரை இருந்தால் கூட ஒரு பிசினஸ் செய்யலாம். விரல்கள் பத்தும் மூலதனம் தானே!.
 ஒரு சிலர் என்னால் ஒரு ரூபாய் கூட முதலீடு செய்ய முடியாது என நினைப்பவர்கள் கவலைப் பட வேண்டாம். நம்மை சுற்றியே ஏராளமான பிசினஸ் கொட்டிக் கிடக்கிறது. சற்றே கூர்ந்து கவனியுங்கள். நீங்களும் தொழில் முனைவோர் ஆகலாம். உதாரணத்திற்கு சிலவற்றை கூறுகிறேன்'' என்றார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ்.
 வீடு வாடகைக்கு பிடித்து தருதல். இந்தக் காலத்தில் இது நல்ல வருமானம் தரக் கூடியது. நீங்கள் இருக்கும் பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் எங்கெங்கு வீடுகள் வாடகைக்கு விட காலியாக உள்ளன என்பதை ஓய்வு நேரத்தில் சென்று கண்டறிந்து கொண்டு, வீட்டு சொந்தக்காரரிடம் வாடகைக்கு ஆட்கள் பிடித்து கொடுத்தால் ஒரு சிறிய தொகை தர வேண்டும் என்று பேசிக் கொள்ளுங்கள். அதுபோன்று வீடு தேடுவோருக்கு வீட்டை காண்பிக்க அவர்களிடமும் ஒரு தொகை பேசிக் கொள்ளலாம். இது நல்ல லாபம் தரும் தொழில்.
 இப்போது இருக்கும் பரபரப்பான கால சூழலில், நிறைய பேருக்கு ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு மாறும்போது பொருட்களை மாற்றுவது என்பது கஷ்டமான விஷயம். அதனால் நீங்கள் உங்களுடன் இரண்டு, மூன்று பேரைச் சேர்த்து கொண்டு கூட்டாக சேர்ந்து வீடு மாற்ற விரும்புவோருக்கு பொருட்களை இறக்கி, ஏற்றுவதில் உதவியாக இருக்கலாம்.
 பெரும்பாலான வீடுகளில் ( நகரங்களில்) கணவன், மனைவி வேலைக்கு செல்பவர்களாக இருப்பார்கள். அவர்களால் வீட்டை சரி வர பராமரிக்க முடியாது. அப்படிப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான வேலையை நாம் செய்து கொடுக்கலாம்.
 நீங்கள் படித்த பட்டதாரியாக இருந்தால், வீட்டில் இருந்தபடியே டியூசன் எடுக்கலாம்.
 சில பெண்கள் திருமணத்திற்கு முன்பு பரத நாட்டியம் அல்லது இசைக் கருவி வாசிப்பது போன்றவற்றை கற்றிருப்பார்கள். திருமணத்திற்கு பின்பு அதற்கான வாய்ப்பே இல்லாமல் இருப்பார்கள். அவர்கள் வீட்டில் இருந்தபடியே அவரவருக்கு தெரிந்த கலையை ஓய்வு நேரத்தில் பலருக்கு சொல்லிக் கொடுக்கலாம். இதில் வருமானமும் கிடைக்கும், உடல் ஆரோக்கியம் மற்றும் ஆத்ம திருப்தியும் கிடைக்கும்.
 ஒரு சிலர் இந்தியில் எம்.ஏ. வரை படித்திருப்பார்கள். அதை பயன்படுத்த தெரியாமல் இருப்பார்கள். இது போன்றவர்கள் இந்தி பிரச்சார சபாவில் தங்களை ஆசிரியையாக பதிவு செய்து கொண்டு இந்தி டியூசன் எடுக்கலாம்.
 உறவினர்கள், நண்பர்கள் வட்டம் அதிகம் உள்ளவர்கள் திருமண தகவல் மையம் தொடங்கலாம். அனைத்து வரன் பற்றிய விவரங்களை சேகரித்து கொடுக்கலாம்.
 வேலைக்கு செல்வோர், கல்லூரியில் படிக்கும் பெண்கள் சிலர் நான்கு, ஐந்து பேராக ரூம் எடுத்து தங்கியிருப்பார்கள். ஆனால், இவர்களுக்கு சரியாக சமைக்க தெரிந்திருக்காது. எனவே, அதுபோன்று உங்கள் வீட்டிற்கு அருகில் யாராவது இருந்தால் அவர்களுக்காக உங்கள் வீட்டிலேயே சமைத்து அதை விற்பனை செய்யலாம். அல்லது, அவர்கள் வீட்டிற்கு சென்று சமைத்துத் தரலாம். 1-2 மணி நேர வேலைதான். ஆனால், மாதாமாதம் கணிசமான வருமானம் கிடைக்கும்.
 சில வீடுகளில் வயதானவர்கள் படுத்த படுக்கையாக இருப்பார்கள். அவர்களை கவனித்துக் கொள்ள ஆட்கள் தேவைப்படுவார்கள். பொறுமை குணம் உள்ளவர்கள் இதனை செய்யலாம்.
 மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாலுக்கா அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் போன்ற இடங்களில் பலர் பல கோரிக்கையுடன் வருவார்கள். அவர்களில் சிலருக்கு விண்ணப்பப் படிவங்களை எப்படி பூர்த்தி செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள். அவர்களுக்கு விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து தரலாம். இதுவும் ஒரு தொழில்தான்.
 இந்த இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம் தொடரை படித்துவிட்டு நிறைய தோழிகள் நாங்களும் ஏதாவது தொழில் செய்ய வேண்டும், ஆனால் எங்களால் சென்னைக்கு வந்து கற்றுக் கொள்ள இயலவில்லை என தெரிவிக்கின்றனர். அதனால் இது போன்ற தோழிகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் "சுகா இந்தியா கைத்தொழில்' என்ற "யூ டியூப் சேனல்' தொடங்கி அதில் பல வகையான தொழிற் பயிற்சிகளை கற்றுத் தருகிறோம் அதனை பயன்படுத்திக் கொள்ளவும். மேலும், எனது ஆலோசனை வேண்டுவோர் 95001 48840 என்ற இந்த தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இதுநாள் வரை இத்தொடரை எழுத வாய்ப்பளித்த தினமணிக்கும், படித்து வந்த வாசகிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 (நிறைவு)
 - தொகுப்பு: ஸ்ரீ
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com