முகப்பு வார இதழ்கள் மகளிர்மணி
எச்சரிக்கையாக, பாதுகாப்பாக இருங்கள்!
By DIN | Published On : 15th May 2019 09:59 AM | Last Updated : 15th May 2019 09:59 AM | அ+அ அ- |

வாசகர்களின் மனநலம் சார்ந்த கேள்விகளுக்கு மனோதத்துவ நிபுணர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் அளித்த பதில்கள்:
இரவில் அடிக்கடி தூக்கம் விழித்துக் கொள்கிறேன். அப்படி விழித்துக் கொண்டால் நீண்ட நேரம் தூக்கம் வராமல் ஏதேதோ எண்ணம் ஏற்படுகிறது. பின்னர், விடியற்காலை பொழுதில் தூங்கிப் போகிறேன். இது எதனால்? இதற்கு தீர்வு என்ன?
அ.கல்பனா , திருவான்மியூர்.
தூக்கம் வரவில்லை என்று போனை எடுத்து ஃபேஸ் புக், வாட்ஸ்அப் பார்ப்பது கேம் விளையாடுவது, எழுந்து சென்று எதையாவது சாப்பிடுவது போன்றவற்றை செய்தால், நீங்கள் எவ்வளவு நேரம் போனை பார்க்கிறீர்களோ, அவ்வளவு நேரம் தூக்கம் தள்ளித்தான் போகும். ஏதேதோ நினைவுகள் வரும்போது அந்த நினைவுகளுக்குள் செல்லாமல் இதெல்லாம் வேறு யாருடைய நினைவோ என்று நினைத்தால் அடுத்த அரைமணி நேரத்தில் உங்களுக்கு தூக்கம் வந்துவிடும்.
உங்களுடைய வயது என்னவென்று நீங்கள் குறிப்பிடவில்லை. நீங்கள் வயதானவராக இருந்தால், அடிக்கடி தூக்கம் வராமல் விழித்துக் கொள்வது என்பது சாதாரணமான ஒன்று.
ஆனால் சிறு வயதாக இருந்து இரவில் அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டு அவதிப்பட்டால். உங்கள் ஆழ்மனதில் இருக்கும் ஏதோ ஒரு பிரச்னைதான் உங்களை இப்படி தூங்க விடாமல் செய்கிறது. உங்கள் அடி மனதில் என்ன இருக்கிறது? எதை நினைத்து நீங்கள் கவலைப் படுகிறீர்கள்? அல்லது எதிர்காலத்தை நினைத்து கவலைப் படுகிறீர்களா என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதன் அடிப்படை காரணத்தை நீங்கள் சரி செய்தால். இந்த பிரச்னையில் இருந்து தீர்வு பெறலாம்.
என்னுடைய கணவர் ராணுவத்தில் பணிபுரிகிறார். இதனை தெரிந்த என் உறவினரே என்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார். இதை எப்படி சமாளிப்பது?
பெயர் சொல்ல விரும்பாத வாசகி.
இது இப்போதைய காலச் சூழலில் ஒரு பெரிய பிரச்னையாகத்தான் இருக்கிறது. பொதுவாக ஒரு பெண் தனியாக இருக்கிறார் என்று தெரிந்தால் அவரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சில ஆண்கள் நினைக்கிறார்கள். இதற்காக பெண் தனிமையாக இருக்கும்போது அவருக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருப்பது போன்று பேசி, பழகி தவறாக நடந்து கொள்பவர்களும் இருக்கிறார்கள். உங்கள் விஷயத்தில் உறவினரே தவறாக நடக்க முயற்சிப்பதாக கூறியுள்ளீர்கள். எனவே, அதுபோன்ற உறவே வேண்டாம் தவிர்த்து விடுங்கள். உங்கள் கணவரிடம் இதுபற்றி தெரிவியுங்கள். "இதுபோன்ற உறவினர்களை வீட்டுக்கு வர சொல்லாதீர்கள்' என்று சொல்லுங்கள். இது உங்கள் தனிப்பட்ட பிரச்னை என்பதை விட இது ஒரு சமூகப் பிரச்னை, பொதுவாகவே ஒரு பெண் தனியாக இருக்கிறார் என்றாலே, மற்றவர்கள் அவரை பார்க்கும் விதமும், பயன்படுத்திக் கொள்ள நினைப்பவர்களும்தான் அதிகம். அதனால் எச்சரிக்கையாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். அதுபோன்ற உறவினர்கள் வீட்டுக்கு வரும்போது, பெரும்பாலும் வெளியில் அமர்ந்தே பேசுங்கள் அல்லது அவர்கள் வருகிறார்கள் என்று தெரிந்தால், தோழிகளை துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள். அல்லது பிள்ளைகளை அருகில் வைத்துக் கொள்ளுங்கள் அல்லது அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து கொஞ்சம் நேரம் கூட இருங்கள் என்று கூறுங்கள். நீங்கள் காரணம் கூட கூற வேண்டாம். இதையும் மீறி அவர் உங்களிடம் தவறாக நடக்க நேர்ந்தால், அவரிடம் நேராக சொல்லுங்கள், "இது போன்று நடந்து கொண்டால், நான் எல்லாரிடமும் உங்களைப் பற்றி சொல்லுவேன்'' என்று தைரியமாக கூறுங்கள். அப்போது அவர், உங்களிடம் தவறாக நடக்க பயப்படுவார்.
சந்திப்பு: ஸ்ரீதேவி
உங்களது சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் பிரபல மனோ தத்துவ நிபுணர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:
தினமணி - மகளிர்மணி, எக்ஸ்பிரஸ் கார்டன்,
29, இரண்டாவது முதன்மை சாலை,
அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை - 600058.