என் பிருந்தாவனம்!16- பாரததேவி

என் பிருந்தாவனம்!16- பாரததேவி

"அதேன் சொல்லிட்டேனே.. கொத்தனாரு கிட்டச் சொல்லி காலா, காலத்தில வேலய முடிச்சிட்டு, உன் பொண்டாட்டிய கூட்டிட்டு வார வழியப்பாரு. இன்னைக்கு ஆளுக வெங்காயம் அருக்க வாராக

தங்கராசு மீண்டும் "அம்மா.... அம்மா..'' என்றான்.
 "அதேன் சொல்லிட்டேனே.. கொத்தனாரு கிட்டச் சொல்லி காலா, காலத்தில வேலய முடிச்சிட்டு, உன் பொண்டாட்டிய கூட்டிட்டு வார வழியப்பாரு. இன்னைக்கு ஆளுக வெங்காயம் அருக்க வாராக, நானு பிஞ்சைக்குப் போறேன்'' என்ற சங்கரி வாசற்புறம் நோக்கி நடந்தாள்.
 தங்கராசு அம்மா போவதையேப் பார்த்துக் கொண்டிருந்தான். ஓடிப்போய் அம்மா காலில் விழ வேண்டும் போல் இருந்தது. அவளைக் கட்டி அணைத்துக் கொள்ள வேண்டுமென்றும் இருந்தது.
 இடுப்பில் பண்ணரிவாளும், கையில் பெட்டியோடும் தன் அம்மாவுடன் நடந்த கமலா,
 "என்னம்மா நம்ம ஊருக்காரக ஒரு ஆத்திரம், அவசரத்துக்கு வீட்டுல கொல்லைப்புறமா ஒதுங்குனாலே, காடெல்லாம் திரிஞ்சிட்டு வந்தவ இப்படி போனா வீடுவிளங்குமா.. வீட்டுக்குள்ள சீதேவிதேன் தங்குவாளான்னுப் பேசுவாகளே நீ என்னன்னா கக்கூச கட்டச் சொல்லுத ஊர்க்காரக சிரிப்பாகளேம்மா'' என்றாள் கவலையோடு.
 "அடி போடி, மறுவீடு வந்த மறுநாளே உன் மதினி அவ அம்மா வீட்டுல போயி இருந்துக்கிட்டு கக்கூச கட்டுனாத்தேன் வருவேன்னு ஒருமாசமா முரண்டுப் புடிச்சிக்கிட்டு இருக்கா. எம்புள்ள என் கிட்டவும் பேச மாட்டாம, பொண்டாட்டிக் கிட்டவும் பேச முடியாம பரிதவிச்சிக்கிட்டு வாரதப் பாக்கையில் என் பெத்த வயிறு பத்தி எரியுது. இதுக்கெல்லாம் ஊருக்காரக என்ன சொல்லவாகளோன்னு நானு பயந்துக்கிட்டிருந்தா எம்புள்ள கதி என்னாவது? சின்னஞ்சிறுசுக இப்பத்தேன் கல்யாணம் முடிச்சிருக்கு. அதுக ஒன்னா, மன்னா இருந்தாத்தான குடிச்சக் கஞ்சி எனக்கு கூட்டோட சேரும்'' என்றாள் சங்கரி.
 ஒரே வாரத்தில் பாத்ரூமையும்,
 கக்கூசையும் கட்டி முடித்துவிட்டான் அய்யனார் கொத்தனார். அந்த ஊர்க்காரர்களுக்கு வேலைக்குப் போகும்போதும் சரி, வரும்போதும் சரி சங்கரி வீட்டில் கொல்லைப்புறமாக புதிதாய் கட்டியிருக்கும் கக்கூசைப் பார்ப்பதே வேலையாகவும், வேடிக்கையாகவும் போய்விட்டது. இந்த கக்கூசைப் பார்க்க வருகிறவர்கள் பேசாமல் போவதில்லை.
 அப்பவும், "கஞ்சிப்பான இருக்க வீட்டுக்குள்ள கக்கூசையுமா கட்டுவா இந்த சங்கரி, அவளுக்கென்ன கூறு கெட்டுப் போச்சா? மருமவ கேட்டாளாம். இவ கட்டுதாளாம். மருமவ என்னமும் சொன்னான்னா அடியே எங்க ஊர்க்காரக கணக்கா ஓட, தாவுன்னு போ இல்லாட்டா உன் ஆத்தா வீட்டுலயே இருன்னு சொல்லுக்கில்லாம இப்படி ஒரு பொம்பள மதிகெட்டு அலைவாளா?'' என்று கூடி, கூடி பொரணி பேசினார்கள்.
 சங்கரி எதையுமே கண்டு கொள்ளவில்லை. கக்கூஸ் கட்டிய உடனே மருமகளை கூட்டி வரச் சொல்லி மகனை பட்டணத்துக்கு அனுப்பி வைத்தாள்.
 புதிதாக கட்டிய குளிக்கும் அறையைப் பார்த்த கௌசிகாவிற்கு எரிச்சல் பிடுங்கியது. ஷவர்பாத் வைத்துக் கட்டவில்லை. புருஷனைக் கூப்பிட்டு, "எங்க வீட்டுல இருந்த ஷவர் பாத்தில எப்படி மலை அருவியில குளிச்சமாதிரி குளிச்சீங்க இங்க மட்டும் ஏன் அத வைக்கல நானு அதிலேயே குளிச்சிப் பழக்கப்பட்டவ குழாயில நானு தண்ணிப்புடிச்சி குளிக்க மாட்டேன்'' என்றாள்.
 "அப்படி ஒரு ஷவர் வைக்க சொல்லித்தான் கொத்தனாரிடம் சொன்னான் தங்கராசு. ஆனால் அய்யனாரோ அப்படியெல்லாம் எனக்கு வைக்கத் தெரியாது தம்பி. அதுக்கு நீங்க பட்டணத்தில இருக்க கொத்தனாரத்தேன் கூட்டிட்டு வரணும்'' என்று சொல்லிவிட்டான்.
 இந்த ஷவர் பாத்துக்காக பட்டணத்துக்குப் போய் கொத்தனார்களைத் தேட முடியாத தங்கராசு அதை அப்படியே விட்டுவிட்டான். ஆனால் அதற்காக கௌசிகா இப்படி சண்டைக்கு வருவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
 முகம் கனன்று கோபத்தோடு எகிறிக் கொண்டிருந்த கெளிசிகாவை சமாதானப் படுத்தினான் தங்கராசு.
 ""கொஞ்சம் பொறுத்துக்கோ கௌசி, கூடிய சீக்கிரம் அத வச்சிருவோம்'' என்று அவன் சொல்ல முகத்தை சிலுப்பினாள் கௌசிகா.
 "இன்னும் மூணு மாதத்தில் ஷவர்பாத் வைக்காட்டி நானு எங்கம்மா வீட்டுக்குப் போயிருவேன் ஆமா'' என்று ஒற்றை விரலைக்காட்டி அவனை மிரட்டினாள்.
 "இப்ப காட்டுல நிறைய வேலையிருக்கு ஒரு ஆறு மாதம் பொறுத்துக்கோ'' என்று தங்கராசு கெஞ்ச,
 " அதெல்லாம் முடியாது'' என்றாள் கௌசிகா பிடிவாதத்துடன்.
 அன்று இரவு அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, "என்ன கௌசி காப்பிப் போட, சமையல் வைக்கன்னு எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு வந்தயா?'' என்று தங்கராசு பயத்தோடு தன் மனைவியிடம் கேட்டான்.
 அதைப்பற்றி காதிலேயே வாங்காமல், "நான் என்ன கொண்டு வந்திருக்கேன் பாத்தீகளா?'' என்று சூட்கேஸிலிருந்து ஒரு ரேடியோவை எடுத்து அவன் முன்னால் வைத்து ஆன் பண்ணினாள் உடனே அதில்,
 "தொட்டு விட , தொட்டுவிடத் தொடரும்..., கைப்பட்டு விட பட்டுவிட மலரும்...' என்று பாட்டு கேக்க தங்கராசு மயங்கினான்.
 ஏற்கெனவே அவனுக்குப் பாட்டுக் கேட்க ரொம்பவும் பிடிக்கும். ஆனால் அதற்கெல்லாம் அந்தக் கிராமத்திலே வாய்ப்பில்லை. சித்திரை மாதத்தில் வரும் பொங்கத் திருவிழாவுக்கு மட்டுமே மந்தையில் ரேடியோ கட்டி பாட்டு போடுவார்கள். ஊர்ப் பொங்கல் என்பதால் அதைக் கேட்க ஊரின் இளவட்டங்களுக்கு அவ்வளவாக நேரம் இருப்பதில்லை.
 "ரொம்ப நல்லா இருக்கு கௌசி, அதிலயும் இந்தப் பாட்டு எனக்குப் பிடிக்கும்'' என்று தங்கராசு சொல்லவும்.
 "உக்கும்..'' என்று உதட்டைச் சுழித்த கௌசிகா, "என்னையும்தான் உங்களுக்குப் பிடிக்கும்ன்னு சொல்றீங்க.. ஆனா எனக்கான வசதி எதையும் செஞ்சி தர மாட்டீங்க'' என்றாள் பொய்யான கோபத்தோடு.
 கொளசிகாவின் உதட்டுச் சுழிப்புக்கே கிறங்கிப்போனான் தங்கராசு, கிராமத்திலிருக்கும் பெண்கள் இந்த மாதிரியெல்லாம் அழகு காட்டுவதில்லை. தானுன்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார்கள். தேவையென்றால் மட்டுமே பேசுவார்கள்.
 அதனால், "அவளின் தோளை அணைத்தவாறு உனக்கு எல்லா விதத்திலேயும் வசதி செய்யணுமின்னுதேன் நினைக்கேன். ஆனா, முடியல இது கிராமம் கொஞ்சம், கொஞ்சமாத்தேன் வசதி செஞ்சி தரமுடியும். நீ கொஞ்சம் பொறுத்துக்கணும்''.
 "நீங்க நாலு வருசத்துக்குக் கூட இழுத்து அடிப்பீங்க அதுவரைக்கும் என்னால காத்திருக்க முடியாது'' என்றாள். அவள் குரலில் கண்டிப்பும், அதிகாரமும் இருந்தது.
 "சரி கௌசி, காப்பிபோட , சோறு காய்ச்சன்னு எல்லாம் உன் அம்மா வீட்டுல கத்துக்கிட்டு வந்தயா?''
 "என் அம்மா காப்பிப் போட சொல்லிக் கொடுத்ததோட அதுக்காக ஸ்டவ்வும் வாங்கிக் கொடுத்திருக்காங்க. அதனால நானே காப்பிப் போட்டு குடிக்கதுமில்லாம, வென்னியும் போட்டு குளிச்சிருவேன்'' என்றாள் பெருமையாக. "ஆனா, மண்ணெண்ணெய்ய நீங்கதான் வாங்கித் தரணும்'' என்றாள்.
 "அப்பாடா' என்று நிம்மதியாக பெருமூச்சுவிட்டான் தங்கராசு.
 "சரி சோறு, குழம்பு?''
 "அது இன்னும் தெரியலைங்க.. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கிட்டு இருக்கேன். ஏன் இங்கதான் சோறு ஆக்குறாங்கள்ல்ல. பிறகென்னவாம்''.
 "இருந்தாலும், அடுப்பு வேலய நீ பாத்துக்கிட்டா நாங்க காட்டுல இன்னும் கொஞ்சம் கூட வேல பாக்கலாமேன்னு கேட்டேன்''.
 "அந்த யோசனையெல்லாம் விட்டுருங்க எனக்கு அப்படியெல்லாம் வேலை செய்யத் தெரியாது'' என்றாள் எச்சரிக்கையோடு.
 மறுநாள் காலை கௌசிகாவே எழுந்து காப்பிப் போட்டு குடித்துவிட்டு அவளே, வென்னியும்போட்டு குளித்துவிட்டு வந்தாள். அவளுக்கு நிறைய முடி என்பதால் காற்றலைக்கு முடி அவள் முகத்தின் மீது பறந்து அலைபாய்ந்தது. பவுடர் பூசியதும் முகத்தில் மஞ்சள் வர்ணம் காட்டியது. மெல்லி வாயில் சேலை, நடு நெற்றியில் சிவந்த குங்குமத்தில் அவள் அழகு கூடியது. கண்களில் இமைகளுடன் சேர்ந்த மை தீட்டப்பட்டதில் கௌசிகாவை நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருந்தது தங்கராசுவுக்கு.
 குளித்து அலங்காரம் பண்ணிக் கொண்டு வெளியே வந்த கௌசிகா புருஷனைத் தேடினாள். தங்கராசு துடைக்குமேல் தூக்கிக் கட்டிய வேட்டிக்கட்டும், தலையில் தலைப்பாவுமாய் வெற்று உடம்போடு மாடுகளுக்காக படப்பில் கூளம் பிடுங்கிக் கொண்டிருந்தான்.
 - தொடரும்..
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com