Enable Javscript for better performance
இந்தியாவின் பன்முக பரிமாணங்களை அறிந்து பிரமித்தேன்!- Dinamani

சுடச்சுட

  

  இந்தியாவின் பன்முக பரிமாணங்களை அறிந்து பிரமித்தேன்!

  Published on : 15th May 2019 09:44 AM  |   அ+அ அ-   |    |  

  KATYA_WITH_HER_STUDENTS_AT_BULGARIA

  இந்தியா அறிவியல் பொருளாதார துறைகளில் வேகமாக முன்னேறி வருகின்ற வளரும் நாடாக இருந்தாலும், பன்முக கலை கலாசார பாரம்பரியத்தில் உலகின் தொன்மையான நாடாகத் திகழ்கிறது. இந்தியாவைப் பார்த்து மற்ற நாடுகள் வியப்பது, இந்தியாவின் பலதரப்பட்ட கலைகள், இசை, நடனம், சிற்பங்கள், விழாக்கள் தான். இதனால் வெளிநாட்டவர்கள் இந்திய இசை, நடனம், வாய் பாட்டு கற்க இந்தியா வருகிறார்கள். ஆர்வம் தீரும் வரை கற்கிறார்கள். பிறகு போய் விடுகிறார்கள். ஆனால் இந்தியா வந்து இந்திய நடனக்கலையைக் கற்று சொந்த நாடு சென்று அங்கு நடனப் பள்ளி தொடங்கி, அங்குள்ள குழந்தைகளுக்கு நமது நடனங்களை கற்றுக் கொடுத்து அரங்கேற்றமும் செய்து வைக்கிறார் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த காத்யா தோஷிவா. வெளிநாட்டவராக இருந்தாலும், தனது நடன சேவைகளால் "இந்திய கலாசார தூதுவராக' செயல்பட்டு வரும் காத்யா தோஷிவா சமீபத்தில் கேரளாவின் கொச்சிக்கு வந்தபோது அவரை சந்தித்தோம்:
   "பல்கேரியாவின் தலைநகரான சோஃபியாவில் சுமார் பதினான்கு ஆண்டுகள் பொறியாளராக வேலை பார்த்து வந்தேன். கை நிறைய சம்பளம். இருந்தாலும் மன நிறைவு இல்லாமல் தவித்தேன். எனது தவிப்பினை புரிந்து கொண்ட கணவர் ரோஸன் கென்கோவ் மன மாற்றத்திற்காக என்னை யோகா வகுப்பில் சேர்த்துவிட்டார்.
   அவரது கணிப்புப்படி யோகா எனக்குள் ஒரு திருப்பத்தையும் கொண்டு வந்தது. எனக்கு யோகா சொல்லிக் கொடுத்தவர் திஹோமிர் மிஹய்லோவ். யோகா வெறும் உடல் பயிற்சி அல்ல ஒரு கலை, வாழ்வியல் முறை என்று புரிய வந்தது. யோகாவை ஆழமாக கற்க இந்தியாவிற்கு 2013-இல் வந்தேன். இந்தியா வந்தபோது இந்தியா பல்வேறு கலைகளின் பிறப்பிடமாக இருப்பதை உணர்ந்தேன். கலை மட்டுமல்ல , இந்திய கலாசாரம், உணவு முறை, பல்வேறு மொழிகளின் வரலாறு, அவற்றின் பயணம், பாரம்பரிய நடனங்கள், இசை போன்ற பன்முக சங்கமங்களின் பரிமாணங்களையும் அறிந்து பிரமித்தேன்.
   அதில் என்னை மிகவும் கவர்ந்தது தமிழகத்தின் பரதக்கலை. இதனால் பரதம் கற்க தொடங்கினேன். ஆரம்பத்தில் நடன பாவங்கள், முத்திரைகள், லாகவங்கள் நான் நினைத்ததை விட மிகவும் கடினமானதாக அமைந்து என்னை சோதித்தன. ஆனால் ஆர்வம் எனது முழு கவனத்தையும் பரதக் கலையின் மீது ஈடுபடுத்தியது. அடுத்தடுத்த நடனப் பயிற்சிகள் ஏணியாக அமைந்தன. மனமாற்றத்திற்காகவும், புத்துணர்விற்காகவும் கற்ற பரதம் என்னை ஆளத் தொடங்கிவிட்டது என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.
   மூன்று மாத நடன பயிற்சிக்குப் பிறகு நாடு திரும்பி வேலையில் சேர்ந்தேன். ஆனால் அலுவலகத்தில் என்னால் ஈடுபாட்டுடன் வேலை செய்ய முடியவில்லை. மனம் பரத நடனம் திசை நோக்கி தன்னிச்சையாக பயணிக்கத் தொடங்கியது.
   நடனத்திற்காக வேலையை நிரந்தரமாக விட்டுவிட்டேன். மீண்டும் இந்தியா வந்தேன். பரத நாட்டியத்திற்குப் பிறகு இந்தியாவின் இதர பாரம்பரிய நடனங்களையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் என்னை தொற்றிக் கொண்டது. புனேயில் நிவேதிதா பாத்வே பரத நாட்டியத்துக்கும், பெங்களூருவில் ஷர்மிளா முகர்ஜி ஒடிசி நடனத்துக்கும், காசியில் ரவிசங்கர் மிஷ்ரா கதக் நடனத்திற்கும் எனக்கு குருவானார்கள்.
   எனக்கு மேற்கத்திய நடனங்கள் வரும். எல்லா வகை நடனங்களையும் நான் மேடையில் அரங்கேற்றி வருகிறேன். எனக்கு யோகா, பிறகு இந்திய நடனங்களை அறிமுகம் செய்து வைத்த என் கணவருக்கு நானும் ஒன்றை அறிமுகம் செய்து வைத்தேன். தபேலா. அவரும் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டார்.
   2018-இல் பல்கேரியாவிற்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகை தந்தார். அவரது முன்னிலையில் என் கணவர் ரோஸன் தபேலா வாசிக்க, நான் நடனம் ஆட வாய்ப்பு கிடைத்தது சந்தோஷத்தை அளித்தது.
   இந்திய நடனங்களை உலகளவில் அரங்கேற்ற எனக்கு விடுக்கப்படும் அழைப்புகளை ஏற்று வெளிநாடுகளில் இந்திய நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். கிரீஸ், பிரான்ஸ் நாடுகளில் எனது நடன நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. வரும் அக்டோபரில் பெல்கிரேடில் எனது நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
   எனக்கு இந்திய மொழிகள் எதுவும் தெரியாது. ஆனால் பாடலுக்கு அல்லது கீர்த்தனங்களுக்கு நடனமாடப் போகிறோமோ அவற்றை சரிவர புரிந்து கொண்டால் பாவம், முத்திரைகள், நகர்வுகள் தானே வந்துவிடும் என எனது குருக்கள் சொல்லிய விளக்கத்தை புரிந்து கொண்டிருக்கிறேன். அவற்றை மனதில் பதிவும் செய்திருக்கிறேன். அவைதான் நடன நிகழ்ச்சிகளில் கை கொடுக்கிறது. மேல்நாடுகளில் மட்டுமல்லாமல், இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் எனது நடன நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.

   பல்கேரியாவில் பல மேடைகளில் இந்திய நடனங்களை ஆடி பிரபலப்படுத்தியுள்ளேன். எங்கள் நாட்டு மக்கள் இந்திய நடனங்களை ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.
   "பல்கேரியாவில் பள்ளிகளுக்குச் சென்று நான் உள்ளூர் சிறுமிகளுக்கும், இந்திய சிறுமிகளுக்கும் நடனங்களை பயிற்றுவிக்கிறேன். "காயா' என்ற பெயரில் சொந்தமாக நடன பள்ளியையும் நடத்தி வருகிறேன். எனது சிஷ்யைகள் என்னுடன் ஆர்வத்துடன் பயணிக்கிறார்கள். சலங்கை குலுங்க அவர்கள் நடனம் பயிலுவதைக் காண கண் கோடி வேண்டும்'' என்கிறார் காத்யா தோஷிவா.
   - கண்ணம்மா பாரதி
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai