கல்வியோடு, கலைகளையும் போதிக்கும் அரசுப் பள்ளி!

கற்கை நன்றே... கற்கை நன்றே... பிச்சை புகினும் கற்கை நன்றே. கல்வியின் அவசியத்தை இந்த வரிகளை விடவும் அழுத்தமாக வேறெந்த சொற்களாலும் கூறி விட முடியாது.
கல்வியோடு, கலைகளையும் போதிக்கும் அரசுப் பள்ளி!

கற்கை நன்றே... கற்கை நன்றே... பிச்சை புகினும் கற்கை நன்றே. கல்வியின் அவசியத்தை இந்த வரிகளை விடவும் அழுத்தமாக வேறெந்த சொற்களாலும் கூறி விட முடியாது. இதனால்தான் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கடன் பட்டாவது படிப்புக்குச் செலவிட பெற்றோர் ஒருபோதும் தயங்குவதில்லை. இப்படியான சூழலில், தரமான கல்வி, தனித்துவம், கணினி மயம், இலவச திறமை வளர்ப்புப் பயிற்சி என பல்வேறு சிறப்பம்சங்களோடு, தனியார் பள்ளிகளுக்கு சவால் விட்டும், அரசுப் பள்ளிகளுக்கு முன் மாதிரியாகவும் மார்தட்டி நிற்கிறது மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி.
 கோவை, பீளமேடு அவிநாசி சாலையில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் உள்ளது மசக்காளிபாளையம். 1956- ஆம் ஆண்டு துவக்கப் பள்ளியாக தொடங்கப்பட்ட இப்பள்ளி,1966 - இல் நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
 தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கிய பிறகு மற்ற அரசுப் பள்ளிகளைப் போலவே இந்தப் பள்ளிக்கும் மாணவர் சேர்க்கை பாதியாகக் குறைந்தது. இப்படியான சூழலில்தான் 2017-ஆம் ஆண்டு பள்ளியின் தலைமை ஆசிரியையாக க.மைதிலி பொறுப்பேற்றார். பணிக்கு வந்தோம், சம்பளம் வாங்கினோம், ஊதிய உயர்வுக்கு காத்திருப்போம் என்ற சராசரி ஆசிரியையாக இல்லாமல், தான் பணியாற்றும் பள்ளியை மேம்படுத்த நம்மால் இயன்றதைச் செய்வோம் என்ற எண்ணத்தை சக ஆசிரியர்கள் மனதில் விதைத்தார் இவர்.
 முதல் முயற்சியாக இங்கு பணிபுரியும் 8 ஆசிரியர்கள் தங்களின் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி பள்ளிக் கட்டடங்களுக்கு வண்ணம் தீட்டி அழகுபடுத்தினர். அடுத்ததாக மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதன் பலனாக 2018-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்தது. ஊருக்கு மட்டுமே உபதேசம் என்றில்லாமல் இப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றும் லதா, இதே பள்ளியில் தனது மகள் இருவரையும் சேர்த்து மற்ற அரசு ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
 இங்கு, கணித ஆசிரியையாகப் பணியாற்றும் சுகுணா, மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்க வழிகாட்டியாக செயல்படுகிறார். ரயிலில் வீணாகும் நீர், கழிவுகளை விவசாயத்திற்குப் பயன்படுத்தும் செயல்முறை குறித்த இவரது அறிவியல் படைப்பு,கோவை மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு பெற்றது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் மூன்றாம் பரிசு பெற்றது.
 பொருளுதவி, நிதியுதவியைக் கடந்து, தன்னார்வலர்கள் பலரும் தாங்களாகவே முன் வந்து மாணவர்களின் திறமையை வளர்க்கப் பேருதவி புரிகின்றனர். அந்த வகையில், மாணவ, மாணவியருக்கு திங்கள் முதல் வெள்ளி வரை தினமொரு பயிற்சியாக யோகா, மேற்கத்திய நடனம், பொம்மலாட்டம், பாரம்பரிய விளையாட்டுகள், கராத்தே, பறை, அபாகஸ், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு கலை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பயிற்றுநர்கள் இந்தப் பயிற்சியை இலவசமாக கற்பித்துத் தருவது குறிப்பிடத்தக்கது.
 இப்பள்ளியின் அனைத்து வகுப்புகளும் கணினிமயமாக்கப்பட்டு, இணையதள இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளிலும் கணினி வசதியுடைய ஒரே மாநகராட்சிப் பள்ளி இதுதான். ஸ்மார்ட் வகுப்பறைகளும், அரிய புத்தகங்கள் அடங்கிய நூலகமும் இப்பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்த வரப் பிரசாதம்.
 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு மாணவர் சேர்க்கையின்போதே பள்ளியில் அதற்கான படிவங்களும் பூர்த்தி செய்யப்படுகின்றன. ஆண்டுச் சந்தா பள்ளியில் இருந்து செலுத்தப்படுகிறது. இந்த திட்டம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் பள்ளியின் மீதுள்ள மதிப்பையும் உயர்த்தியுள்ளது.
 இது குறித்து தலைமை ஆசிரியை க.மைதிலி கூறியதாவது:
 "எங்கள் பள்ளியின் முன்னேற்றத்துக்கான ஒவ்வொரு முயற்சிக்கும் என்னோடு பணிபுரியும் சக ஆசிரியர்கள், மாநகராட்சி கல்வி அதிகாரிகள், பெற்றோர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அளப்பரியது. குறிப்பாக தன்னார்வலர்கள் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் நிறைய சேவையாற்றி வருகின்றனர். அவர்களின் உதவியால்தான் இன்று கணினி மயம், காப்பீட்டுத் திட்டம், கலை வகுப்புகள், தனித்திறமை பயிற்சிகள் உள்ளிட்ட சிறப்புகள் பள்ளியில் சாத்தியமாகி உள்ளன. கல்வியையும் தாண்டி பல நல்ல, புதிய அறிவார்ந்த விஷயங்களை மாணவர்களிடையே கொண்டு சேர்க்க நாங்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறோம்'' என்றார்.
 வெ.செல்வகுமார்.
 புகைப்படம் - வி.பேச்சிக்குமார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com